திருக்கண்ணன் அமுது - 26

ஆதிமூலத்திற்குப் பெயர் சூட்டு விழா

தினம் தினம் கண்ணனுக்கு என்ன ஆபத்து வருமோ என்று நந்தன் மிகவும் கவலை கொண்டார். காவலை அதிகப்படுத்திய தோ டு காவலர்களை மிகவும் கவனமாக இருக்கும்படி உத்தரவிட்டார்.

யசோதை மெதுவாய்ப் பேச்சைத் துவங்கினாள்.

நேத்திக்குத் தான் நம் குழந்தை பிறந்த மாதிரி இருந்தது. அதுக்குள்ளே ஒரு மாசத்துக்கு மேலாயிட்டது.

எல்லாரும் அவனை லல்லா, கண்ணா, கான்ஹா ன்னெல்லாம் கூப்பிடறோம். குழந்தைக்கு ஒரு நல்ல நாளாப் பாத்து பேர் வைக்க ஏற்பாடு பண்ணணுமே.

ஆமா யசோதா.  நான் சொல்ல மறந்துட்டேன். நான் கொஞ்ச நாள் முன்னால் வசுதேவரைப் பார்க்கப் போயிருந்தபோது அவரும் சொன்னார். கர்காச்சாரியாரைக் கூப்பிட்டு ரெண்டு குழந்தைகளுக்கும் பேர் வெச்சிடுங்க. பிறந்த குழந்தையெல்லாம் கொல்றதுக்கு கம்சன் ஏற்பாடு பண்ணியிருக்கறதால ரொம்ப விமரிசையா பண்ண வேண்டாம். ரகசியமா பண்ணுங்கன்னார்.

நீங்க இதையெல்லாம் சொல்லவேல்லியே. 
நான் திரும்பி வரும்போதே அந்த ராக்ஷஸி இறந்துபோய், ஊர் முழுக்க அமர்க்களமா இருந்தது. அதான் மறந்துட்டேன், நல்லவேளையா நீ இப்ப‌நினைவு படுத்தின. நான் கர்காசாரியாருக்கு செய்தி அனுப்பறேன். அவரே நாள் பார்த்து சொல்லி, வந்து நாமகரணமும் பண்ணிடுவார்.

ம்ம்.. சரி

கொஞ்சம் யோசனையோடு உள்ளே போனாள் யசோதா.
கர்காசாரியாருக்கு செய்தி அனுப்பினார் நந்தர். அவர் யதுகுலத்தின் குலகுரு ஆவார். அவரிடம் ஏற்கனவே வசுதேவர் சொல்லியிருந்த படியால், அவர் நந்தனின் செய்திக்காகக் காத்திருந்தார். நந்தனிடமிருந்து சேதி வந்ததோ இல்லையோ, 
நாளையே நல்ல நாள். உடனே வருகிறேன். ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லியனுப்பினார். நந்த பவனத்தில் வைத்து சடங்கைச் செய்தால், அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால், வேறொரு ரகசியமான‌ இடத்தில் நாமகரண வைபவம் ஏற்பாடாயிற்று.

யசோதைக்கு ஒரே கவலை. 
கர்காசாரியார் வந்து யதுகுல முறைப்படி அனைத்து சடங்குகளும்‌ நடந்தேறின. 
அவர் ஏன் நந்தனின் குல வழக்கப்படி செய்யாமல் யதுகுல வம்சத்தின்படி சடங்குகள்‌ செய்கிறார் என்று யசோதைக்கு கேட்கத் தோன்றவில்லை. அவளுக்கு ஒரே கவலை.
ரோஹிணியின் குழந்தைக்காக அவ்வாறு செய்கிறார் என்று நந்தன் நினைத்துக் கொண்டார். 
பெயர் வைக்கும் நேரம் வந்தது. 
ரோஹிணி தன் குழந்தையை மடியில் இருத்திக்கொண்டு மணையில் அமர்ந்திருந்தாள்.

குழந்தையின் ஸாமுத்ரிகா லக்ஷணங்களை  நன்கு உள்வாங்கிக்கொண்ட கர்கருக்கு அவன் அவதார புருஷன் என்று தெரியவந்தது.

அகன்ற நெற்றியும், கூர்மையான நாசியும், நீலக் கண்களும், நீண்ட கரங்களும், உருண்டைக் கழுத்தும், கை கால் விரல்களின் அமைப்பும் அவனை ஆதிசேஷ அவதாரம் என்று காட்டிக் கொடுத்தன.

ராமனைப்போல் அனைவர் மனத்தையும்‌ மயக்கக்கூடியவன், மேலும் மிகுந்த பலசாலியாய் விளங்குவான் எனவே இவனுக்கு பலராமன் என்று பெயர் சூட்டலாம் என்றார். ரோஹிணிக்கு அந்தப் பெயர் மிகவும் பிடித்துவிட்டது. எனவே, குழந்தையின் வலது காதில் அவளை பலராமன் என்று மூன்று முறை ஓதச் சொன்னார்.
அவளும் ஓதினாள். பிறகு, நந்தன் யசோதை இருவரும் குழந்தையின் காதில் பெயரை மும்முறை ஓதிவிட்டு, கூப்பிட்டு மகிழ்ந்தனர்.

ஒவ்வொரு முறை அவன் பெயரைக் காதில் ஓதும்போதும் குழந்தை களுக்கென்று சிரித்தான். அவன் சிரிப்பதைப் பார்த்துக் கண்ணனும் சிரித்தான். சென்ற அவதாரத்தில் உன் பெயராய் இருந்தது இப்போது என் பெயராகிவிட்டது என்று நினைத்துச் சிரித்தான் போலும்.

யசோதைக்கு ஒரே கவலை.
தன் குழந்தைக்கு இந்த ஆசாரியர் நல்ல பெயராய் வைக்க வேண்டுமே என்ற கவலைதான் அது.

குழந்தைக்குப் பெற்றோர் தன்னிஷ்டப்படியோ, அல்லது வேறு எந்த ஆராய்ச்சியையும்‌ செய்தோ பெயரிடும் வழக்கம்‌ நமது கலாசாரத்தில் இல்லை. குழந்தைக்கு குருவோ, அல்லது, வீட்டுப் பெரியவர்களோதான் பெயரிடுவார்கள். அவ்வாறு சூழ்நிலை அமையாவிடில், குலதெய்வத்தின் பெயரையோ, முன்னோர் பெயரையோ வைப்பது வழக்கம். ஏன் அப்படி?

குழந்தையின் பெயர் அவனது அடையாளம் மட்டுமல்ல, அவனுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதமும்கூட. ஒரு இறையடியாரோ, குருவோ பெயரிடுவதாலேயே அந்தக் குழந்தைக்கு இறைவனின் அருள் பூரணமாகக்‌கிடைக்கிறது. அதுவே அவனைக் காக்கும் மந்திரமாகவும் ஆகிறது. பெயர் வைக்கும் முறையை ஆழ்வார் பத்து பாசுரங்களில் பாடுகிறார்.

இறைவன் பெயரை வைத்தால் போதும். தாய் தந்தையர்க்கு வேறு மந்திர ஜபமே தேவையில்லை. குழந்தையைக் கூப்பிடும்போதே ஆவ்ருத்தி ஆகிவிடுகிறது. அந்தப் பெற்றோர் நரகம் புகார் என்கிறார் ஆழ்வார்.

அதெல்லாம்‌சரி, இது இறைவனுக்கே பெயர் வைக்கும் வைபவமாயிற்றே.
சற்றுத் திணறித்தான் போனார் ஆசாரியர்.

எனக்கே பெயர் வைக்க வந்துவிட்டீரா என்பது போல் அவரைப் பார்த்து ஒரு கள்ளச் சிரிப்பு வேறு சிரித்துவைத்தான்  நம் இறைவன். 

பார்த்தவுடனேயே அவனை யாரென்று அறிந்துகொண்ட கர்கர், ஆரம்பித்தார்.

அம்மா, உன் பிள்ளை நாராயணனுக்கு சமமானவன்.

நாராயணன்னு பேர் வெச்சுடுவாரோ. 
ரொம்ப பழைய பேரா இருக்கே. புதுசா ஏதாவது வைக்கலாமே, யசோதை மனதிற்குள் புலம்பினாள்.

இவனுக்கு நான் வைக்கப்போகும் பெயர்தான் என்றில்லை. பின்னாளில் ஸஹஸ்ரநாமம் வரப்போகிறது.

யசோதை இடை மறித்தாள்,

ஸ்வாமி, குறுக்க பேசறதுக்கு மன்னிக்கணும்.

சொல்லுங்கம்மா...

என் பையனின் பெயர் ரொம்ப  நவீனமாக, எல்லோரும் விரும்பிக் கூப்பிடறா மாதிரி, கேக்கவும் சொல்லவும் இனிமையா இருக்கணும்.

சிரித்தார் கர்காசாரியார்.

கண்ணனைப் பார்க்க, அவன் அழகாய் முறுவலித்தான். 

சரி, இந்தப் பையன் மிகுந்த பராக்ரமசாலியாக இருப்பான். எல்லாரையும் ஆகர்ஷிப்பான். உலகிற்கே வழிகாட்டியாய் இருக்கப்போகிறவன் இவன். அதனால், க்ருஷ்ணன் என்று பெயர் வைக்கலாமா?

க்ருஷ்ணன் ஒரு முறை சொல்லிப் பார்த்தாள் யசோதை. நாக்கு தேன் சுவைத்தாற்போல்  இனித்தது. மிக்க மகிழ்ச்சியோடு தலையாட்டினாள்.

குழந்தை காதில் சொல்லுங்கம்மா..

க்ருஷ்ணன் க்ருஷ்ணன் க்ருஷ்ணன் நந்தன் குழந்தையின் வலக்காதில் ஓத யசோதையும் தொடர்ந்து ஓதினாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37