ப்ருந்தாவனமே உன் மனமே - 28

இசையின்பம்

நான்தான் இது சரிப்பட்டு வராதுன்னு முதல்லயே சொன்னேனே என்றாள் ராதா.  சூழ்ந்துகொண்ட தோழிகள் துளைத்தெடுத்தனர். 

கண்ணனிடம் எந்தப் பேச்சு வார்த்தையும் எடுபடாதுங்கறது தெரிஞ்சதுதானே !

அதுசரி, உனக்கு அவனது இசையில் மயக்கம். நீ வேற எப்படி பேசுவ?

இதோ பார் ராதா, எங்க நிலைமையை கொஞ்சம் யோசி. கருப்பனின் இசைல எல்லாம் மறந்துபோவுது. வேலை ஆகலன்னா, வீட்டில் திட்டும் அடியும் விழுது.

கண்ணனோட அந்தப்  புல்லாங்குழல்லேர்ந்துதான் அப்படி ஒரு இசை வருமா? இல்ல எந்தக் குழலைக் கொடுத்தாலும் கண்ணன் அப்படி வாசிப்பானா?

ஏய் போடி. புல்லாங்குழல் வெறும் மூங்கில். அதில் ஏழு ஒட்டை தவிர வேறென்ன இருக்கு? அவன் கைலதான் எல்லாம் இருக்கு.

என்ன அப்படி சொல்லிட்ட? அந்தப் புல்லாங்குழல் வெறும் மூங்கிலா? அது என்னென்ன வேலை செய்யுது? அவன் இடுப்பிலயே எப்பவும் சுகமா உக்காந்திருக்கு. பசிச்சா அவன் பவளவாயமுதைக் குடிக்குது. அவனுக்கு முதுகில் அரிச்சா, இதமா சொறிஞ்சுவிடுது. பகவானுடைய கத்தி, சங்கு, சக்கரத்துக்கெல்லாம்கூட அவனுடைய ஒரு கையின் ஸ்பர்சம்தான் கிடைக்கும். ஆனா இந்தப் புல்லாங்குழல்,  கண்ணனோட  ரெண்டு கையையும் முழுசா எடுத்துக்குது. தூங்கும்போதுகூட விடறதில்லையாம்.
அதை நினைச்சாவே ஏக்கமா இருக்கு. நான் அந்த மூங்கிலா பிறந்திருக்ககூடாதா?

அதையெல்லாம் வேற நியாபகப்படுத்திட்டியா? இன்னிக்கு நான் வீட்டில்போய் வேலை செஞ்சா மாதிரித்தான்.

சரி, எல்லாரும் சும்மா இருங்க. ராதா, எங்களைக் கொஞ்சம் காப்பாத்து. 

என்ன செய்யச் சொல்றீங்க? மறுபடி கண்ணன்கிட்டபோய் சமாதானமெல்லாம் என்னால் பேசமுடியாது.

நீ பேசின அழகைத்தான் நாங்க பாத்தோமே.  இன்னும் கொஞ்சம் விட்டா, அவனை எப்போதும் நிறுத்தாம வாசிக்கச் சொல்லியிருப்பியே..

என்னை என்னதான் பண்ணச் சொல்றீங்கடீ?

அம்மா ! ராதாராணி, நீ ஒரு உதவி மட்டும் செய் போதும். 

என்ன? 

நீ போய் அவனுடைய புல்லாங்குழலை எப்படியாவது திருடிண்டு வந்துடு.

புல்லாங்குழலைத் திருடறதா? அவனே பெரிய...

உள்ளத்திருடன். அதானே? ஆமாம். அதனால் நீ போய் அந்த வேணுவைக் கொண்டு வா. 

எப்படிடீ?

வா நான் சொல்றேன், விசாகா ராதாராணியை அழைத்துக்கொண்டு சென்றாள்.

கார்வண்ணன் தன் கமலவிழிகளை மூடி, ஒரு வளைந்திருந்த மரத்தின் கிளையில் அறிதுயில் கொண்டிருந்தான். 

நடந்தால் சலங்கையிசைக்கு விழித்துக்கொள்வான் என்று அதைக் கழற்றி விசாகாவிடம் கொடுத்துவிட்டு, வெண்ணெய் திருடும் கண்ணனைப் போலவே பைய பைய  நடந்து அவனருகில் சென்றாள் பர்சானா இளவரசி.

அவளது அன்பையே நினைத்து அல்லும் பகலுமாய் ஏங்கும் கண்ணன் அவள் அருகில் வந்தால் உணரமாட்டானா?

அசையாமல், விழிமூடி இதயத்தால் அவளைப் பருகிக் கொண்டிருந்தான். 

மெதுவாய் அவன் இடுப்பிலிருந்த குழலை ‌உருவினாள். விழித்துக் கொள்வதற்குள் ஓடிவிடலாம் என்று புள்ளிமானைப்போல் துள்ளி ஓட ஆரம்பித்தாள்.

சலங்கையிசை கேளாவிட்டாலென்ன? ராதையின் கைவளையிசை, இடுப்பின் கிண்கிணியிசை, அவளது குண்டலங்கள் காதோடு இசைக்கும் இசை, நடக்கும்போது எழும் உடையின் இசை அனைத்துமே அறிந்தவனாயிற்றே..

பிடியைக் களிறு தொடர்வதைபோல் தொடர்ந்து ஓடினான். 

இந்தக் காட்சியைக் கண்ட மரங்களும் கொடிகளும் பூமாரி பொழியத் துவங்கின. 

ராதா நில். எங்க ஓடற?

துரத்தி வளைக்கரத்தைப் பிடித்து அவளை வளைத்தான். 

உனக்கு என் புல்லாங்குழல் மட்டும் போதுமா?
என்னைக் கேட்டா நானே தந்திருப்பேனே.

வெட்கத்தால் இதழ்கள் மௌனம்  சாதித்தன. விழிகள் ஆயிரம் கதைகள் பேசின. 

சரி, எதுக்கு உனக்கு இந்தக் குழல்?

தயங்கித் தயங்கிச் சொன்னாள்,
நானும் வாசிச்சுப் பாக்கலாம்னு...

உனக்கு வாசிக்கத் தெரியுமா?

இல்லையென்று தலையசைத்தாள். 

அப்றம் குழலை மட்டும் எடுத்திட்டுப் போனா எப்படி?என்னைக் கேட்டா நான் சொல்லித்தருவேனே.. வா இப்படி..

அவ்வளவுதான்..

இனி ராதையின் காதில் என்ன ஏறப்போகிறது?

கண்ணன் ராதையின் வாயில் குழலை வைத்து, பின்னால் நின்று குழலின் துளைகள் தடவி இசையமுதம் பெருக்க, ப்ருந்தாவனம் அசைவற்றுப் போனது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37