ப்ருந்தாவனமே உன் மனமே - 31
மாயப்பசி
மான்களேதானோ என்னும்படி துள்ளிக்குதித்து கண்ணனுக்கிணையாக ஓடி வந்தனர் இடைச் சிறுவர்கள்.
கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி விளையாடினர். நதியில் நீந்திய அன்னத்தைப் போல் நீந்தினர். நடித்துக் காண்பித்து என்ன மிருகம், என்ன பறவையென்று கண்டுபிடித்தனர். இன்னும் அவர்கள் கண்ணனோடு விளையாட ஆயிரமாயிரம் விளையாட்டுக்கள் காத்திருந்தன.
அதற்குள் உச்சி வேளையாகிவிட பசி வந்துவிட்டது. இன்றைக்கென்னவோ கண்ணன், ஒருவரையும் உணவு கொண்டுவரவேண்டாம். கிடைப்பதைப் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டான். விளையாட்டிற்கு நடுவிலேயே ஆங்காங்கே மரங்களிலிருந்து கிடைத்த கனிகளை உண்டாயிற்று. இருப்பினும், பசி மட்டும் அடங்கவில்லை.
மதுமங்களன் கண்ணனிடம் வந்தான்.
கண்ணா இன்னிக்கு சாப்பிட ஒன்னும் கொண்டுவரல. பசிக்குது கண்ணா...
கண்ணன் அவனைப் பார்த்துக் குறுநகை பூத்தான்.
சரி, எல்லாரும் ஒன்னு செய்ங்க. இப்படி கிழக்கால கொஞ்ச தூரம் போனா, அந்தணர் குடில்கள் இருக்கும். அங்க யாகம் செய்யறவங்க கிட்ட கேட்டா சாப்பாடு குடுபாங்க
என்றான்.
நீ வரலியா கண்ணா?
நான் இங்கயே இருக்கேன். நீங்க எல்லாரும் போய் கேட்டு எனக்கும் சேர்த்து வாங்கிட்டு வாங்க என்றான்.
கண்ணன் வாக்கே வேதம் அந்த இடைக் குருத்துகளுக்கு.
எல்லாக் குழந்தைகளும் அந்தணர் குடிலைத் தேடிக்கொண்டு சென்றன.
சிறிது தூரத்தில் யாகப்புகை தென்பட்டது. அங்கு சென்று மெதுவாக எட்டிப் பார்த்தான் ஒருவன்.
அந்தணர்கள் வட்டமாக அமர்ந்து யாகம் செய்து கொண்டிருந்தனர். வேத மந்திரங்கள் கணீரென்று கேட்டன.
சாமீ சாமீ என்ற சிறுவனின் குரல் ஈனஸ்வரத்தில் ஒலித்தது.
எல்லாக் குழந்தைகளும் வந்து ஒருசேரக் கூப்பிட்டும் பார்த்தனர்.
அவர்கள் யாகத்திலேயே கவனமாய் இருக்க, திரும்பிப் பார்த்த ஓரிருவரும் ஏனென்று கேட்கவில்லை.
கேட்டும் கேளாதார்போல் அவர்கள் கர்மத்தில் மூழ்கியிருக்க, சிறுவர்களின் முகம் வாடியது.
சுவற்றில் அடித்த பந்தாய்த் திரும்பி கண்ணனிடமே வந்தனர்.
கண்ணா, அந்த சாமிங்க எல்லாம் கண்டுக்கவேல்ல.
அவங்க மந்திரம் சொல்லிட்டிருப்பாங்கடா. நீங்க நல்லா கூப்பிட்டீங்களா?
சாமீ சாமீன்னு கூப்பிட்டு கூப்பிட்டு பாத்தோம். யாருமே பாக்கல. ரெண்டு மூணுபேர் திரும்பிப் பாத்துட்டு பாக்காதமாதிரி திரும்பிக்கிட்டாங்க..
கண்ணன் முகத்தில் மிளிர்ந்த விஷமப் புன்னகையின் அர்த்தத்தை யாரே அறிவார்?
டேய், மந்திரம் சொல்ற சாமிங்க கிட்ட கேட்டா என்னடா கிடைக்கும்? அவங்களுக்கே அவங்க வீட்டு மாமிங்கதான் சோறுபோடணும்.
இப்ப மறுபடி போங்க. பின்னாடி போனா, அங்க மாமிங்க எல்லாம் இருப்பாங்க. அவங்க கிட்ட கேளுங்கடா...
கண்ணா பசிக்குதுடா..
இந்த வாட்டி நிச்சயம் கிடைக்கும். போய்க் கேட்டு வாங்கிட்டு வாடா..
மதுமங்களனை அனுப்பினான் கண்ணன்.
அவனும் கண்ணன் சொன்னதை அப்படியே நம்பி எல்லாச் சிறுவர்களோடும் அந்தணர் குடிலை நோக்கி நடந்தான்...
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே....
Comments
Post a Comment