ப்ருந்தாவனமே உன் மனமே - 21

மனமெனும் காளீயன்

பகவானுக்கு அத்தனை வித்யைகளும் சொந்த ஐஸ்வர்யமாய் விளங்குகின்றன.
ஒரு கை தேர்ந்த நீச்சல் வீரனைப்போல் மரத்தின் உச்சியிலிருந்து காற்றைக் கிழித்துக்கொண்டு  நீருக்குள் பாய்ந்தான் ஆறாம் வயதை நெருங்கிக்கொண்டிருந்த கண்ணன். 

தூரத்திலிருந்து அவன் நதிக்குள் பாய்ந்ததைக் கவனித்துவிட்டான் நதிக்கரைக் காவலன் ஒருவன்.
மற்ற வீரர்களுக்கும் சமிக்ஞை செய்துவிட்டு கண்ணனைப் பிடிக்க நீரில் பாய்ந்தான். ஆனால் பாவம் அந்த வீரன் நீரில் விழுந்த வேகத்தில் உடனே மயங்கிவிட்டான். அந்த அளவிற்கு நீர்முழுவதுமே விஷமாகிவிட்டிருந்தது.
அதைக் கண்டதும் வீரர்கள் பயந்துபோய் நந்தனுக்கு செய்தி சொல்ல ஓடினர்.
எப்பேர்ப்பட்ட விஷமானாலும் அது கண்ணனை என்ன செய்து விட முடியும்?

நல்ல ஆழமான மடு. அதனடியில் செல்லச் செல்ல மற்ற மீன்களோ, வேறு சிறு உயினங்களோகூட இல்லை. நீரின் விஷம் ஏற ஏற அவை வேறிடம் சென்றுவிட்டன போலும்.

மீன்குட்டியைப் போல் நீருக்குள் நுழைந்து நுழைந்து காளியனைத் தேடினான் கண்ணன்.
நீருக்கடியில் குகைபோன்ற  பாறையமைப்பினுள் லேசான வெளிச்சம் தென்பட்டது.
வெளிச்சத்தை நோக்கி மெதுவாக முன்னேற, உள்ளே பல தலைகளைக் கொண்ட ஒரு பெரிய நாகம் புஸ்..புஸ்.. என்று மூச்சு விட்டுக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தது. அதன் தலையிலிருந்த ரத்தினங்கள் ஒளிவீசிக்கொண்டிருந்தன. இன்னொரு சிறிய நாகம் கண்ணனைப் பார்த்ததும் மெதுவாய் அருகே வந்து கைகூப்பி திரும்பிப் போய்விடுமாறு சைகை செய்தது.
காளியனின் மனைவியாய் இருக்கவேண்டும். 

அதற்குள் ஏற்பட்ட சிறு சலசலப்பில் விழித்துக் கொண்டான் காளீயன்.
அழகே உருவாய் ஒரு சின்னஞ்சிறு பாலகனை எதிரில் கண்டான். தன்னிடத்தில் வந்து தைரியமாக  நிற்பவனுக்கு முதலில் பாடம் புகட்டுவோம் என்று நினைத்தான்.

ஒரே தாவலில் கண்ணனை முழுதுமாய்ச் சுற்றிக்கொண்டான்.
இதற்குள் நந்தனுக்குத் தகவல் பறக்க, அவனோடு அனைவரும் நதிக்கரைக்கு வந்துவிட்டனர்.

திடீரென்று நீரின் மேல் கண்ணனை முழுதுமாய்ச் சுற்றிக்கொண்டு காளிங்கன் தென்பட, 
கண்ணா கண்ணா என்று அல்றிக்கொண்டு யசோதையும் மற்ற கோபியரும் மூர்ச்சித்து விழுந்தனர்.
நந்தகோபன் தானே நீரில் இறங்கத் துடித்தான். அவனை பலராமன் கட்டுப்படுத்தி

அப்பா, பதறாதீங்க. கண்ணனுக்கு ஒன்னும் ஆகாது. வந்துடுவான். நம்ம வீட்டுக்கு கர்கர் மாதிரி எத்தன ஸாதுக்கள் வந்திருக்காங்க? அவங்கல்லாம் கண்ணன் தீர்காயுசா இருப்பானு ஆசீர்வாதம் பண்ணிருக்காங்க.. அவங்களை நம்புங்கப்பா, கண்ணன் பத்திரமா வருவான் 
என்றான்.

ஸாதுக்கள் என்று சொன்னதும் நந்தனுக்கு மனம் சற்று சமாதானமடைந்தது.

கோபிகள்‌ மற்றும் மற்ற சிறுவர்கள் எல்லாரும் பயப்படுவதை அறிந்து கண்ணன், ஒரு முடிவுக்கு வந்தான்.

தன் உடலைப் பெரிய தாக்கிக் கொண்டே போக, இறுகச் சுற்றிக்கொண்டிருந்த காளிங்கன் பிடியைத் தளர்த்தினான்.

பாம்புக்கு உடல் முழுதும் சுவாசம் ஓடும். கண்ணன் உடலைப் பெரியாதாக்க ஆக்க, காளிங்கனுக்கு இறுக்கத்தினால் மூச்சு முட்டியது. சட்டென்று உடலைச் சிறியதாக்கி காளிங்கன் சுதாரிப்பதற்குள் அவன் பிடியிலிருந்து வெளியே வந்தான் கண்ணன். அவனது வாலைப் பிடித்துக்கொண்டு ஒரு தாவலில் காளிங்கனின் தலைமீது ஏறினான் கோபாலன்.

அந்தக் காட்சியைக் கண்டதும்தான் கோப கோபியருக்கு உயிரே வந்தது. 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37