ப்ருந்தாவனமே உன் மனமே - 23
காட்டுத்தீ
கண்ணனோடு யமுனைக் கரையில் ஒரு இரவு. கற்பனை செய்து பாருங்கள். எப்படி இருக்கும்?
எல்லோரும் நடுவில் மரத்துண்டுகளை கொளுத்திவிட்டு வட்டமாய் அமர்ந்து கொண்டனர்.
மடு முழுவதையும் விஷமாக்கும் ஒரு நச்சுப்பாம்போடு அவன் செய்த நர்த்தனம் ஒரு அதிசய நிகழ்வு என்பதையே மறந்து ஆளாளுக்கு கண்ணனுக்கு
நீ அப்படிச் செய்திருக்கலாம்
இப்படிச் செய்திருக்கலாம் என்று ஆலோசனை கூறிக்கொண்டும், சிரித்துப் பேசிக்கொண்டும் பொழுது கழிந்தது.
அப்படியே பேசிக்கொண்டு அனைவரும் உறங்கினர்.
அப்போது திடீரென்று எங்கிருந்தோ பிடித்துக்கொண்ட நெருப்பு பெரிதாய்ப் பரவியது.
புகையால் அனைவரும் விழித்துக்கொண்டு ஓலமிடத் துவங்கினர்.
அனைவரும் கண்ணனைச் சூழ்ந்து கொண்டனர்.
சிறுவர்கள் புகையினால் மயங்கத் துவங்கினர்.
சட்டென்று அவர்கள் அனைவரையும் விலக்கிவிட்டு சற்றுத் தள்ளி நின்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு காலை அகட்டி நின்று கொண்டு ஹாவென்று வாயைத் திறந்தான்.
அக்னியை வயிற்றில் கொண்டவன். காட்டுத்தீ எம்மாத்திரம்?
பால் தயிரை உறிஞ்சிக் குடிப்பதுபோலவே,
அத்தனை நெருப்பையும் உறிஞ்சினான்.
சற்றுநேரத்தில் நெருப்பு பிடித்துகொண்ட அடையாளம்கூட இல்லை.
எல்லா நெருப்பையும் உறிஞ்சியபின் தன் அமுத நோக்கினால் அனைவரையும் உயிர்ப்பித்தான்.
தன்னைச் சேர்ந்தவர்களைக் காப்பதில் கண்ணனுக்கு நிகர் அவன்தான்.
மறுபடி எல்லாரும் கண்ணனைச்சுற்றி மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடினர். பின்னர் விடியும் நேரமாகிவிட்டபடியால் கிளம்பி வீடு போய்ச் சேர்ந்தனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment