திருக்கண்ணன் அமுது - 30

வித்தை வித்தை

கோபியரின் அன்பில் கண்ணன்‌‌  முழுவதுமாக நனைந்துகொண்டிருந்தான்.

ஒருநாள்  சுவற்றைப் பிடித்து எழுந்து நின்ற‌ கண்ணன் மெதுவாக ஒரு கையை சுவற்றிலிருந்து எடுத்தான்.

பலராமன் கிடு கிடுவென்று தவழ்ந்து வந்து கண்ணன் காலைப்‌பிடிக்க, பொத்தென்று உட்கார்ந்து விட்டது குழந்தை. 

கலகலவென்று சிரித்தார்கள் இருவரும். மீண்டும் முயற்சி தொடர்ந்தது. 

யசோதை உள்ளே இருந்தாள். நந்தன் மட்டும் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.  உவகையினால் பேச்சற்றுச் சிலை போல் இருந்தார்.

மெதுவாக மறுபடி எழுந்து சுவற்றைப் பிடித்தான் கண்ணன். பலராமனும் அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தான். 

மெதுவாக ஒரு அடி வைத்தான். இன்னொரு அடி சுவற்றைப் பிடித்துக் கொண்டே வைத்தான். ஒரு கையை சுவற்றிலிருந்து எடுத்தான். திரும்பி பலராமனைப் பார்க்க முயற்சி செய்தான். அவன் பின் பக்கம் இருந்ததால் பார்க்க முடியவில்லை.
 
மறுபடி இன்னொரு அடி வைத்தான். 
இப்போது இன்னொரு கையையும்‌ சுவற்றிலிருந்து எடுத்தான். மூவுலகம் அளந்த  கால்கள் கிடுகிடுவென்று ஆடின. இரண்டு கைகளையும் முன்னால் நீட்டிக்கொண்டு இன்னொரு காலை எடுத்து வைக்க முயலும்போது

ம்ஹூம்..

பொத்தென்று உட்கார்ந்தான்.
விழுந்தது அவமானமாம் அவனுக்கு. யாராவது பார்க்கிறார்களா என்று தலையைத் திருப்பிப் பார்த்தான். விழுந்ததைப் பார்த்தால் குழந்தை வீறிட்டு அழும் என்பதால் நந்தன் பார்க்காததைப் போல் திரும்பிக் கொண்டார். பலராமனைத் தவிர யாருமில்லை.

ஆனால், முப்பத்து முக்கோடி தேவர்களும், மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு காலைத் தூக்கி ஸத்ய லோகம் வரை அம்பரத்தை ஊடறுத்து அளந்தவன் இப்போது இரண்டு பாதங்களால்  பிடித்துக் கொள்ளாமல் நிற்க முயற்சி செய்கிறான். தேவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

என்னதான் செய்கிறான் பார்க்கலாம் என்று வந்தவர்கள், கண்ணன் விழுந்ததைப் பார்த்து விட்டார்கள். அவ்வளவுதான் கொல்லென்று சிரித்து விட்டார்கள்.

வந்ததே கோபம்‌ கண்ணனுக்கு. தலையை நிமிர்த்தி அவர்களைப் பார்த்ததும், தேவர்கள் சற்று பயம் வந்து வாயை மூடிக்கொண்டார்கள்.

உங்களுக்கு இங்கென்ன வேலை? போங்கள் என்பதாய்த் தலையசைக்க, அத்தனை பேரும் சிரிப்பை அடக்கிக்கொண்டு தலையைக் குனிந்துகொண்டார்கள்.

மறுபடி கண்ணன் எழ முயற்சி செய்தான். மெதுவாய் நின்று இரண்டு கைகளையும் விட்டுவிட்டு ஒரு அடி இரண்டு அடி வைத்தே விட்டான். பெருமிதம் பிடிபடவில்லை. கலகலவென்ற அவன் சிரிக்க,‌ சிரிப்புச் சத்தம் கேட்ட யசோதை ஓடி வந்து பார்த்து, அளவிலா‌ மகிழ்ச்சியுற்றாள்.

வாடா கண்ணா வா வா என்று முன்னால் நின்றுகொண்டு அழைக்க, வித்தை வித்தை என்று இன்னும் இரண்டு அடிகள் வைத்தவனால் அதற்குமேல் முடியவில்லை. உட்காரப்போன குழந்தையை ஓடிவந்து தூக்கியணைத்துக்கொண்ட யசோதை, அன்று பால் பாயசம் வைத்தாள்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37