திருக்கண்ணன் அமுது - 32
அண்டம் உண்ட வாயன் அன்னம் உண்ட கதை
காலை முதல் இரவு வரை வீட்டில் கலீர் கலீரென்று இரு குழந்தைகளின் கொலுசுச் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது.
கண்ணனுக்கு உணவு கொடுப்பது பெரும்பாடாயிற்று. பலராமன் அன்னையைப் படுத்தவேண்டாம் என்று சமத்தாக சாப்பிட்டுக் கொண்டான். அதைவிட, அவனுக்கு தான் படுத்தி நேரத்தை வீணடிப்பதை விட, கிடுகிடுவென்று தன் வேலைகளை முடித்துக்கொண்டு கண்ணனை ரசிப்பதில் ஆர்வம் ஆதிகம்.
இந்த இடைச்சிகளைச் சொல்லணும். பாவம் குழந்தைன்னு போக வர ஆளுக்கொரு துளி வெண்ணெயை குழந்தைகளோட நாக்கில் ஈஷிவிட்டு, அதுகளை வெண்ணெய்ச் சுவைக்கு நல்லாப் பழக்கிவிட்டார்கள். என்று யசோதை திட்டாத வேளையே இல்லை.
கண்ணைக் காட்டும்போதெல்லாம், கடந்து செல்லும் யாராவது ஒரு கோபி கண்ணனின் வாயில் துளி வெண்ணெய் கொடுத்தாள்.
வெண்ணெய் என்றால் ஆவென்று வாயைத் திறக்கும் கண்ணன், அன்னம் என்றால் உதடுகளை உள்ளுக்குள் மடித்து மூடிக்கொள்வான்.
அவன் வாயைத் திறப்பதற்கு யசோதை வாய் வலிக்கக் கதை சொல்ல வேண்டியிருந்தது.
கதை கேட்கும்போது தன்வயப்பட்டு அவனது செப்பு வாயைக் குட்டிக் குருவிபோல் திறப்பான்.
அவனுக்குச் சொல்வதற்காக யசோதை நிறைய புதுப்புதுக் கதைகளை வைத்திருந்தாள்.
இருந்தாலும் அவன் விரும்பிக் கேட்பது ராமாயணம்தான்.
கண்ணா மம்மு சாப்பிடலாமா?
வேணாம்மா
நீ சமத்தா சாப்பிட்டா முடிச்சதும் உனக்கு அம்மா வெண்ணெய் தருவேனாம்.
இப்பவே குடும்மா..
சாப்பிட்டாத்தான் தருவேன்.
வெண்ணெய்யை என் எதிர்க்க வைம்மா. பாத்துண்டே சாப்பிடுவேன்.
ஒரு வாய் வாங்கிக்கொண்டதும்,
அம்மா வெண்ணெய்..முடிச்சதும் தரேன். இன்னொரு வா ஆகாட்டு..
ஒவ்வொரு வாய்க்கும் வெண்ணெய் வெண்ணெய் என்று கண்ணன் கேட்க, அவனை மறக்கச் செய்வதற்கு கதையை ஆரம்பித்தாள்.
ஒரு ஊர்ல
ம்ம்
ஒரு மஹாராஜா இருந்தார்..
ம்ம்
அம்மா மஹாராஜா ன்னா யாரு?
மஹாராஜான்னா, அவர்தான் எல்லாரையும் பாத்துப்பார். உங்கப்பா மாதிரி..
ம்ம்
அவர் பேரு
ம்ம்
தசரதர்
ம்ம்
அவருக்கு மூணு மனைவிகள்..
அம்மா மனைவிகள்னா?
அப்பாவுக்கு நான் மனைவி. அதுமாதிரி அவருக்கு ..
ம்ம்
அப்பாவுக்கு நீ மட்டும்தானே இருக்க.. அவருக்கு ஏன் மூணு?
நீ கதையைக் கேளுடா...
ம்ம்
ரொம்ப நாளா அவங்களுக்கு பாப்பாவே பொறக்கலையாம்.
ம்ம்
அதனால,
ம்ம்
அவர் ஒரு யாகம் பண்ணினாராம்
ம்ம்.. யாகம்னா?
மாசாமாசம் நம்ம வீட்டில உன் நக்ஷத்திரத்துக்கு அக்னி வளர்த்துப் பண்றோமே...
ம்ம்
அந்த மாதிரி..
ம்ம்
அந்த யாகத்தில ரொம்ப சந்தோஷமாகி
ம்ம்
யாககுண்டத்திலேர்ந்து ஒரு உம்மாச்சி வந்தாராம்..
ம்ம்
அவர் ஒரு பாயசக்குடம் கொடுத்தாராம்.
ம்ம்
தசரதர் அதை
ம்ம்
மூணு மனைவிகளுக்கும் கொடுத்தாராம்.
ம்ம்
மூணு பேருக்கும் அழகழகா நாலு குட்டிப்பாப்பா பொறந்ததாம்.
ம்ம்
சற்று யோசித்துவிட்டு கண்ணன் கேட்டான்.
அம்மா மூணு அம்மாவுக்கு எப்படி நாலு பாப்பா?
ஒரு அம்மாவுக்கு மட்டும் ரெண்டு பாப்பா..
கௌசல்யை அம்மாவுக்கு ஒரு பாப்பா பொறந்ததா?
ம்ம்
அந்தப் பாப்பா பேர் ராமன்..
கைகேயி அம்மாவுக்கு?
இந்தக் கதையை தினமும் எத்தனை முறை சொன்னாலும் சலிப்பின்றிக் கேட்கும் கண்ணன் சொன்னான்..
பரதன்..
சுமித்ரா அம்மாவுக்கு? யசோதை கேட்டாள்
லச்சுமணன், சத்ருக்னன்
என்று சொல்லி கை கொட்டி கண்ணன் சிரிக்க, பலராமனும் சேர்ந்து சிரிப்பான்.
அன்னம் தீர்ந்துவிட்டிருக்கும். மறக்காமல்
அம்மா சாப்பிட்டு முடிச்சா வெண்ணெய் தரேன்னு சொன்னியே.. என்று அதையும்கேட்டு வாங்கி விழுங்குவான் அந்த அண்டம் உண்ட வாயன்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment