திருக்கண்ணன் அமுது - 23
சக்ரபாணி உதைத்த சக்கரம்
வண்டிக்கடியில் இருந்த தூளியில் சுகமாய்க் கண்ணன் உறங்க, வண்டிச் சக்கரத்தில் ஒளிந்துகொண்டிருந்த அசுரன் மெதுவாக நகர்ந்தான். வண்டியின் ஒரு சக்கரம் மட்டும் வேகமாய் நகர்ந்தால் மாடுகள் பூட்டப்படாத வண்டி குடை சாய்ந்து விழும். அடியில் உறங்கும் குழந்தையின் மீது வண்டியை விழச் செய்வது அவன் திட்டம்.
சகடாசுரன் நகர முயற்சி செய்யும்போது, உறங்கிக்கொண்டிருந்த குழந்தை லேசாக காலை நீட்டி சகடத்தை உதைத்தான். ஒரு மாதமே நிரம்பிய பிஞ்சுக் குழந்தையின் விரல் பட்டு, சகடத்தின் அச்சு சட சடவென்ற சத்தத்தோடு முறிய, சகடாசுரனின் முதுகும் முறிந்தது.
பாதத்தின் அளவு சிறியதானாலும் பலம் பெரியதாயிற்றே. உலகளந்த பாதத்தின் விரல் போதாதா சக்கரம் முறிவதற்கு?
அலறிக்கொண்டு பிரிந்த அசுரனது உயிர் கண்ணனின் பிஞ்சுப் பாதத்திலேயே தஞ்சமடைந்தது.
வண்டியின் அச்சு முறிந்ததும், பாதி சக்கரத்தில் வண்டி சாய்ந்து நிற்க, வண்டி முறிந்த சத்தத்தில் அசுரனின் அலறல் ஒருவருக்கும் கேட்கவில்லை.
சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த யசோதை குழந்தைக்கு வந்த ஆபத்தைப் பார்த்து அலறினாள்.
ஓடி வந்து குழந்தையைத் தூக்கினாள். அருகிலிருந்த கோபர்கள் வண்டியைத் தூக்கி குழந்தையை வண்டியின் அடியிலிருந்து எடுக்க உதவினர்.
அத்தனை கோபிகளும் மிகவும் பயந்து போயிருந்தனர்.
அன்றிலிருந்து பெரும்பாலும் யசோதை உறங்குவதேயில்லை. எப்போது எப்படி எந்த திசையிலிருந்து கண்ணனுக்கு ஆபத்து வருமோ என்று நினைத்து நினைத்து பயந்துகொண்டிருப்பாள். எப்போதும் விழி விரியக் கண்ணனைக் கண்காணித்து ஏரார்ந்த கண்ணியாகிவிட்டாள்.
அதுவரை சிரித்துக்கொண்டிருந்த கண்ணன் அம்மா வந்து தூக்கியதும் அழுதான்.
அவனை சமாதானப் படுத்தியவாறு, மாட்டுத் தொழுவத்திற்கு தூக்கிக்கொண்டு போனார்கள். கோமிய ஸ்நானம், த்ருஷ்டி கழித்தல் ஆகியவை செவ்வனே நடந்தேறின. பாலும் தயிரும், தேனும், சந்தனமுமாய் பக்தர்கள் அபிஷேகம் செய்து கொண்டிருக்க, கோபிகளோ அவனுக்கு கோமிய ஸ்நானம் செய்விக்கிறார்கள். அன்பின் மிகுதியால், அனைத்தையும் ஏற்கிறான் இறைவன்.
கம்சன் சகடாசுரனுக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.
பூதனையின் மரணத்தில் ஒன்று தெளிவாய்த் தெரிந்தது. கோகுலத்தில் ஏதோ ஒரு சக்தி வாய்ந்த குழந்தை பிறந்திருக்கிறது என்பதுதான் அது. சகடாசுரனைத் தேடிச் சென்ற ஒற்றன் கம்சனிடம் வந்து அவன் இறந்துவிட்டதாய் தகவல் சொன்னான்.
தூக்கிவாரிப் போட்டது கம்சனுக்கு. அவனுக்கு தன்னைக் கொல்ல வந்தவன் கோகுலத்தில்தான் இருக்கிறான் என்று அழுத்தமாகத் தோன்றியது.
மறுபடி இன்னொரு அசுரனை அனுப்ப முடிவு செய்தான். தானே நேரில் செல்ல அவனுக்கு பயமாக இருந்தது.
த்ருணாவர்த்தன் என்ற அசுரனை அழைத்தான் கம்சன்.
நாளொரு மேனியும் கணத்திற்கொரு லீலையுமாக கண்ணன் வளர்வதைக் கண்ட கோபிகளே பாக்யவதிகள்.
கண்ணன் கோகுலத்தில் வளர்ந்த காலம் கோபிகளுக்கு மட்டுமல்ல, அவனுக்குமே பொற்காலம்தான். வேறெந்த அவதாரத்திலும் இப்படி ஊரே சேர்ந்து மாய்ந்து மாய்ந்து இறைவனைக் கொஞ்சியதைப் பார்க்க இயலாது. இந்த ஒரு அவதாரத்தில் தான் கள்ளமற்ற அன்பை இறைவன் அனுபவிக்கிறான், தூய்மையான அன்பிற்கு ஏற்றம் கொடுக்க வந்த அவதாரம் க்ருஷ்ணாவதாரம்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment