ப்ருந்தாவனமே உன் மனமே – 22
அகில கலாதி குரு:
தன்னைச் சேர்ந்தவர்களுக்கு தன்னைப் பற்றிய கவலையைக் கொடுக்க கண்ணன் விரும்புவதில்லை. தன் பக்தர்கள் தன்னை நினைத்து ஆனந்தப்படுவதையே விரும்புகிறான்.
கரையிலிருக்கும் கோபியரும், பெற்றோரும், நண்பர்களும் கவலைப்படுகிறார்கள் என்றதுமே, தனக்கு ஆபத்தில்லை என்று புரியவைப்பதற்காக காளிங்கன் தலை மீது ஏறினான்.
அகல்யைக்கு உயிர் கொடுத்த திருவடி, மறை தேடும் திருவடி, உலகம் முழுதும் ஓரடியால் அளந்த திருவடி, பிருந்தாவனம் மட்டுமல்ல பாரததேசம் முழுதும் நடந்து தன் முத்திரையைப் பதித்த திருவடி, பிரும்மா பூஜை செய்த திருவடி, கங்கை தோன்றும் திருவடி, தாமரை போன்ற திருவடி, சகடாசுரனுக்கு இடிபோன்ற திருவடி, அப்படிப்பட்ட திருவடி தலையில் பட்டதுமே காளிங்கனுக்கு ஞானம் வந்துவிட்டதாம். அந்தத் திருவடியன்றோ பக்தர்கள் அனைவரின் இருப்பிடம். எனவே அவர்களது ஆதரவும் அவனுக்குக் கிடைத்து, அவனும் பக்தகோஷ்டிகளில் ஒருவனாகிவிட்டான்.
காளிங்கனுக்கு பல தலைகள் இருந்தபடியால், அவன் கண்ணின் திருவடி தன் எல்லாத் தலைகளிலும் பட வேண்டும் என்று விரும்பினான் போலும். கண்ணன் மிதிக்க மிதிக்க அவன் ஒவ்வொரு தலையாகத் தூக்கினான். தூக்கிய ஒவ்வொரு தலையிலும் தன் திருவடியை வைத்தான் கண்ணன். எப்பேர்ப்பட்ட பாக்கியம்! தவம் செய்தானா? வேறு சாதனைகள் செய்தானா? அல்லது பகவானைப் பார்க்கவேண்டும் என்று ஆசையாவது பட்டானா?
வெறும் பிருந்தாவன வாசத்தினால் பகவானின் தரிசனமும் திருவடியும் கிடைத்தது அந்தக் காளிங்கனுக்கு.
காளிங்கனின் ஒவ்வொரு தலையிலும் கண்ணன் தன் திருவடியை வைக்க, அது அழகாக ஒரு தாள கதிக்கு ஏற்றாற்போல் அமைந்து நர்த்தனமாயிற்று. ஒரு ஸ்திரமான இடத்தில் ஆடுவதேன்றாலே பல நுணுக்கங்கள் தேவையாய் இருக்க, நீரில், அதுவும் ஒரு பாம்பின் பல்வேறு தலைகளின் மீது, தாளம் தப்பாமல் மாற்றி மாற்றிக் காலை வைத்து ஒரு தலை சிறந்த நாட்டியக்காரன் போல் ஆடும் கண்ணனுக்கு எவ்வளவு நாட்டிய நுணுக்கங்கள் தெரிந்திருக்கவேண்டும்?
இந்த ஒரு கோலத்தையே ஆயிரக்கணக்கான பாடல்களில் பாடித் தள்ளியிருக்கிறார் ஊத்துக்காடு வேங்கட கவி என்ற மஹாத்மா. அகில கலாதி குருர் நநர்த்த என்கிறார் சுகர். யாரிடமும் சென்று படிக்காமலேயே அவனுக்கு எல்லா விதமான கலைகளும் தெரிந்திருந்ததொடு, அத்தனை விதமான கலைகளுக்கும் கண்ணனே குருவாக விளங்கினான். ஆதி சங்கரரும் இதைத்தான் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்கிறார்.
சிறிது நேரம் கழித்து குழலையும் வாசித்துக்கொண்டு ஆடினான் கண்ணன். பார்ப்பவர்களுக்கு கண்ணன் கஷ்டப்படவில்லை, மாறாக விளையாடிக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் வந்துவிட்டது.
காளிங்கன் வலி தாங்காமல் மிகவும் சோர்வடைந்துவிட, அவனது மனைவிகள், அவனை மன்னித்து விட்டு விடும்படி வேண்டினார்கள். கண்ணன் நர்த்தனத்தை நிறுத்த, காளிங்கனும் கண்ணனின் திருவடி பணிந்தான்.
கண்ணன், அவனைப் பார்த்து
உனது விஷத்தால் இங்கு அனைவரும் துன்பப்படுவது தெரியவில்லையா? நீ உடனே இங்கிருந்து உனது இடமான ரமணகத் தீவிற்கே செல். அது கடலின் நடுவில் இருப்பதால், யாருக்கும் உன் விஷத்தால் தொல்லை இருக்காது என்றான்.
காளிங்கனோ, அங்கு கருட பகவான் வந்து தன்னை பலி கேட்டு மிரட்டுவதாகவும், அவருடைய தொல்லையில் இருந்து தப்பிக்கவே இங்கு வந்ததாகவும் கூறினான்.
பகவான், என் திருவடிகள் உன் தலை மீது முத்திரை போல் பதிந்திருப்பதால், இனி கருடனால், உனக்கும் உனது வம்சத்தாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்காது. எனவே பயமின்றி திரும்பிச் செல் என்று அபயம் அளித்தான்.
காளிங்கனும், நான் பெரும் பேறு பெற்றேன் என்று கூறிக்கொண்டு மகிழ்ந்து தன் பரிவாரங்களுடன் மடுவை விட்டு யமுனை நதியின் வழியாகவே, சமுத்திரத்திற்குக் கிளம்பினான்.
கரைக்கு வந்த கண்ணனைக் கட்டித் தழுவி உச்சி மோந்தனர் யசோதையும் நந்தனும். அனைவருக்கும் போன உயிர் திரும்பி வந்தாற்போலாயிற்று. அதற்குள் மிகவும் இருட்டிவிட்டதால், காட்டுவழியில் இனி திரும்பிச் செல்லவேண்டாம். இன்றிரவு அனைவரும் யமுனைக் கரையிலேயே உறங்கலாம் என்று அனைவரையும் கலந்தாலோசித்து முடிவெடுத்தான் நந்தன்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரசானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment