ப்ருந்தாவனமே உன் மனமே - 60
கண்ணனின் வாழ்வில்தான் எத்தனை எத்தனை துயரங்கள்?
இன்னும் சொல்லப்போனால் ராமாவதாரத்தைக் காட்டிலும் க்ருஷ்ணாவதாரத்தில் அதிகமான துயரச் சம்பவங்கள்.
125 வருடங்கள் இந்த பாரத தேசத்தில் வாழ்ந்த கண்ணன் பூலோகம் மட்டுமல்லாது, ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் சென்று தன் பாதங்களைப் பதித்துவிட்டிருக்கிறான்.
சிறையில் பிறந்து, பெற்ற தாய் தந்தையரைப் பிரிந்து, வேறோரிடத்தில் வளர்ந்தான். அங்கும் அவனுக்கு தினம் தினம் கொலை அச்சுறுத்தல்கள். வளர்த்தவர்களைப் பிரிவதைப் போல் கொடுமை உண்டா? சரி, மதுராவிலாவது நிம்மதியான வாழ்வா என்றால், கம்சனைக் கொன்றதற்காக அவனது மாமனார் ஜராசந்தன் பதினேழு முறை படையெடுத்து வந்தான். ஒவ்வொரு முறையும் ஜராஸந்தனை மட்டும் உயிரோடு விட்டு, அவனது சைன்யங்களை நிர்மூலமாக்கினான் கண்ணன். அடிக்கடி போர் வந்துகொண்டேயிருந்ததால், வாழுமிடத்தை விட்டு அவ்வளவு பேரையும் கடலுக்குள் துவாரகா நகரம் நிர்மாணித்து குடியேற்றினான்.
ருக்மிணியோடு விவாஹம் நடந்தது. ஆனால், அவனை மாமனார் வீட்டில் அழைத்து மரியாதை செய்தவர் உண்டா?
வீண்பழி வேறு சுமந்தானே?
எவ்வளவு அசுரர்கள்?
மஹாபாரதத்தின் சூத்திரதாரியாய் இருந்து எவ்வளவு காரியங்களை ஆற்றியிருக்கிறான்? என்னதான் இறைவன் என்றாலும் எவ்வளவு செயல்கள்? ஒவ்வொன்றிலும் எவ்வளவு சூட்சுமங்கள்? அழைத்ததும் ஓடிச்சென்று அவன் காப்பாற்றிய வரலாறுகள் தான் எத்தனை?
இவ்வளவு சிரமங்களும் துயரங்களும் தொடர்ந்தபோதும், கண்ணன் எப்படி இருந்தான்?
எந்த சமயத்திலாவது துவண்டானா? அழுதானா? முகமோ, மனமோ வாடிய சூழ்நிலைகள் உண்டா?
அவனுக்கு அபயம் அளிப்பவர் யாராவது உண்டா? அவனேதான் அத்தனையும் சமாளிக்கவேண்டும்.
ஒரு சங்கல்பத்தினால் ப்ரளயத்தையே கொண்டு வருபவன், மறுபடி ச்ருஷ்டியைத் துவக்கி உலகைநிலை நிறுத்துபவன், ஆனாலும் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்திருக்கிறான்.
விரக்தியின்றி, எப்போதும் மலர்ந்த முகத்துடன், தன்னைச் சுற்றியிருக்கும் அனைவரின் முகமும் வாடாமல் பார்த்துக்கொண்ட தெய்வம் உண்டா?
அவனது வாழ்விலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம்.
கண்ணன் ப்ரத்யக்ஷமாக பூமியிலிருந்து மறைந்து விட்டாலும் ஸ்ரீவனத்தில் இன்றும் திவ்யவாசம் செய்கிறான்.
நமக்கு இன்னும் நெருங்கி வந்து அருள் செய்வதற்காக நமது மதுரபுரிக்கு வந்துவிட்டான்.
ஸ்ரீ பெரும்புதூர் தாலுகாவில் மஹாரண்யம் கிராமத்தில் மதுரகிரியின் தடவரையில், அடையாறு துவங்குமிடத்தில் மிக மிக ரம்யமான சூழ்நிலையில் அமைந்துள்ளது மதுரபுரி.
ஸ்ரீவனம் போலவே மலைக்கும் ஆற்றுப்படுகைக்கும் இடையே அமைந்துள்ள மதுரபுரியில் தினமும் ப்ரேமிகவரதன் மாதுரிஸகியோடும் நமது குருநாதரோடும் இணைந்து பல லீலைகளை நிகழ்த்தி வருகிறான்.
ஒரு சமயம் நமது குருநாதர் எங்கோ வெளியில் சென்றுவிட்டு திரும்பி வந்தார். அப்போது வாசலில் கதவைத் திறக்க ஒருவரும் இல்லை.
வண்டியை ஓட்டிச் சென்றவர் இறங்கிச்சென்று திறப்பதற்குள், ஒரு மூன்று வயதுடைய ஒரு சிறுவன் ஓடிவந்து கதவைத் திறந்துவிட்டான்.
வெண்மை நிற உடையில் மிகமிக அழகாக இருந்த அக்குழந்தையைப் பார்த்துக்கொண்டே இருந்தார் ஸ்வாமிஜி.
யார் இந்தக் குழந்தை? மிகவும் பரிச்சயமான முகமாக இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருந்தார். அதற்குள் அந்தக் குழந்தை பாகவத பவனத்திற்குள் ஓடிச் சென்று விட்டது. வண்டியை நிறுத்திவிட்டு ஒரு ஆவலில் பின்னாலேயே சென்று பார்த்தால் பாகவத பவனத்தில் ஒருவரும் இல்லை. ஸ்வாமிஜியின் வருகையை அறிந்து ஓடி வந்த தன்னார்வலர்களிடம், ஸ்வாமிஜி,
இங்கே இருந்த குழந்தை எங்கே?
என்று வினவினார். அவர்களோ
இங்கே குழந்தை எதுவும் வரவில்லையே
என்றனர்.
பிறகுதான் உணர்ந்தார் தனக்காக கதவைத் திறந்தது ப்ரேமிகவரதன் தான் என்று.
இம்மாதிரி எண்ணற்ற லீலைகளை மதுரபுரியில் நிகழ்த்திக்கொண்டிருக்கிறான் கண்ணன்.
ஆசிரமத்தின் அருகிலேயே திருவேங்கடமுடையான் கல்யாண ஸ்ரீநிவாஸன் என்ற பெயரில் எழுந்தருளி பக்தர்களின் குடும்பத்தை யெல்லாம் தன் தலை மீது வைத்துக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்.
மதுரபுரியில்,
24 மணி நேரமும் நாம ஸங்கீர்த்தனம் ஒலிக்கிறது.
நாமம் கேட்க
24 அடி உயரமுள்ள ஜெயஹனுமானும் அருகில் வந்துவிட்டார். வழிபடும் பக்தர்கள் அனைவரின் துன்பங்களையும் களைந்து ஜெயம் ஏற்படச் செய்கிறார்.
கண்ணன் விரும்பி வந்து கோவில் கொண்டுள்ள மதுரபுரியில் நமக்கும் நித்ய வாசம் கிடைக்கவும், அனுதினமும் ப்ரேமிகவரதன் செய்யும் மதுரலீலைகளை அனுபவிக்கவும் ஸத்குருநாதர் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் மலர்த் தாள்களில் ப்ரார்த்தனை செய்வோமாக!
Comments
Post a Comment