ப்ருந்தாவனமே உன் மனமே - 19

தேனுகாசுரனின் பேறு

ப்ருந்தாவனத்தின் ஒவ்வொரு மண் துகளிலும் உமது பாதம் பட்டிருக்கிறது. இவ்வனத்தின் மரம் செடி கொடிகளெல்லாம் உம்மைப் பார்த்து மகிழ்கின்றன. நீர் சஞ்சாரம் செய்வதால் இந்த பூமி மகிழ்கிறது. யமுனையின் நீர் பவித்ரமடைகிறது
என்றெல்லாம் அடிக்கடி கண்ணன் பலராமனுக்கு மதிய வேளைகளில் பணிவிடை செய்துகொண்டே சொல்வான்.

போன அவதாரத்தில் பகவானுக்கு இளவலாய்ப் பிறந்தபடியால், இவற்றையெல்லாம் லக்ஷ்மணன் ராமனுக்குச் செய்தான். 
கைங்கர்யத்தில் மிகுந்த ஆசையிருப்பதால், ப்ரும்மா பிறக்கலாம் என்று சொன்னதும் அவசரப்பட்டு பகவானுக்கு முன்னால் அண்ணனாகப் பிறந்துவிட்டான். 
அதனால் இப்பொழுது பகவான் அவனுக்கு சேவை செய்யும்படி நேர்ந்துவிட்டது.
பலராமனுக்கு சங்கோஜமாய் இருந்தாலும் பகவானின் விருப்பப்படி நடக்கட்டும் என்று விட்டுவிட்டான்.
அதுவல்லவோ உண்மையான கைங்கர்ய லக்ஷணம்?

இவ்வாறு பலராமனுக்கு கண்ணன் சேவை செய்து கொண்டிருந்த ஒரு வேளையில், ஸ்தோஹ க்ருஷ்ணனும், ஸ்ரீதாமாவும் ஓடிவந்தார்கள்.

கண்ணா, இங்கே பக்கத்தில் நிறைய பனைமரம் இருக்கு. அதோட பழமெல்லாம்‌ மிகவும் ருசியா இருக்கும். வாசனை மூக்கைத் துளைக்குது. எங்களுக்கு அந்த பனம்பழம் வேணுமே..

ஆனால், அதை தேனுகன்னு ஒரு ராட்சஸ கழுதை காவல் காக்குது. கிட்டபோக பயமா இருக்கு கண்ணா நீ வாயேன்..

கேட்டதும் கண்ணனும் பலராமனும் கிளம்பினார்கள்.
தேனுகன் கம்சனால் அனுப்பப்பட்ட அரக்கனாவான். கண்ணன் பலராமனைக் கண்ணைக்காட்ட, அவன் அசுரனை நோக்கி ஓடினான். வேகமாய் வரும் பலராமனைக் கண்டதும் ஆக்ரோஷமாய் கர் கர் என்று கத்திக்கொண்டு பாய்ந்து வந்தான் தேனுகன். குனிந்து தப்பித்துக் கொண்ட பலராமன் ஓடிச் சென்று தேனுகனின் இரு பின்னங்கால் களையும் பிடித்துக் கொண்டான். கண்ணன் வத்ஸாஸுரனை அடித்தது போலவே தேனுகனை சுழற்றி மேலே ‌அடித்தான் பலராமன். தேனுகன் அலறிக்கொண்டு பனைமரங்களின் மேல் விழுந்தான்.

பனை மரங்கள் சடசடவென்று முறிந்து விழுந்தன.
பழுத்த‌ பழங்களோடு சேர்ந்து அலறிக்கொண்டு கீழே விழுந்து உயிரை விட்டான் தேனுகன். அவனது ஆன்மா கண்ணனின் உடலில் கலந்தது.

தேனுகனோடு காவலுக்காக கழுதை உருவிலிருந்த மற்ற அசுரர்களும் ஓடிவர, கண்ணனும் பலராமனுமாய் அத்தனை அரக்கர்களையும் வீழ்த்தினார்கள்.

கோபச் சிறுவர்கள் எல்லோரும் பனம்பழங்களை ஆசையாகச் சுவைத்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37