திருக்கண்ணன் அமுது - 31

நடக்கும் நாடகம்

ஈரடிகளால், மண்ணையும், விண்ணையும் அளந்தவன், இன்று பிடித்துக்கொள்ளாமல் இரண்டடிகள் வைக்க முடிந்ததை எண்ணிப் பெருமிதம் கொண்டான். 

பலராமன் கண்ணனை விடச் சில‌மாதங்கள்‌ பெரியவன்.
இறைவன் எந்நிலையிலிருந்தாலும்‌ அதற்குத் தகுந்தபடி சேவை செய்யும் முதல்வன். முந்தைய அவதாரத்தில் அவனுக்கு கிட்டிய கைங்கர்யத்தால் மிகவும் களிப்புற்றிருந்தான். மீண்டும் அப்படி ஒரு வாய்ப்புக்காக ஏங்கிக் கிடந்தான். 

ஏனெனில் வைகுண்டத்தில் இருந்தால், அரவணையாய் இருப்பதோடு வேலை முடிந்துவிடும். அவதாரம் என்றால், அருகிலேயே இருந்து அத்தனை விதமான பணிவிடைகளும்‌ செய்யலாம். சுவை கண்டுவிட்டானல்லவா? அதனால் அவசரப்பட்டுவிட்டான். 

இறைவனுக்குத் தொண்டு செய்ய விரும்புபவர்கள் பூமியில் சென்று வசுதேவர் வீட்டில் பிறக்கலாம் என்று  ப்ரும்மா சொன்னவுடன், சற்றும் யோசிக்காமல் அவசர அவரமாக அனந்தன் இறங்கி வந்ததால், கண்ணனுக்கு முன்னால் தேவகியின் வயிற்றில் புகுந்து விட்டான். கண்ணன் அவனை தேவியை வைத்து, ரோஹிணியின் வயிற்றுக்கு மாற்றிவிட்டுப் பிறகு பிறந்ததால் கொஞ்சம்‌ தாமதமாகிவிட்டது. எனவே,‌ பலராமன் இப்போது கண்ணனின் அண்ணனாகினான். 
ஆனாலும், கண்ணனை ரசிப்பதில் அவனை விஞ்ச ஆளில்லை. 

குட்டிக் கண்ணன் எட்டி நடந்ததை வாயில் இற்றுச் சொட்ட ஆவென்று  நிலை மறந்து வேடிக்கை பார்த்தான். பிறகு அன்னையர் வந்து தூக்கிச் சென்றுவிட்டனர். 

இப்போது கண்ணன் மறுபடி நடக்க முயற்சி செய்யும்போது, பலராமனை இன்னும் என்ன உட்கார்ந்து கொண்டிருக்கிறாய் என்பதுபோல்  பார்க்க, அவனும் பிடித்துக்கொண்டு நின்றான். இருப்பினும், கண்ணனைப் போல் அவனுக்கு நடக்கும் நாடகத்தை நடத்தத்  தெரியவில்லை. 

கண்ணன் மெல்ல மெல்ல முயற்சி செய்யும்போது, இவன் சற்று வேகம் வேகமாய் அடி வைத்து, விழுந்து, எழுந்து, இருவரும்‌ சிரித்து..
அப்பப்பா..

கண்ணனின் நடையழகை யானையின் நடையோடு ஒப்பிடுகிறார் ஆழ்வார்..
எப்படி?

யானையின் மேல் சங்கிலிகளும், மணிகளும் கட்டப்பட்டிருக்கும். அது நடக்கும்போது  சலார் பிலாரென்று சத்தமிடும். கண்ணனின் இடுப்பில் யசோதை கட்டிவிட்டிருக்கும்  சலங்கைகளும்‌ கிண்கிணிகளும் அவன் நடக்கும்போது  சலார் பிலாரென்று  ஒலிக்கின்றனவாம்.

நன்கு வளர்ந்த யானைக்கு  மதநீர் சொட்டிக் கொண்டேயிருக்கும். கண்ணனுக்கும் கடைவாயில் இற்றுச் சொட்டுகிறதாம்.

யானை அசைந்தசைந்து நடப்பது போல் கண்ணனும் அசைந்தசைந்து நடக்கின்றானாம்.

தெருவில் யானை சென்றால், மிகவும் கம்பீரமாக நடக்கும். பெரியவர் முதல்‌ சிறியவர் வரை அனைவரும் யானை யானை என்று அதன் நடையழகைப் பார்த்துக் கொண்டே‌ அதன் பின்னால்‌ செல்வார்கள். ஆனால் அது யாரையும் கவனிக்காமல்‌ போய்க்கொண்டே இருக்கும். அதுபோல் ஆராவமுதனான கண்ணன் தளர் நடை நடப்பதை அனைவரும் வியந்து வியந்து பார்க்க, அவனோ ஒருவரையும் கவனியாதவன்போல்  கம்பீர‌முகம் காட்டிக்கொண்டு நடக்கிறானாம். 

ஒரு வழியாய் இரண்டு மூன்று நாட்களிலேயே, இருவரும்  நடக்கப் பழகிக்கொண்டார்கள். 

எண்ணெய்க் குளியலுக்கு உதவிக்கு வந்த கிழவி ஒருத்தி யசோதையை எச்சரித்துவிட்டுப் போனாள்.

தவழும்போதே இரண்டு குழந்தைகளும் ரொம்ப விஷமம். எட்டு மாசம்கூட ஆகல, கண்ணனுக்கு.  ரொம்ப சீக்கிரம் நடக்கப் பழகிட்டா, அவ்ளோதான். உனக்கு அவன் பின்னாடி ஓடத்தான் சரியா இருக்கும். பானையெல்லாம் உடைஞ்சா காலில் குத்திடும். நீ மத்த வேலைக்கெல்லாம் ஆளைப்போட்டுட்டு குழந்தையை மட்டும் பார். அவள் சொன்னதென்னவோ முக்காலும்‌ உண்மை.

பானைகள் உடைவதை விட, குழந்தைகளின் கால்களில் சில்லுகள் குத்திவிடப்போகிறதே என்று மிகவும் கவலை கொண்டார்கள். வீட்டுப் பெரியவர்கள்.

எவ்வளவு பானைகளைத்தான் உறியில் கட்டி வைப்பார்கள். எனவே, எல்லாப்‌பானைகளையும் மூன்றாம்‌ கட்டிலிருக்கும் அறையில் வைத்துவிட்டு, குழந்தைகள்‌ அங்கு சென்றுவிடாமல், கவனமாகப் பார்த்துக்கொள்ளத் துவங்கினார்கள்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37