ப்ருந்தாவனமே உன் மனமே - 16

ப்ரும்ம மோஹனம்

கன்றுக்குட்டியின் வாலின் நுனியிலுள்ள முடியின் நிறம் முதல் சிறுவர்களாகவும், அவர்களின் உடைமைகளாகவும் தானேயான கண்ணன், தன்னைத்தானே மேய்த்துக் கொண்டு, தானே தன் உருவங்களோடு ஆடிப் பாடி விளையாடிக்கொண்டு மாலையாகிவிட்டதால் வீடுகளுக்குத் திரும்பினான்.

எல்லா கோப கோபியருக்கும் எப்போதுமே தங்கள் குழந்தைகளைவிட, கண்ணன் மீது ப்ரியம் அதிகம். ஆனால், இன்று முதல், வழக்கத்திற்கு மாறாக, அவர்கள் கண்ணன் மீது எத்தகைய அன்பை வைத்திருந்தார்களோ அதே அன்பைத் தங்கள் குழந்தைகளின் மீதும் செலுத்தினார்கள்.

எப்போதும் அன்னையானவள் நான் கைந்து வயதான குழந்தைவிட, புதிதாய்ப் பிறந்த குழந்தையின் மீது சற்று கூடுதல் கவனம் செலுத்தவேண்டியிருக்க, இப்போது அந்த அன்னையர் புதிதாய்ப் பிறந்து பாலுக்கழும் குழந்தையைக்கூட விட்டு விட்டு பெரிய குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தனர். யாருக்குமே அது விசித்ரமாய்ப் படவில்லை, ஏனெனில், எல்லோரும் அவ்விதமே நடந்துகொண்டனர். காரணம் கண்ணனே பெரிய குழந்தையின் வடிவில் இருந்ததுதான்.

இவ்வாறு பல வேடிக்கைகளைக் கண்ணன் நிகழ்த்திக் கொண்டிருக்க, அங்கே ஸத்ய லோகம் அமளி துமளிப்பட்டது.

கன்றுகள் சாணியும், கோமியமுமாய்க் கொட்ட, கோபச் சிறுவர்கள் அங்குமிங்கும் ஓடிச் செய்த விஷமங்களை சச்சு மாமியால் சமாளிக்க முடியாமல் போக, ப்ரும்மா அனைவரையும் உறக்கத்தில் ஆழ்த்திவிட்டு, கண்ணன் தேடி வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்தார்.

காத்து காத்துப் பார்த்து ப்ரும்மாவுக்கு எட்டுக் கண்களும் பூத்துப் போனதுதான் மிச்சம்.
கண்ணன் வரவில்லை. என்னவாயிருக்குமென்று குழம்பிப் போனார். சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று ஸ்ரீவனம் வந்தால் எல்லாரும் அப்படியே இருந்தனர். ஒன்றுமே புரியாமல், மறுபடி ஸத்யலோகம் சென்று தான் கவர்ந்துவந்த குழந்தைகளைப் பார்த்தால், அவையும் உறங்கிக் கொண்டிருந்தன. மறுபடி கீழே வந்தால் அங்கும் அனைவரும் இருந்தனர்.

நமக்குக் குழப்பம் வந்தால் ஒருதலை சுற்றும். ப்ரும்மாவிற்கு நான்கு தலைகளும் சுற்றின.
எது உண்மை, எது போலியென்று தெரியவில்லை. 
பெரும் குழப்பத்தால் தலைகளைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டார்.

இப்போதுதான் அவருக்கு உறைத்தது, தான் விளையாட நினைத்தது தன்னையும் படைத்த பகவானிடம் என்று..
தன்னைப் படைத்து, தன்னிடம் படைப்புத்தொழிலை ஒப்படைத்த பகவானுக்கு குழந்தைகளையும் கன்றுகளையும் படைக்க முடியாதா என்ன?

பெரும் தவறு நிகழ்ந்து விட்டது..
தகுதி பார்க்காது அருளும் கருணைகொண்ட இறைவனின் நீர்மையை சோதித்தாயிற்று.

என்ன செய்வது?
ஒரே வழி உணர்ந்து மன்னிப்பு வேண்டுவது. பகவான் கருணைக்கடல்.
தவற்றை உணர்ந்துவிட்டால் மன்னிப்பு உடனே வழங்கப்படும்.
ப்ரும்மா உணர்ந்து விட்டார் என்று தெரிந்ததும் எல்லாவற்றையும் தன்னுள்ளேயே அடக்கிகொண்டான் பகவான்.
உறங்கிக் கொண்டிருந்த அத்தனை பேரையும் மறுபடி கொண்டுவந்து விட்டு விட்டு பகவான் முன் மண்டியிட்டார்..

தன் நிலை உணர்ந்து விட்டதாக வும், இனி எப்போதும் கர்வம் கொள்ளாமல் இறைச் சிந்தனையே கொண்டிருக்கவும் வேண்டிக்கொண்டு ஸத்யலோகம் திரும்பினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37