மதுரா நாயகா.. (33)
மதுராவுக்குத் திரும்பிய அக்ரூரர், கண்ணனையும், பலராமனையும் சந்தித்து, தான் கேட்டறிந்த மற்றும், கவனித்த அனைத்து விஷயங்களையும் கூறினார்.
கண்ணன் ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரித்தான். பின்னர் சமயம் வரும்போது உதவி செய்வோம். என்று கூறி, அக்ரூரரை அனுப்பி வைத்தான்.
இவ்வாறு நாள்கள் ஓடின. கம்சனுடைய மனைவிகளான அஸ்தி, பிராப்தி இருவரும் கணவன் இறந்த பின், தந்தையான ஜராஸந்தன் வீட்டுக்குச் சென்றனர்.
கண்ணனால் தங்கள் கணவருக்கு மரணம் ஏற்பட்டதென்று புலம்பினர்.
வாழ்வை இழந்து வந்து நிற்கும் மகள்களைப் பார்த்ததும் ஜராஸந்தனுக்கு கண்ணன் மீது கோபம் தலைக்கேறியது.
பூமியில் யாதவர்களே இல்லாதவாறு செய்கிறேன் என்று சூளுரைத்துக்கொண்டு, இருபத்து மூன்று அக்ஷௌஹிணி சேனையுடன் மதுராவை நான்கு புறங்களிலும் சூழ்ந்து முற்றுகையிட்டான்.
பொங்கியெழும் கடலைப் போன்ற சேனை நாற்புறமும் சூழந்தது கண்டு மதுரா மக்கள் கலங்கினர்.
கண்ணன் பலவாறு யோசித்து, ஜராஸந்தனை மட்டும் உயிரோடு விட்டு, படைகள் முழுவதையும் அழிக்கலாம். அவர்கள் அனைவரும் அரக்கப் படைகள். ஜராஸந்தனை அவமானப் படுத்தி அனுப்பினால், மீண்டும் படைகளைத் திரட்டிக்கொண்டு வருவான். இங்கிருந்தபடியே பூபாரத்தைக் குறைக்கலாம் என்று யோசித்தான்.
இவ்வாறு கண்ணன் யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஆகாயத்திலிருந்து சூரியன்போல் ஒளிவீசிக்கொண்டு இரு ரதங்கள் தேரோட்டிகளுடனும், போர்க்கருவிகளோடுகளும் கண்ணன் முன் வந்திறங்கின.
அவற்றில் பகவானின் சுதர்சனம் உள்பட, பகவானின் அனைத்து திவ்ய ஆயுதங்களும் இருந்தன.
கண்ணன் பலராமனிடம்
அண்ணா! பூபாரத்தைக் குறைப்பதற்காக விண்ணிலிருந்து தங்களுக்கான ஆயுதங்கள் வந்திறங்கியுள்ளன. துன்பத்திலிருந்து மக்களைக் காப்பது நமது பொறுப்பு. என்றான்.
பலராமனும் ஆமோதிக்க, இருவரும் தேரிலேறிப் புறப்பட்டனர். அவர்கள் இருவரும் கோட்டை வாசலை அடைந்ததும், கோட்டைக் கதவுகளை அடைத்துவிட்டு தனியிருவராய், கடல் போன்ற சேனையின் முன் நின்றனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment