ப்ருந்தாவனமே உன் மனமே - 29
தோழியும் நானும் தொழுதோம்
ராமாவதாரத்தில் ஆரம்பத்திலிருந்தே நான் மனிதன் மனிதன் என்று சொல்லிக்கொண்டு மனிதனாகவே வாழ்ந்து காண்பித்தான் பகவான்.
க்ருஷ்ணாவதாரத்திலோ, பிறந்தது முதல் அதிசயங்களைச் செய்து செய்து கணத்திற்குக் கணம் தான் இறைவன் என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறான்.
எண்ணற்ற லீலைகளைச் செய்துவிட்டு ப்ருந்தாவனத்தை விட்டு பதினான்கு வயதில் கிளம்பிய பகவான், கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்குப் பிறகுதான் அவர்களை ப்ரபாஸ க்ஷேத்திரத்தில் சந்திக்கப்போகிறான். அப்போதும்கூட இந்தப் பதினான்கு வருடத்தில் நடந்த அத்தனை லீலைகளையும் அவர்கள் அன்றைக்கு நடந்ததைப்போலவே ருக்மிணியிடம் வர்ணித்தார்கள் என்றால் கோபிகளின் ப்ரேமை எத்தகையது?
பகவான் இன்னும் ஏழாவது வயதை எட்டாத சிறுவன். கோபிகளும் அத்தகைய வயதையொத்தவர்களே.
தங்களது காரியங்களைக் கூடச் சரிவரச் செய்யத் தெரியாத குழந்தைப்பருவத்தில் இருப்பவர்கள்தான்.
பகவானுடன் இறங்கி வந்தவர்களுள் பலராமனையும், ராதையையும் தவிர்த்து மற்ற அனைவரும் தங்கள் ஸ்வரூபத்தை அறிந்தவர்களாகத் தெரியவில்லை.
கண்ணனும் ராதையும் தனித்துச் சந்திக்கும் சமயங்களில் திவ்ய ஸ்வரூபங்களை எடுத்துக்கொள்கின்றனர்.
கோபிகள் அனைவரும் யமுனையில் ஸ்நானம் செய்ய ஒருநாள் கிளம்பி யமுனைக் கரைக்கு வந்தனர்.
தர்ம அதர்மங்களைப் பற்றிப் பெரிதும் அறிந்திராத அறியாப்பருவம்.
உடைகளைக் கரையில் கழற்றி வைத்துவிட்டு நதியில் இறங்கினர்.
அவர்களது விழிகளோ, அல்லது மீன்களோ என்னுமளவு
துள்ளித் துள்ளி ஜலக்ரீடை செய்யத் துவங்கினர்.
ஒருத்தி கண்ணன் வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?
ஆமா, கண்ணனோடு விளையாடலாம்
அதனால என்ன, என்னையே கண்ணனா நினைச்சுக்கோங்கடி
என்று சொல்லி இன்னொருத்தி நடுவில் நிற்க, மார்பளவு நீரில் அவளைச் சுற்றி வட்டமாக நின்று கொண்டு விளையாடத் துவங்கினர்.
ஸ்நானத்திற்கென்று வந்த சிறுமிகள் எவ்வளவு நேரம் விளையாடினார்களோ தெரியாது.
நதிஸ்நானம் அதிகம் பழகியிராதவர்கள். நேரமாக ஆக, குளிர ஆரம்பித்ததும், ப்ரக்ஞை வந்தது.
நினைத்தாலே ஓடிவரும் கண்ணன் அனைத்தையும் மரத்தின் மீது அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
கரைக்குத் திரும்பலாம் என்ற எண்ணம் வந்ததும், ஒரு கோபி அலறினாள்
கரையில் வெச்ச துணியெல்லாம் எங்கடீ?
தூக்கிவாரிப்போட்டது அனைவருக்கும்.
கழற்றிவைத்த துணிகள் ஒன்றையும் காணவில்லை.
சில குழந்தைகள் அழவே ஆரம்பித்து விட்டன.
என்னடி பண்றது?
எப்படி வீட்டுக்குப் போறது?
கஷ்டம் வந்தா கண்ணனை கூப்பிடணும்னு அம்மா சொல்லிருக்காங்க
ஆமாமா கண்ணனையே கூப்பிடுவோம்.
கூப்பிட்டா வந்துடுவான்டி
வந்தாதானேடி காப்பாத்துவான்
ஏய் உடம்பில் ஒட்டுத்துணியில்லாம? கண்ணன் வந்துட்டா என்னடி பண்ணுவ?
பேசிக்கொண்டே மேலே பார்த்தால், அங்கே மரத்தின் மேல், நூபுரங்கள் அணிந்த கமலப்பாதங்களை ஆட்டிக்கொண்டு,இவர்களது பேச்சைக்கேட்டுச் சிரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது நீலநிற ப்ரும்மம்.
மரக்கிளைகளில் கோபியரின் துணிகளைக் கட்டித் தொங்கவிட்டிருந்தான்.
கண்ணன், கண்ணன்
ஒருசேர அத்தனை கோபிகளும் கூக்குரலிட்டனர்
சட்டென்று உடலில் உடையில்லை என நினைவு வந்ததும், வெட்கமும் கோபமுமாய் முகம் சிவந்து தலை தாழ்ந்தது.
கண்ணா இதெல்லாம் சரியில்ல. எங்க துணியைக்கொடு..
சிரித்தான்.
தயவு செய்து கொடு கண்ணா, நேரமாச்சு
அம்மா தேடுவாங்க வீட்டுக்கு போகணும்.
இதெல்லாம் இவ்வளவு நேரம் ஆட்டம் போடும்போது தெரியலையா?
கண்ணா துணியைக் கொடு கண்ணா
சரி, எல்லாரும் என்னை வணங்கினா தரேன்.
உடனே இரண்டு கைகளையும் நீருக்குள் நின்று நெஞ்சில் குவித்து வணங்கி
இப்ப குடு கண்ணா
அதெல்லாம் இல்ல. ரெண்டு கையையும் தலைக்குமேல் தூக்கி வணங்கினாத்தான்
கண்ணா இதெல்லாம் நியாயமே இல்ல
நந்தராஜாகிட்ட சொல்லுவோம்
எது நியாயம்?
நீங்க எல்லாரும் பாவம் பண்ணியிருக்கீங்க. பகவானான என்னை வணங்கினா பாவம் போகுமேன்னு சொன்னேன். அப்பாகிட்ட சொல்வீங்களோ? நல்லாச் சொல்லுங்க
அவர் கிட்டயே பேசி துணியெல்லாம் வாங்கிக்கோங்க.
நான் எல்லாத்தையும் எடுத்திட்டுபோய் அவர்கிட்டயே கொடுக்கறேன். இப்படியே போய் சொல்லுங்க.
ஏய், சும்மா இருடீ, அதெல்லாமில்ல கண்ணா துணியைக் கொடு
நாங்க என்ன பாவம் செய்தோமாம்
துணியில்லாம நதியில் இறங்கினா பாவம்னு தெரியாதா?
யமுனையை அவமதிச்ச பாவம் வரும். புண்ய நதியை அவமதிச்சா, நரகம்தான் தெரியுமா?
சரி, கண்ணா தெரியாம செய்துட்டோம். இனி நதிக்கே வரல. தயவு செய்து துணிகளைக் கொடு
நான் சொன்னா மாதிரி செய்தா கிடைக்கும்.
வேறு வழியில்லை. ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
இரண்டிரண்டு பேர்களாகச் சேர்ந்துகொண்டு
ஒருத்தியின் இடது கையும், இன்னொருத்தியின் வலது கையுமாகச் சேர்த்து வணங்கினர்.
கல்லும் கரையும் புன்சிரிப்போடு, மேலிருந்து துணிகளைத் தூக்கிப்போட்டான் கண்ணன்.
பிறகு, இறங்கி ஓடி மறைந்தான்.
முன்னமேயே அனைவரும் கண்ணனையே திருமணம் செய்ய விரும்பியது நினைவுக்கு வர, வெட்கம் மேலிட உடைகளை அணிந்துகொண்டு, வீடுகளை நோக்கி பேசாமல் நடந்தனர் அந்த குட்டி கோபிகள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment