திருக்கண்ணன் அமுது - 37

வெண்ணெய்க் கோலம்

இப்போது நமது கண்ணனுக்கு வீட்டை விட்டு வெளியில் சுற்ற தைரியம் வந்துவிட்டது.

அவனோடு சேர்ந்து விளையாட, அவன் வயதையொத்த குழந்தைகளும் வரத் துவங்கினர். 
வீட்டுத் தோட்டத்திலோ  வாசலிலோ தான் விளையாடவேண்டும், வேறெங்கும் செல்லக்கூடாது என்று யசோதை குழந்தைக்கு சொல்லிக்கொண்டே இருந்தாள். இருப்பினும், அங்கிருக்கும் கோபிகள், மற்றும் காவலர்கள் கண்களை ஏமாற்றிவிட்டு, அக்கம் பக்கத்து தெருக்களிலும் சென்று விளையாட ஆரம்பித்தான் குட்டி கோபாலன்.

தேடிச் செல்பவரகள் அவன் விளையாடும் அழகைப் பார்த்து சிலையாய் நின்று விட்டு பிறகு யசோதையிடம்‌ திட்டு வாங்கிக் கொண்டார்கள்.

ஒருநாள் பக்கத்துத் தெருவில் நண்பர்களோடு ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த கண்ணனுக்கும் மற்ற சிறுவர்களுக்கும்‌ தாகம் எடுத்தது.

தண்ணீர் குடிக்க வீடு வரை சென்றால் மறுபடி யசோதை வெளியே அனுப்பமாட்டாள். எனவே, அந்தத் தெருவிலிருக்கும் ஒரு குழந்தை,

கண்ணா, இது என் வீடுதான். தண்ணி குடிக்கறதுக்காக உங்க வீடு வரை போகவேணாம். எங்க வீட்டிலயே குடிக்கலாம் வா என்றழைத்ததும், பட்டாளத்தோடு அவனது வீட்டினுள் சென்றான் கண்ணன்.

அங்கே அந்தக் குழந்தையின் தாய் காணப்படவில்லை.
மூலையில் அடுக்கடுக்காய்ப் பானைகள், அவற்றில் வெண்ணெய்யும், தயிரும்..

புது வெண்ணெய் போலும், அதன் வாசனை கண்ணனைச் சுண்டியித்தது.

பானை அவனைப் பார்த்து
என்னை வந்து எடுத்துக்கோயேன் 
என்றழைத்தது போலிருந்தது.

நீர் குடிக்க மறந்து, அந்தப் பானையையே பார்த்துக் கொண்டிருந்த கண்ணனிடம் அந்த வீட்டுக் குழந்தை கேட்டான்.

கண்ணா வெண்ணெய் வேணுமா?

ஆமா, ஆனா உங்கம்மாவைக் காணோமே..

என் அம்மா இல்லாட்டா என்ன, நன் தரேன். நீ சாப்பிடு கண்ணா

பானையைத் தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு வந்து கண்ணனிடம் வைத்தான் அவன்.

கண்ணனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தான்.

பானையினுள் கையை விட்டு புது வெண்ணெய்யை வாசனை பிடித்தான். கூட வந்த பட்டாளத்துக்கெல்லாம் ஆளுக்குக் கொஞ்சம் கொடுத்தான். மீண்டும் எடுத்து விரல் விரல்களை வாய்க்குள் விட்டு நக்கி ரசித்து ருசித்து அவன் வெண்ணெய்  உண்ணும் அழகைக் காண கோடிக் கண்கள் வேண்டும்.

வெண்ணெய்யோ கண்ணன் கை பட்டதும் உருகி உருகி வழிந்தது. குழந்தைகள் எல்லாரும் தங்கள் பங்கை உண்டபின், கண்ணனின் முழங்கை வழியாக உருகி வழியும் வெண்ணெய்யைப் பிடித்து நக்க, அது இன்னும் தனிச்சுவையோடு நாவைக் கட்டிப்போட்டது.

அவ்வளவுதான், அதிலிருந்து அந்த கோபக் குழந்தைகள் அனைவருமே கண்ணன் உண்ணும்போது அவன் வாயிலிருந்து கை வழியே உருகி வழியும் வெண்ணெய்யைத்தான் உண்பார்கள்.

ஒரு வழியாய்ப் பானை காலியானதும், அந்தப் பானையைக் கொண்டு கொல்லையில் கிணற்றடியில் போட்டுவிட்டுக் கிளம்பினார்கள்.

உருகி வழிந்த வெண்ணெய் கண்ணனின் உடலில் வழிந்து கால் வரை ஓடி, அவன் நடக்க நடக்க அவனது பாதங்கள் வெண்ணெய்க் கோலமிட்டன.

அந்த வெண்ணெய்ச் சுவடுகளில் அவனது பாதங்களில் இருந்த சங்கு, சக்ர, த்வஜ, அங்குச ரேகைகள் பதிந்திருந்தன.

இதன் நினைவாகத் தான் இன்றும் ஜென்மாஷ்டமி அன்று நாம் வீடுகளில் கண்ணனின் பாதச் சுவடுகளை மாக்கோலமாய்ப் போடுகிறோம்.

எங்கோ வெளியில் சென்றுவிட்டுத் திரும்பிய கோபி வீடு முழுவதும் இருந்த  வெண்ணெய்க் கோலத்தைப் பார்த்து திகைத்து நின்றாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37