ப்ருந்தாவனமே உன் மனமே - 25

ப்ரலம்பாசுர வதம்

இன்று எல்லோரும் பாண்டீரவடத்தின் கிளைகளில் அமர்ந்து ஊஞ்சலாடிக் கொண்டிருந்தனர். 
பின்னர் கண்ணன் மற்றும் பலராமன் இருவரின் தலைமையில் இரு அணிகளாகப் பிரிந்துகொண்டனர். சிறிது நேரம் குத்துச் சண்டை போட்டு விளையாடினர். 

பின்னர் ஆலமரத்தின் விழுதைக் கயிறுபோல் திரித்து இருபுறமும் பிடித்து இழுத்து பலப்பரீட்சை செய்தனர்.

ஆயிரக்கணக்கான கன்றுகளாயினும் சரி,  எண்ணற்ற சிறுவர்களாயினும் சரி, அத்தனை பேரின், பெயர்கள், வீடுகள், பெற்றோர், சகோதர சகோதரிகள், உடலின் அங்க அடையாளங்கள் உள்பட எல்லாவற்றையும் தெளிவாய் அறிவான் கண்ணன்.
ஏற்கனவே, அவர்கள் அத்தனை பேரின் உருவத்தையும் தானே ஏற்றவன்தானே.

எனவே, வனத்தினுள் நுழையும்போதே இன்று புதிதாகத் தென்பட்ட ஒரு சிறுவனைக் கவனித்துவிட்டான் கண்ணன். பலராமனைக் கண்ணைக்காட்ட, அவனும் பார்த்துக் கொண்டான்.

புதிய சிறுவனை எதுவும் கேட்காமல் கண்ணன் தனது அணியில் சேர்த்துக்கொண்டான்.

பலப்பரீட்சை ஆரம்பிக்கும் முன், தோற்கும் அணியில் இருப்பவர் அனைவரும் ஜெயிக்கும் அணியிலிருப்பவர்களை ஆளுக்கொருவராய்த் தூக்கிக்கொண்டு ஒரு எல்லவரை ஓடவேண்டும் என்றும் முடிவானது. 

பலப்பரீட்சை துவங்கியது. கண்ணனும் பலராமனும் கயிற்றைப் பிடித்துக்கொண்டு எதிரெதிரே நிற்க, அவர்களது அணியைச் சேர்ந்தவர்களும் வரிசையாய்ப் பின்னால் நின்று வடத்தைப் பிடித்துக் கொண்டனர்.

ஏற்கனவே மந்தர மலையை இழுத்த நினைவு வர, இப்போது கண்ணன் இழுக்காமல் ஒப்புக்குப் பிடித்துக் கொண்டிருந்தான். பலராமன் வேகமாய் இழுக்க, கண்ணனின் பக்கமிருந்தவர்கள்  அனைவரும் போய் எதிரணியின் மீது விழுந்தனர்.

ஒரே கும்மாளமாயிற்று. கண்ணனின் அணி தோற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஒப்பந்தத்தின்படி ஒருவரை ஒருவர் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும்.
பலராமன் அணியிலிருந்த ஸ்ரீதாமாவை கண்ணனும், பலராமனை புதிய சிறுவனும், வ்ருஷபனை வத்ஸன் என்ற சிறுவனும் முதுகில் தூக்கிக்கொண்டு ஓடினர். 

கண்ணனும் வத்ஸனும் குறித்த எல்லை வரை சென்று தூக்கிச் சென்றவரை இறக்கிவிட, புதிய சிறுவன் பலராமனைத் தூக்கிக்கொண்டு வெகுதூரம் ஓடிவிட்டான். 

போதிய தூரம் வந்ததும், பலராமன் தன் எடையை அதிகரித்துக் கொண்டே போனான். அதற்குமேல் அவனைத் தூக்கிக்கொண்டு ஓட முடியாமல் தன் சுயரூபத்தை எடுத்தான் சிறுவனாய் வந்த ப்ரலம்பன் என்ற அந்த அசுரன்.

பலராமன் அவனை ஓங்கி ஒரு அறைவிட, மூக்கிலும் வாயிலும் உதிரம் பெருக்கெடுத்து வீழ்ந்தான் அசுரன்.

அத்தனை சிறுவர்களும் பயந்துபோய்விட்டிருந்தனர்.
கண்ணன் தன் அழகிய சிரிப்பினால் அவர்களது பயத்தைப் போக்கினான். பின்னர் அனைவரும் சேர்ந்து கண்ணனையும் பலராமனையும் தோள்களின்‌மீது ஏற்றிக்கொண்டு சுற்றி சுற்றி வந்து  ஆடிப் பாடினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37