ப்ருந்தாவனமே உன் மனமே - 17
லீலாவிநோதன்
ஒரு வருடத்திற்குள் இன்னொரு விந்தையும் நடந்தது.
அகாஸுர வதத்தன்றே ப்ரும்மா குழந்தைகளயும் கன்றுகளையும் கவர்ந்து சென்றார். அன்று கண்ணன் பலராமனை வேண்டுமென்றே விட்டு விட்டு வனத்திற்குச் சென்றான். எனவே, பலராமனுக்கு, அன்று நடந்தவை எதுவும் தெரியாது.
வீடு திரும்பியதென்னவோ கண்ணன் மட்டும்தான். அவனே எல்லா உருவங்களிலும் திரும்பினான். அன்றிலிருந்து ஒரு வருடத்திற்கு தினமும்
காலை வழக்கம்போல் தன்னைத்தானே மேய்த்துக்கொண்டு தனது வடிவங்களுடனேயே கூடவே பலராமனையும் அழைத்துக்கொண்டு வனம் சென்று மாலை அவ்விதமே திரும்பினான்.
பலராமன் ஆதிசேஷனின் அவதாரம். கண்ணனின் மாயங்கள் அனைத்தும் அறிந்தவன். தசாவதாரத்தில் ஒரு அவதாரமாகவே கருதப்படுபவன். அவனால்கூட வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கண்ணனின் திருவிளையாடல் அமைந்திருந்தது.
பெரிய பசுக்களை சற்று பெரியவர்கள் மேய்ப்பது வழக்கம். கன்றையும் பசுவையும் ஒன்றாய் மேய்வதற்கு அழைத்துச் செல்வதில்லை. அவ்வாறு சென்றால் வீடு வந்ததும் கறக்கப் பால் இருக்காது. கன்றும் அளவு தெரியாமல் குடித்து விட்டால் உடல்நலக்கோளாறு ஏற்படலாம், இப்படிப் பல காரணங்கள் உண்டு.
பெரியவர்கள் பசுக்களைத் தனியாக வேறிடத்தில் மேய விடுவார்கள். ஒருநாள், கன்று மேய்க்கும் சிறுவர்கள் திசையறியாது பசுக்களை மேய்க்கும் இடத்தின் அருகே வந்துவிட்டர்கள்.
அதுவும் கண்ணனின் திருவுளமே. அவன் தன் விளையாடலை பலராமனுக்கு உணர்த்த விரும்பினானென்றே சொல்லவேண்டும்.
வழக்கமாய் கன்றுகள்தான் தாய்ப்பசுக்களைத் தேடி ஓடும்.
தூரத்தில் கன்றுகளைப் பார்த்ததும் இன்று பசுக்கள் ஓடிவந்தன. ஆயர்கள் அவற்றை எவ்வளவு முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை.
அத்தனை பசுவும் சிறிய கன்றுகளை விட்டு கண்ணனே உருவான பெரிய கன்றைக் கொஞ்சிக் கொண்டிருந்தன. அவற்றைப் பிடிக்க பின்னாலேயே ஓடிவந்த ஆயர்கள், தங்கள் குழந்தைகளைப் பார்த்ததும் வந்த வேலையை மறந்துவிட்டு, அவர்களை மடியில் வைத்துக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்தனர்.
எவ்வளவு விசித்திரம்?
இதுபோல் ஒருநாளும் பார்த்ததேயில்லை.
பலராமனுக்குத் தலை சுற்றியது.
ஏன் இவ்வாறு நடக்கிறது? குழம்பிப் போனான். பிறகு சற்றுத் தெளிந்து தன் ஞானத்ருஷ்டியைப் பயன்படுத்திப் பார்த்தால், அவனுக்கு மயக்கமே வந்துவிட்டது.
அத்தனையும் கண்ணன், கன்றும் கண்ணன், கயிறும் கண்ணன், குழந்தைகளும் கண்ணன்... எல்லாம் கண்ணன்.
இப்போதுதான் அவனுக்கு பசுவும் ஆயர்களும் ஏன் குழந்தைகளை நோக்கி ஓடிவந்தனர் என்று புரிந்தது. இறைவனே அவர்களது குழந்தையானால், ஏன் ஓடி வர மாட்டார்கள்?
மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு, நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டு, பலராமனையே பார்த்துக் கொண்டிருந்த கண்ணனிடம் வந்தான்.
கண்ணா, என்ன இது? எப்படி எல்லாமும் நீயே ஆனாய்? என்ன நேர்ந்தது? எந்நேரமும் உன்னுடனேயேதானே இருக்கிறேன்? எனக்கும்கூடத் தெரியாமல், என் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எப்படி இப்படி ஒரு மாயத்தை நிகழ்த்தினாய்?
நிஜமான கன்றுகளும் குழந்தைகளும் எங்கே?
அடுக்கடுக்காய்க் கேள்விகள் கேட்ட பலராமனைப் பார்த்து அழகாய் சிரித்த கண்ணன்,
இவ்வளவு தூரம் அனைத்தும் நான்தானென்று கண்டுகொண்டாயல்லவா? அதையும் கண்டுபிடியேன்
என்றான்.
பலராமன் மறுபடி தனது ஞான த்ருஷ்டியால் எல்லாவற்றையும் உணர்ந்தபின், ப்ரும்மா கொண்டுபோனவர்கள் எப்போது வருவார்கள் கண்ணா?
என்று கேட்க,கண்ணன் சொன்னான்,
கொண்டுபோனவருக்கு திரும்பக் கொண்டுவிட வழி தெரியாதா? எல்லாம் தானே வருவார் என்றான்.
கண்ணனைப் பார்த்து பலராமன் வணங்க எத்தனிக்க, சட்டென்று எழுந்த கண்ணன்,
அண்ணா அண்ணா நீங்க போய் என்னை வணங்கலாமா? இந்தப் பிறவியில் நீங்கதான் பெரியவர். உமக்குத்தான் நான் சேவை செய்யணும். நீங்க படுத்துக்கோங்க. நான் கால் பிடிச்சு விடறேன் என்று அவனைப் படுக்கவைத்து காலைப் பிடித்துவிட ஆரம்பித்தான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment