ப்ருந்தாவனமே உன் மனமே - 27
மயக்கும் குழலிசை
கண்ணன் குழலோசையில் மயங்கி ப்ருந்தாவன வாசிகள் அனைவரும் செயல் மறந்து நின்றனர்.
அதிலும் பெண்டிருக்கு மிகவும் தொல்லை. அவர்களால் தத்தம் செயல்கள் எதையும் சரிவரச் செய்யமுடியாமல் எல்லோரிடமும் வசை வாங்கிக் கொண்டிருந்தனர்.
அதனால், அனைவரும் ராதையிடம் ப்ரச்சனையைச் சொல்ல, அவளோ சிரித்தாள். கண்ணனின் குழலிசையில் எந்நேரமும் மயங்கியிருக்கவே அவள் விரும்பினாள்.
அவளது விருப்பம் தெரிந்ததால், கண்ணன் குழலைக் கீழேயே வைப்பதில்லை. நினைக்கும் நேரமெல்லாம் எடுத்து கானாம்ருதம் பொழிந்தான்.
ஆனாலும் ராதை தோழிகளின் கஷ்டத்தைக் கருத்தில் கொண்டு, சற்று யோசித்தாள். அவர்களும் என்னதான் செய்வார்கள்? பாவம், வீட்டில் வேலை ஆகவில்லை என்றால், பெற்றோரும், மற்றவரும் கடிந்துகொள்ளத்தான் செய்வார்கள்.
எல்லோரிடமும் பேசியதில், ஒருத்தி சொன்னாள்,
ராதா, கண்ணன் நினைச்ச போதெல்லாம் குழல் வாசிச்சா, எங்களுக்கு வேலை செய்ய முடியலை. அதனால், அவனை தினமும் மாலை பொழுது சாயும் நேரமோ, அல்லது மதிய வேளையோ வாசிக்கச் சொல்லலாம். நாங்க எல்லாரும் வேலையெல்லாம் முடிச்சுட்டு உக்காந்து கேட்டுட்டே இருப்போம்.
இல்லன்னா, அவனுக்கெப்ப வசதியோ, தினமும் ஒரு நேரத்தை சொல்லச் சொல்லுவோம், அந்த நேரத்துக்கு நாங்க தயாரா இருந்துக்கறோம். இப்படி நினைச்சு நினைச்சு வாசிச்சா நாங்க என்னசெய்யறது?
அவன் குழலிசையை கேட்டும் மயங்காத அளவுக்கு மனசு கல்லாவா இருக்கு? ஒரு நியாயம் சொல்லு ராதா
என்றாள்.
ராதா கலகலவென்று சிரித்தாள்.
அதெப்படி நாம் அவனை வாசின்னோ வாசிக்காதன்னோ சொல்லமுடியும்?
ராதா கொஞ்சம் எங்க நிலைமையும் பாரு
சரி, என்ன செய்யலாம்னு சொல்றீங்க?
கண்ணன் கிட்ட பேசலாம்.
சிரித்தாள்.
கண்ணன்கிட்டயா? பேசறதா?
ஆமாம் ராதா
சரி யார் பேசப்போறீங்க?
என்னது? பேசபோறீங்கவா? நீதான் பேசணும்.. எங்களுக்கெல்லாம் அவனிடம் பேச ஏது தைரியம்?
அவன் நாங்க சொன்னா கேக்க மாட்டான். நீ சொன்னா மட்டும்தான் கேப்பான்.
நானா? என்னால முடியாதுப்பா
ராதா ராதா தயவு செய்து..
அவர்கள் முகத்தைப் பார்த்தாலும் பாவமாக இருந்தது. அரை மனதாக சரி என்றாள்.
இரண்டு மூன்று தோழிகளை அழைத்துக்கொண்டு கண்ணன் வழக்கமாய் செல்லும் வம்சீவடத்திற்குச் சென்றாள் ராதா.
எல்லாரும் ஒளிந்துகொண்டனர். கண்ணன் நண்பர்களோடு பேசிக்கொண்டு நடந்துவரும் அழகைக் கண்டு பொற்சிலைபோல் நின்றாள் ராதை. அவள் தனியாய் நிற்பதைப் பார்த்ததும், தோழர்களைக் கண்ணைக் காட்டிவிட்டுத் தனியாக வந்தான்.
என்ன ராதா, தனியா நிக்கற? என்னைப் பாக்கவா வந்த?
வெட்கம் பிடுங்கித் தின்றது. இப்படித் தனியாய் விட்டுவிட்டுப் போன தோழிகள்மீது கோபம் வந்தது.
சுதாரித்துக்கொண்டாள்.
இந்தப் பக்கம் வந்தேன்....
அப்படியே என்னப் பாத்ததும் நின்னுட்டயா? என்று சிரித்தான் கண்ணன்.
வெட்கத்தால் ராதையின் முகம் சிவந்தது.
அப்படியில்ல. உன்கிட்ட ஒரு விஷயம்...
சொல்லு ராதா, காத்துட்டிருக்கேன்.
நீ நேரம் கெட்ட நேரத்தில் குழல் வாசிச்சா எங்களால் வேலை செய்ய முடியல.
மயங்கிப்போறயா?
குனிந்துகொண்டாள்.
எல்லா கோபிகளும் வீட்டில் திட்டு வாங்கறாங்க.
அதனால?
நீ எதாவது ஒரு குறிப்பிட்ட நேரம் சொல்லு, தினமும் அதே நேரத்தில் வாசிச்சா, உன் இசையை எல்லாரும் மெய் மறந்து அனுபவிப்போம்.
இப்ப மட்டும் என்னவாம்?
அனுபவிக்கலையோ?
என்றவன்,
உனக்குப் பிடிக்கலன்னா சொல்லு ராதா, நான் வாசிக்கவேல்ல.
என்றான்.
அதெல்லாமில்ல என்றாள் அவசரமாக.
அப்றம் என்ன?
புல்லாங்குழல் வாசிக்கறது என் பிறப்புரிமை. அதையும் உனக்காகத்தான் வாசிக்கறேன். மத்தவங்க மயங்கினா நான் ஒன்னும் செய்யறதுக்கில்ல. எனக்கு எப்ப வாசிக்கணும்னு தோணுதோ வாசிப்பேன். என்னை யாரும் கேக்கமுடியாது.
ராதைக்கு மகிழ்ச்சி மேலிட்டது. அதற்குமேல் என்ன சொல்வதென்று தெரியாமல்,
அம்மா தேடுவாங்க, நான் கிளம்பறேன் என்று சொல்லி வேகமாய்த் திரும்பி ஓடிவந்த ராதையை மறைந்து நின்றிருந்த தோழிகள் இடுப்பில் கை வைத்துக்கொண்டு முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment