திருக்கண்ணன் அமுது - 25

ஊழி முதல்வன்


யசோதை கண்ணனைத் திண்ணையில் விட்டுவிட்டு உள்ளே போனாள். 

இதுதான் சமயம் என்று பெரிய சுழற்காற்றாய் உருவெடுத்தான் த்ருணாவர்த்தன்.
பெரிய ஊழிக்காற்று சுழற்றிக்கொண்டு வேகமாய் வந்தது, அசுரவேகம் என்று இதைத்தான் சொல்வார்கள் போலும். 

கோகுலம் முழுவதும் வைக்கோல்கள் முதல் அம்மிக்கற்கள் வரை அனைத்தும் பறந்தன.

குடிசை வீடுகளின் கூரைகள் எங்கே போயினவென்றே தெரியவில்லை. மனிதர்களால் நிற்கவே முடியவில்லை. மாடுகளும் கன்றுகளும் பயத்தால் அலறின. பிடிமானம்‌ இல்லாமல்‌ நின்றிருந்த அனைவரும் வீசி அடிக்கப்பட்டனர்.

தான்தான்  அவனது இலக்கு என்பதால் கண்ணன் தன்னை லகிமா என்ற சித்தியின் மூலம் எடையில்லாமல் சருகுபோல் ஆக்கிக்கொண்டான்.

ஒரு பெரிய சுழல்வீச்சில் சுலபமாய்க் கண்ணனைத் தூக்கிக்கொண்டு வெகு வேகமாய்ப் பறந்துவிட்டான் த்ருணாவர்த்தன்.

கோகுலத்திற்கு வெளியே வந்ததும், மிக உயரத்திற்கு குழந்தையைக் கொண்டுபோனான். அங்கிருந்து குழந்தையைக் கீழே போட்டால் எலும்பு கூட‌ மிஞ்சாது.

உயரச் சென்றதும் த்ருணாவர்த்தனின் கழுத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட கண்ணன் தன் வேலையைத் துவங்கினான்.

முன்னே பயன்படுத்திய கரிமா என்ற சித்தியை மீண்டும் பயன்படுத்தித் தன் எடையைக் கூட்ட ஆரம்பித்தான். ஒரு பெரிய மலையையே கழுத்தில் கட்டித் தொங்கவிட்டாற்போல் இருந்தது அசுரனுக்கு. காற்றரக்கனான அவனால் மூச்சு கூட விடமுடியவில்லை. மொத்தமாய்ச் செயலிழந்த நிலையில் அசுரனது கழுத்து முறிந்தது. சட்டென்று சுய உருவம் கொண்டு அவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழத் தொடங்கினான். பாராசூட் மாதிரி அவன் கழுத்தைப் பிடித்துக்கொண்டு பத்திரமாய் அவன் உடல்‌மீதே கண்ணனும் கீழே வந்தான். 

த்ருணாவர்த்தனின் உயிரும் கண்ணனிடம் அடங்கியது.

சுழற்காற்று ஊருக்கு வெளியே தொலைவில் சென்றதும் ஒரு நிலைக்கு வந்த கோப கோபியர் என்ன செய்தனர்?

அவர்களது வீடுகள் மிக மோசமாய்ச்  சேதமடைந்திருந்தன. அதைப் பார்த்தார்களா?

அவர்களது சொந்தக் குழந்தைகளும் ஆங்காங்கே வீசியெறியப் பட்டிருந்தனர். அவர்களைத் தேடினார்களா?

அவர்களது செல்வமான‌ மாடுகள் வசிக்கும்  தொழுவத்தைப் பார்த்தார்களா?

இல்லவே இல்லை.

அத்தனை பேரும் சேர்ந்து நந்த பவனத்திற்கு ஓடி வந்தார்கள். குழந்தை கண்ணன் நலமாய் இருக்கின்றானா என்று பார்த்தார்கள்.

குழந்தையைக் காணவில்லையென்று யசோதை அலறிய அலறல் வைகுண்டத்திற்கே எட்டியிருக்கும்.

எப்படிப்பட்ட மக்கள் இவர்கள்?
இவர்களது அன்புதான் எத்தகையது?

புயலடித்துச் சேதமடைந்த தங்கள் வீட்டைப் பார்க்காமல் கண்ணனைத் தேடி ஓடி வருகிறார்கள் என்றால், இறைவன் ஏன் தான் வளர்வதற்கு இந்த கோகுலத்தைத் தேர்ந்தெடுத்தான்  என்று ஓரளவாவது புரிகிறது.

குழந்தையைத் தேடுவதற்கு அத்தனை பேரும் எல்லா திக்குகளிலும் பிரிந்து ஓடினார்கள்.

ஒரு வழியாய் கோகுலத்தின் எல்லையில் சிதறிக்கிடக்கும்  ஒரு பெரிய உடலின் மீது கண்ணன் அமர்ந்து சிரித்து விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள்.

அப்பாடா, குழந்தைக்கு ஒன்னுமில்லை.

ஏன் ஒவ்வொரு ராக்ஷசனா வரான்?

ஆனா, அவனுங்க சாவறதுக்குன்னே இங்க வராங்க போல

எப்படி சாகறாங்க?

ஒன்னும் புரியல.

ஆனா ஒன்னு மட்டும் புரியுது, இந்தக் குழந்தையை தெய்வம் காப்பத்துது.

குழந்தையே தெய்வம் என்றுணராமல் வெள்ளந்தியாய் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே ஒரு கோபன் மீது சவாரி செய்து தாயிடம் போனான் கண்ணன். 

அழுது அழுது கண்ணீர் வற்றிப் போயிருந்த யசோதை குழந்தையைக் கண்டதும் புதிதாய் அழ ஆரம்பித்தாள்.ஆனால், இது ஆனந்தக் கண்ணீர்.

மறுபடி மாட்டுத் தொழுவம்.

வேறெதற்கு? 

கோமிய ஸ்நானத்திற்கும், த்ருஷ்டி சுற்றுவதற்கும்தான். 

அசுரனைக் கொல்வதற்கு இப்படி தண்டனை தருகிறார்களே என்று நினைத்தான் கண்ணன். அவ்வளவு பெரிய அசுரர்களை நொடியில் வீழ்த்தும் கண்ணனால் யசோதை செய்துவிடும் இந்த கோமிய ஸ்நானத்திலிருந்து தப்ப முடியவில்லை.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37