ப்ருந்தாவனமே உன் மனமே - 30

பாவை நோன்பு

நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். ஆடி மாதம் ஆஷாட ஏகாதசி முதல் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி வரை தேவர்களின் இரவு போழுது. தேவர்களுக்கு உறக்கம் என்ற அவஸ்தை இல்லையென்பதால் அவர்கள் யோகநித்ரையில் ஆழ்ந்திருப்பர்.

அந்த சமயத்தில் தேவ வழிபாடு செய்தால் நமக்கும் சுலபமாய்ப் பலன்கள் கிடைக்கும் என்பதால், நமது வழிபாடுகள் ஆடி மாத பௌர்ணமியான வ்யாஸ பௌர்ணிமாவில் தொடங்கி, விநாயக சதுர்த்தி, நவராத்ரியில் தேவி பூஜை, புரட்டாசி வழிபாடுகள், துலாஸ்நானம் முதலியவை, கார்த்திகை மாத விரதங்கள், மார்கழி மாத வழிபாடுகள்,  சிவராத்ரி, என்று வரிசையாக வைகுண்ட ஏகாதசி வரை எல்லா தெய்வங்களுக்கும் வழிபாடு நடக்கும் காலம் இதுவே.

இந்த நான்கு மாத காலத்தில் சாதுர்மாஸ்ய வ்ரதம் அனுஷ்டிக்கப்படிகிறது. ஸந்யாசிகளும் ஓரிடத்தில் தங்கி தவம் செய்கின்றனர்.

மார்கழி மாதம் தேவர்களின் ப்ரும்ம முஹூர்த்த சமயமாதலால், அந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகள் அதிக பலனைக் கொடுக்கின்றன.

கோபிகளும் கண்ணனை அடைய மார்கழி மாதத்தில் கௌரி விரதம் இருக்கலாம் என்று முடிவு செய்தனர்.

இதுவரை அவர்களுக்குப் பழக்கமில்லாத அதிகாலையில் நதிஸ்நானம் செய்து கௌரியின் திருவுருவை மண்ணால் செய்து வழிபாடு செய்தனர்.

ஒரு மாதம் தினமும் அதிகாலை நதியில் ஸ்நானம் செய்யப்போகிறோம் என்று வீட்டில் சொன்னால், அனைவரும் வினோதமாகப் பார்த்தனர். இருந்தாலும் அத்தனை பெண் குழந்தைகளும் சேர்ந்து சொன்னதால், தலைவனான நந்தனிடம் அனுமதி கேட்கப்பட்டது. 

குழந்தைகளே, என்ன விஷயம்?

நாங்க தினமும் விடியக்காலை நதியில் குளிச்சு பூஜை செய்யப்போறோம்.

எதுக்கு இப்ப இந்த பூஜை?

திருதிருவென்று விழித்தனர். கண்ணனைத் திருமணம் செய்ய என்று எப்படிச் சொல்வது?

சட்டென்று ஒருத்தி சொன்னாள்

நல்லா மழை பெய்யணும், எல்லாரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிட்டு பூஜை.

தன் மக்கள் சௌக்கியமாய் இருக்க ஒரு பூஜை என்றால், எந்தத் தலைவன்தான் சந்தோஷப்படமாட்டான்?

அப்படியா? ரொம்ப சந்தோஷம். தாராளமா செய்ங்க..

அதற்குள் இன்னொரு கோபன் சொன்னான்,

ராஜா, விடியக்காலைல போறேன்றாங்க, வழியெல்லாம்  இருட்டா இருக்கும். ஏதாவது பூச்சி பொட்டு இருந்தா என்ன செய்யறது?
போதாக்குறைக்கு ஏற்கனவே அப்பப்ப ஏதாவது ஆபத்து வருது....

நந்தன் சற்று யோசித்தான்.

அப்படின்னா கண்ணனையே காவலுக்கு அனுப்பலாமா?

சரிங்க ராஜா என்றான் அவன்.

கண்ணன் காவலுக்குப் போறதா இருந்தா ஒரு பயமும் இல்லை. தைரியமா அனுப்பலாம். இது இன்னொரு கோபன்.

பெரிய கோபிகள், 
சரிதான் சும்மாவே இந்த கண்ணன் நல்லா எல்லாக் குட்டிகளையும் வம்பிழுப்பான். அவனே காவலா? 
தேனுக்கு வண்டு காவலாம் என்று பேசிக்கொண்டனர்.

குட்டி கோபிகளுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. கண்ணனை அடைய விரதம் இருக்கலாம் என்று நினைத்ததுமே பலன் கிடைத்துவிட்டது. 
அவனைப்போல் தெய்வம் உண்டோ?

நந்தன் கண்ணனை அழைத்தான்.
கண்ணா..

சொல்லுங்கப்பா..

இந்தப் பெண் குழந்தைகள் ஏதோ பூஜை செய்யணுமாம். ஒரு மாசத்துக்கு வியக்காலைல நதிஸ்நானமாம். 
நீ தினமும் ஒரு தீப்பந்தம் எடுத்திட்டு ரெண்டு மூணு பசங்களைக் கூட்டிட்டு இவங்களோட போயிட்டு வா.

என்னது? இவங்களுக்கு நான் காவலா?
எனக்கு பெண்களைப் பாத்தாலே கூச்சமா இருக்கும். அதுவும் அவங்க குளிக்கப் போறதுக்கு நான் கூடப்போகணுமா? சீச்சீ, அசிங்கம். என்னால முடியாதுப்பா. 
என்று ஏகத்துக்கு அலட்டிக் கொண்டான்.

ஒருவருக்கும் அறியாமல் கோபிகளைப் பார்த்து பழிப்பு காட்டினான்.

நந்தன் சிரித்தான்.
டேய், அதெல்லாம் சரிதான். உன்னைப் பத்தி எல்லாருக்கும் தெரியும். சும்மா கூடப் போயிட்டு வாடா என,

ஏதோ நீங்க சொல்றதால போறேம்பா  என்று விருப்பமில்லாமல் போவதைப்போல் பாவலா காட்டிவிட்டுச் சென்றான். 

நாளை முதல் கண்ணனும் உடன் வரப்போகிறான் என்பதே கோபிகளுக்கு ஆனந்தமாய் இருந்தது.

மறுநாள் அதிகாலை நதிக்கரை உடன் வந்தவன், 
நீங்க ஸ்நானம் பண்ணுங்க. நான் அப்றம் வரேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

அவர்கள் நதியில் ஸ்நானம் செய்த கதையும், கண்ணன் செய்த லீலையும் முன்பே பார்த்தோம்.

ஒருவழியாய் நதிஸ்நானம் செய்து முடித்து, வெளியில் வந்தனர் கோபிகள். 
யமுனைக்கரையில் தங்கள் தாமரைக் கரங்களால், மண்ணைக்கொண்டு கௌரியின் உருவம் செய்தனர்.

யமுனைக்கரையில் உள்ள செடி கொடிகளில் மலர்ந்திருந்த மலர்களைக்கொண்டு பூஜை செய்து ப்ரார்த்தனை செய்தனர்.

காத்யாயினீ மஹாமாயே
மஹாயோகின்யதீஸ்வரி
நந்தகோபஸுதம் தேவி 
பதிம் மே‌ குரு தே நம:

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37