ப்ருந்தாவனமே உன் மனமே

ஸ்ரீ மத் பாகவதம் துவங்கும்போதே ஸ்ரீ சுகர் கதை கேட்பதற்காக இரு வகையானவர்களை அழைக்கிறார்.
ரஸிகா: பு⁴வி பா⁴வுகா: என்று.

ரஸிகா: என்பது ரசிக ஜனங்கள். அதாவது கதையைக் கேட்கும்போது அதன் சுவையை மூன்றாம் இடத்திலிருந்து ரசிப்பவர்கள். இது காம்பீர்ய ரஸம், ச்ருங்கார ரஸம், வாத்ஸல்யம் என்று அனுபவிப்பவர்கள்.

பாவுகா: என்பவர்கள் கதையின் ஒரு பாத்திரமாகவே மாறிவிடுபவர்கள்.

இவ்வாறு கதை கேட்டவர்கள் யார் யார் என்று பார்த்தால் பகவானே கேட்டிருக்கிறான். ராமன், கண்ணன், குலசேகர ஆழ்வார், தியாகராஜர், ஆண்டாள், மெலட்டூர் பாகவதர், இன்னும் பலரும் கதைக்குள்ளேயே ஒரு பாத்திரமாகி, அதற்கேற்ப நடந்துகொள்வர்.

ராமன் குச லவர்கள் சொல்லும் கதையைக் கேட்கும்போது, தான் அரசன் என்பதையும், அக்குழந்தைகளின் தந்தை என்பதையும் மறந்து, ராமாயணத்தின் ஒவ்வொரு பாத்திரமாகவும் மாறி அழுது அழுது கதை கேட்டார் என்று வரும்.

கண்ணனுக்கு ராமாயணத்தை யசோதை சொல்லும் போதெல்லாம் ராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு கிளம்பும் கட்டத்தில் வேகமாகச் சொல்வாளாம். இல்லையெனில் கண்ணன் முந்தைய அவதாரம் என்பதை மறந்து, சினம் கொண்டு அப்போதே போருக்குத் தயாராவானாம்.

குலசேகர ஆழ்வாரும் அப்படியே. அரசனாக இருப்பினும் அவரது சபையில் மந்திரிமார்களுக்கு பதில் பாகவதர்களே நிரம்பியிருந்தனர். எப்போதும் கதை கேட்டுக்கொண்டே இருப்பார். ராவணன் சீதையைக் கவரும் சமயம், காட்டுக்கு ஏகும் சமயம், கரதூஷணர்களுடன் செய்த யுத்தம் போன்ற கட்டங்களை பௌராணிகர்கள் வேகமாகச் சொல்வார்கள். இல்லையென்றால் அரசன் ராமனுக்கு உதவுகிறேன் என்று படை திரட்டிக்கொண்டு கிளம்பிவிடுவான் என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஆண்டாளுக்காக கண்ணன் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் இருந்த ஏரியையே யமுனையாக மாற்றினான். பெரியாழ்வாரிடம் அப்படிக் கதை கேட்டு கேட்டு அரங்கனையே மணந்தவளாயிற்றே.

ராமாயணத்தில் ராமன் காட்டுக்குக் கிளம்பும் சமயம், அவனைத் தடுக்க கௌசல்யை, ராமா என்னையும் அழைத்துப்போ. அல்லது இங்கேயே இரு. அரசாங்கத்தில் சாப்பிடவேண்டாம். உஞ்சவ்ருத்தி எடுத்துக்கொண்டு வா. நான் சமைத்துப் போடுகிறேன். உன் பிரிவைத் தாங்க இயலாது என்பாள். உஞ்சவ்ருத்தி க்ஷத்ரிய தர்மம் அல்ல என்று அதை மறுத்து ராமன் வனம் செல்லக் கிளம்புவது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இதைக் கேட்ட
மருதாநல்லூர் ஸத்குருஸ்வாமிகள் எம் அரசன் ராமன். அவன் எதற்காக உஞ்சவ்ருத்தி எடுக்கவேண்டும்? அவனுக்கு பதிலாக நான் எடுப்பேன். வேறெதற்காக இந்தப் பிறவி? என்று சொல்லி அன்று முதல் உஞ்சவ்ருத்தி எடுக்கத் துவங்கினார். 14 வருடங்கள் உஞ்சவ்ருத்தி எடுத்த பின், பட்டத்தை அடுத்தவரிடம் மாற்றிவிட்டு, ஸித்தியானார்.

மெலட்டூர் பாகவதர் நரஸிம்ம அவதாரம் அனுகரணம் செய்யும்போது மேடையிலேயே ஹிரண்யகசிபுவாக நடித்தவரைக் கிழித்துப் போட்டுவிட்டார். கொலை என்று வழக்காகிவிட்டது. வழக்கை விசாரித்த ஆங்கிலேய நீதிபதி, ஒரு முடிவுக்கு வர இயலாமல் தவித்தார். முன் விரோதம் இல்லை, அவர்களைப் பார்த்தால் பொய் சொல்பவராகவும் தெரியவில்லை. ஒரு நாடகத்தில் அந்த அளவிற்கு ஒன்ற முடியுமா என்பதும் புரியவில்லை. எனவே புத்திசாலித்தனமாக, பாகவதரை ராமாயண நாடகம் போட்டு அதில் தசரதர் வேஷத்தில் நடிக்குமாறு கட்டளையிட்டார். தசரதனாக நடித்த பாகவதர் ராமன் காட்டுக்குப் போனான் என்ற சேதி கேட்ட துக்கத்தில் கோர்ட்டில் நிஜமாகவே ராமா ராமா என்று அழுது அழுது பரம பதித்து விட்டார். இன்றைக்கும் மெலட்டூர் பாகவதர்கள் நடிக்கும் நாடகத்தைப் பார்த்தால் அவர்கள் எத்தகைய பாவுகர்கள் என்பது புரியவரும்.

ப்ருந்தாவன பக்தர்கள் அநேகம் பேர் கண்ணன் தங்கள் வீட்டில் வந்து பானையை உடைத்ததாக இன்றளவிலும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான பக்தர்கள் பாவுகர்கள் ஆவர்.

ஆக, சுகாசார்யார் ரசிகர்களையும், பாவுகர்களையும் கதை கேட்க அழைக்கிறார்.

கண்ணன் பிறந்தது முதல் பிருந்தாவனம் செல்லும் வரையிலான லீலைகளை 'திருக்கண்ணன் அமுது' என்ற தலைப்பிலும், அவன் தினசரி நிகழ்த்தும் வெண்ணெய்க்களவுகளை 'உறங்கும் முன்' என்ற தலைப்பிலும், பிருந்தாவனத்தில் மாடு மேய்க்கும் பருவத்தில் நிகழ்த்திய லீலைகளில் சிலவற்றை 'ப்ருந்தாவனமே உன் மனமே' என்ற தலைப்பிலும் அனுபவித்து கண்ணனுடனேயே பாகவதத்தினுள் பயணித்து வந்தோம்.

பிருந்தாவனத்தை விட்டுக் கண்ணனை அனுப்பவேண்டாம் என்ற பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இன்றளவிலும் அவ்வப்போது பிருந்தாவன லீலைகளையே பார்த்து வந்தோம்.
இனி உலக நனமைக்காகவும், அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்யவும் கண்ணன் அக்ரூரருடன் இணைந்து மதுரா செல்லவிருக்கிறான்.

அவனுடன் இடைச் சிறுவனாகவோ, மதுராவின் பிரஜையாகவோ, அல்லது வேறு ஏதேனும் ஒன்றாகவோ இணைந்து நாமும் பயணிப்போம்.

மதுரா நாயகா..

#Mathura

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37