ப்ருந்தாவனமே உன் மனமே - 24
சிவபூஜை
க்ருஷ்ண தரிசனத்திற்கு ஆசைப்பட்டு கோபேஷ்வரராக சிவபெருமான் ப்ருந்தாவனத்தில் காத்திருக்கிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
தினமும் சிவபூஜை செய்வதற்காக ராதை அங்கு வருவது வழக்கம். வரும் வழியில் அவ்வப்போது கண்ணனைக் காண்பதும் உண்டு.
சில சமயம் பெரியவர்களுடனும், சில சமயம் தோழிகளுடனும் வரும் ராதையின் பாதையை நன்கறிவான் கண்ணன்.
நயனங்களோடு முடியும் சம்பாஷணையை இன்று நேருக்கு நேர் நிகழ்த்துவதென்று முடிவு செய்து, கோபேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் வழியில் காத்திருந்தான்.
லலிதா, விசாகா ஆகியோருடன் வந்து கொண்டிருந்த ராதா, விசாகாவை சிவபூஜைக்காக மலர்கள் பறித்துவர அனுப்பினாள். லலிதா யமுனையிலிருந்து அபிஷேகத்திற்கு நீர் கொண்டுவருவதற்காகப் பானையோடு சென்றாள்.
தனித்து வந்த ராதையை வழிமறித்தான் கண்ணன்.
நிமிர்ந்து பார்க்கவில்லை ராதா. கண்ணன் ஒளிந்து நிற்பதைப் பார்த்துவிட்டுத்தான் தோழியரை அனுப்பினாளோ என்னவோ. இருந்தாலும் அவனிடம் பேச வெட்கம் தடையிட்டது.
ராதா நில்லு.
என்னைப் பாரேன்.
கண்ணா வழி விடு.
என்னைப் பாத்துட்டு போகலாம் ராதே.
கண்ணா சிவபூஜைக்காக வந்திருக்கிறேன். நேரமாகிறது. வழி விடு.
சிவபூஜைதானே? நல்லாப் பண்ணலாமே. நானும் உன்னோட சேர்ந்து பண்ணுவேனே. என்னைப் பாரேன்.
அவள் கையைப் பிடிக்க,
கண்ணா விடு நான் மடி.
பூஜை செய்யும்முன் மேலே படாதே.
பூஜை முடிந்ததும் படலாமோ என்று கேட்டுக்கொண்டே அருகில் வர, கோவிலின் உள்ளே ஓடினாள் ராதை.
ஓடாதே ராதே, நில்லேன். ரெண்டு வார்த்தை பேசக்கூடாதா?
கேட்டுக்கொண்டே
தொடர்ந்து துரத்திக்கொண்டு ஓடினான் கண்ணன்.
தரையோடு தரையாய் எந்த வித பரிவாரங்களும் இன்றி க்ருஷ்ண தரிசனத்திற்காக எதிர்பார்த்திருந்த கோபேஸ்வரரைச் சுற்றி சுற்றி ராதை ஓட, கண்ணனும் தொடர்ந்து ஓடினான்.
ஒருவழியாய் ராதையைக் கண்ணன் பிடிக்க,
பரமேஸ்வரன் மிகுந்த ஸந்தோஷத்தோடு ஆவிர்பாவமானார்.
க்ருஷ்ண தரிசனத்திற்கு ஆசைப்பட்ட எனக்கு ராதாக்ருஷ்ணராய் தரிசனம் தந்தீரே என்று மகிழ்ந்தார்.
க்ருஷ்ணனும், நானும் உம்மை தரிசனம் செய்ய மிகவும் விரும்பித்தான் இங்கே வந்தேன் என்று சொன்னான்.
பிறகு, அவரை அமரவைத்து ராதையும் கண்ணனும் இணைந்து சிவபூஜை செய்து மகிழ்ந்தனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment