ப்ருந்தாவனமே உன் மனமே - 18

தனியே வந்த சிவனார்
 
கண்ணன் பிறந்தவுடனேயே பரமேஸ்வரன் புதிதாய்ப் பிறந்த குழந்தையைப் பார்க்கும் ஆவலில் புறப்பட்டார்.

பார்வதியை அழைக்க, அவளோ அங்கு செல்லும் பெண்கள் எவரும் வீடு திரும்பாமல் யசோதை வீடே கதியென்று கிடக்கின்றனர். அவ்வளவு அழகான குழந்தையைப் பார்த்து நானும் மயங்கி நின்றுவிட்டால் கைலாயத்தில் எப்படி குடும்பம் நடத்துவது? 
நான் வரவில்லை என்றாள்.

அதுவும் சரிதான் என்று வாகனமான நந்தியை செல்வதற்காக அழைத்ததும், நந்தி பகவான் நான் வரவில்லை. அவனோ கோபாலன், மாடு மேய்க்கவே அவதாரம் செய்தவன் போலிருக்கிறான். பசுக்கூட்டங்களும் மயங்குகின்றன, நான் மயங்கினாலும், இல்லை அவனே என்னைக் கட்டிவிட்டாலும் திரும்பி வர இயலாமல் போகும். உமக்குச் செய்யும் கைங்கர்யமும் கெடும் என்றார்.

இதில் அழகென்னவென்றால், கைங்கர்யம் செய்ய விழைபவர்கள் பகவானின் அழகில் ஈடுபட்டால் கைங்கர்யம் கெடுமென்று அவனது அழகின் மயக்கத்தையே த்யாகம் செய்கின்றனர். 

 தலையிலிருந்த கங்கையும் சிவனுடன் வரமறுத்தாள். ஏனெனில், நானோ பகவானின் பாத தீர்த்தம்தான். கண்ணன் யமுனையிலோ அப்படி விளையாடுவான். என் இளையவளான யமுனை என்னைப் பழிப்பாள் என்றாள்

பரமேஸ்வரனின் உடலில் இருந்த நாகங்களும் வரவில்லையென்று கீழிறங்கிவிட்டன. காரணம் யாதெனில், அகாசுரன் என்ற பாம்பிற்கு வைகுண்டம் அளிப்பதுகூடப் பரவாயில்லை. காளியன் தலைமீது அந்த ஆட்டம் ஆடுபவன். என்னைப் பார்த்தால் என்னையும் பிடித்துக் கொண்டால் திரும்பி வரமுடியாது போகும் என்றன.

இப்படியாக கண்ணனைப் பார்க்க பரமேஸ்வரனுடன் வருவதற்கு ஒருவரும் தயாரக இல்லை.

அதனால், அவர் பார்வதி, கங்கை, நந்தி, பாம்புகள் எதுவுமின்றி யோகேஸ்வரர் போல் வந்து நந்தன் வீட்டு வாசலில் நின்று குழந்தையைப் பார்க்கவேண்டுமென்று கேட்டார்.

அப்போதுதான் பூதனையின் அழகில் மயங்கி மஹாலக்ஷ்மி என்று நினைத்து ஏமாந்துவிட்டிருந்தபடியால், பரமேஸ்வரனின் கோலத்தைப் பார்த்து யசோதைக்கு சமாதானம் ஏற்படவில்லை. எனவே, கண்ணனைக் காண அனுமதி மறுத்துவிட்டாள்.

போலியை நிஜமென்று ஏமாறுவதும், உண்மையான ஞானியை சந்தேகப்படுவதும் உலக இயல்பென்று ஸ்ரீமத் பாகவதம் காட்டுகிறது.

தாயின் அனுமதியின்றி குழந்தையை எப்படிக் காண இயலும்?

எனவே, தனது உள்ளத்தை பகவான் அறிவான் என்பதால், அவன் தானே வந்து தரிசனம் தரும்வரை ப்ருந்தாவனத்திலேயே தங்கியிருக்க முடிவு செய்தார் பரமேஸ்வரன்.

கோபேஸ்வரர் கோவில்தான் ப்ருந்தாவனத்தில் இருக்கும் ஒரே ஒரு சிவன் கோவில். இன்றும் அவருக்கு தேவியோ, நந்தியோ, நாகாபரணமோ, கிடையாது.

இந்த கோபேஸ்வரருக்கு கண்ணன் தரிசனம் அளித்த லீலையை பின்னர் காண்போம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37