திருக்கண்ணன் அமுது - 33

தேடி தேடி வெண்ணெய்..

வெண்ணெய்ப் பானைகளும், தயிர்ப் பானைகளும் உள் அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டன.

அவ்வப்போது யசோதையிடம், மற்றவர்களிடமும் கேட்டு வாங்கிக் கொண்டாலும், அது போதவில்லை கண்ணனுக்கு.
வெண்ணெய்யின் சுவையை நினைத்து நினைத்து ஏங்கினான்.

பானைகளை எங்கே ஒளித்துவைக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம்.

எப்போது பார்த்தாலும் யாராவது பெரியவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் குழந்தைகளின் அருகில் இருந்ததால் தன்னிச்சையாக எங்கும் சுற்ற முடியவில்லை.

இப்போது யசோதையே அதற்கும் வழி வகுத்தாள்.

கண்ணா... ஒளிந்துகொண்டு குரல்கொடுத்தாள்.

குரல் வந்த திசையில் அன்னையைத் தேடித் தேடி ஓடி ஒரு கதவின் பின்னால் கண்டதும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அம்மா, இந்த விளையாட்டு நல்லா இருக்கு.

நான் ஒளிஞ்சுக்கறேன்‌. நீ கண்டுபிடி.

தூணுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டான். அவனது பீதாம்பரம் அசைவது நன்றாகத் தெரிந்தாலும், தெரியாததுபோல் குழந்தையை அங்குமிங்கும்  தேடினாள். அம்மா தன்னைத் தேடி அலைகிறாள் என்று குழந்தைக்கு ஒரே குஷி. சற்றுநேரம் தேடுவதுபோல் தேடிவிட்டு  கண்டுபிடித்தாள்‌ கண்ணனை.
இதோ..

கலகலகலவென்று ஒரே சிரிப்புச் சத்தம்.

சற்று நேரம்‌ இவ்வாறு விளையாடிவிட்டு யசோதை உள்ளே சென்றாள்.

பலராமனும் கண்ணனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
அங்கிருந்த தாதிப் பெண்ணிடம், 

அம்மா..
 இப்ப அம்மா விளையாடின மாதிரி விளையாடலாமா?

 விஷயம் புரியாமல் அவள் சந்தோஷமாய்த் தலையசைத்தாள்.

நாங்க ரெண்டு பேரும் ஓளிஞ்சுக்கறோம். நீங்க கண்டுபிடிங்க என்று சொல்லிவிட்டு ஆளுக்கொரு திக்கில் தெறித்து ஓட, அவள் பாவம் கண்ணை மூடிக்கொண்டாள்.

வீட்டின் எல்லா அறைகளிலும் பதுங்கி பதுங்கி நுழைந்து தேடியாயிற்று. 
ம்ஹூம்..பானைகள் இருக்குமிடம் தெரியவில்லை.

வெண்ணெய் மட்டும் கண்ணனைக் காண ஏங்காதா என்ன?

அப்போது புதிதாய்க் கடைந்த தயிரை வைப்பதற்காக ஒரு கோபி எடுத்துச் சென்றாள்.

அவளைப் பின்தொடர்ந்து ஓசைப்படாமல் சென்றால்..

அங்கே நூற்றுக்கணக்கான பானைகள். 
தயிரும் வெண்ணெய்யும் நிரம்பிய பானைகள்.
கண்ணசைத்து கண்ணனை வாவென்றழைத்தன.

வராகமாய் அவதாரம் எடுத்து பூமியைத் தேடிக் கண்டுபிடித்த போது கூட அவ்வளவு சந்தோஷப்பட்டானா தெரியாது.
வெண்ணெய்ப் பானைகளைப் பார்த்ததும் கண்ணனின் கண்கள் பெரிதாய் விரிந்தன. ஆயிரம் இதழ் தாமரை போல் முகம் மலர்ந்தது..

இங்க இருக்கு...

ம்ம்.

உஷ்..

அந்த கோபி போகட்டும்..

தயிர்ப்பானையைக் கொண்டு வந்த கோபி அதை உள்ளே வைத்துவிட்டுச் சென்றாள்.

இருவரும் சேர்ந்து தரையில் இருந்த  பானைகளைக் கபளீகரம் செய்யத் துவங்கினர்.

கண்ணாமூச்சிக்காக கண்ணைப் பொத்திக் கொண்டிருந்த கோபி பத்து வரை எண்ணியபின் குழந்தைகளைத் தேட ஆரம்பித்தவள்தான்.. மணிக்கணக்காய்த் தேடிக்கொண்டிருக்கிறாள் பாவம்.. 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37