ப்ருந்தாவனமே உன் மனமே – 15
மாயையின் பலம்
கையில் தயிர்சாதமும், விரலிடுக்குகளில் ஊறுகாய்களுமாக, கன்றுகளைத் தேடிக் கிளம்பினான் கண்ணன்.
தன்னை விட்டு விட்டு எங்கும் போகக்கூடியவை அல்லவே. ஒருவேளை ஏதேனும் அசுரனின் வேலையாக இருந்தால்கூட, அவற்றிற்கு மாய சக்திகள் கண்ணுக்குத் தெரியுமாதலால், ஒரு மாதிரி குரல் கொடுக்கும், அமைதியின்றி அலையும், பிறகு, கண்ணனைத் தேடித்தான் ஓடிவருமே ஒழிய, அவனது கண் பார்வையை விட்டகலமாட்டா.
குழலை ஊதிக் கூப்பிட்டுப் பார்க்கலாம் என்றால், கையில் பாதி சாப்பிட்ட சாதம் இருந்தது. மறு கையில் குச்சி வேறு. அப்படி எங்கே தான் போய்விடும் பார்க்கலாம், கிடைக்கவில்லையெனில் கூப்பிடுவோம் என்று நினைத்து, நதியைக் கடந்து, புல்வெளியையும் தாண்டிச் சிறிது தூரம் வந்து தேடிப்பார்த்தான். அவற்றின் குளம்படிகூடத் தென்படவில்லை.
தேவைப்பட்டாலொழிய , தனது ஞானத்தையோ, திவ்ய சக்திகளையோ பயன்படுத்துவதை இறைவனும் சரி, ஞானியரும் சரி விரும்புவதேயில்லை. அவர்களுக்கு தனது ஞானத்தை மறைத்துக்கொண்டு பக்தனோடு பக்தனாக கலந்து பழகுவதே எப்போதும் விருப்பமாயிருக்கிறது.
காட்டிலும் சிறிது தூரம் சென்று அலைந்து தேடிப்பார்த்தான். ஒவ்வொரு கன்றின் பெயராக விளித்துப் பார்த்தான். வழக்கமாய் அவன் குரல் கேட்டாலே, தன்னைத்தானோ என்று நினைத்து ஓடிவரும் கன்றுக்குட்டிகள் போன சுவடே இல்லை.
சரி, தனியாகக் காட்டில் அலையவேண்டாம். ஏற்கனவே, காலையில், தன்னை விட்டு விட்டுத் தனியாகச் சென்ற குழந்தைகள் அகாசுரனிடம் மாட்டிக்கொண்டது நினைவுக்கு வர, உண்டு முடித்துவிட்டு, அவர்களையும் அழைத்துக்கொண்டே வந்து காட்டில் தேடிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, திரும்பி யமுனைக் கரைக்கே வந்தான்.
அங்கே ஆற்றின் நடுவில் மணல் திட்டில் அவன் விட்டு விட்டு வந்த சிறுவர்களையும் இப்போது காணவில்லை. அவர்கள் உண்ணும்போது போடும் கறிவேப்பிலை போன்றவைகளும், சிந்திய உணவும் தான் தென்பட்டதேயன்றி, அவர்களது உடைமைகள், குச்சி, தூக்குச் சட்டி போன்ற எதையும் காணோம்.
கண்ணன் சற்று யோசித்தான். முதலில் கன்றுகளைக் காணவில்லை. இப்போது சிறுவர்களையும் காணவில்லை. தன்னை வேண்டுமென்றே யாரோ தனிமைப் படுத்தி விளையாடுவதை உணர்ந்துகொண்டான். ஒரு கணம் கண்களை மூடி யாரென்று பார்க்கையில் அவனுக்கு எல்லாம் விளங்கிவிட்டது.
பாரம் தாங்கவில்லையென்று பூமாதேவி முறையிட்டபோது,
யார் மற்ற முப்பத்து முக்கோடி தேவர்களையும் பூமாதேவியுடன் அழைத்துக்கொண்டு, பாற்கடலின் சந்நிதி வாசலில் வந்து இறைவனைப் பார்க்க அனுமதி கேட்டாரோ,
யாரையும் காண அனுமதி தராமலேயே, யாருடைய மனத்தில் மட்டும் அசரீரியாய் பகவான் வந்த காரணத்தை விசாரித்து, தானே அவதாரம் செய்யப்போவதாய் வாக்களித்தானோ,
பகவான் மதுராவில் அவதாரம் செய்து, கோகுலத்தில் விளையாடப் போவதை யார் தேவர்களுக்கு அறிவித்தாரோ,
யார் எல்லா தேவர்களையும் பகவானுக்கு சேவை செய்யும் நோக்கிலும், விளையாடும் ஆசை இருப்பினும் பூமியில் சென்று பிறந்துகொள்ளுங்கள் என்று ஆணையிட்டாரோ,
அந்த பிரம்மாவுக்கு, நமது கண்ணன் கோபர்களுடன் எச்சில் சோறு உண்பதைக் கண்டதும், அவனது நீர்மையைப் பார்த்து இவன் இறைவன் தானா என்று சந்தேகம் வந்துவிட்டது.
மாயை அவ்வளவு பொல்லாதது. படைப்புக் கடவுளான பிரம்மாவே மாயையினால் மோஹம் அதாவது மன மயக்கம் அடைந்தார் என்றால் நாம் எம்மாத்திரம்?
அவனது நாமத்தையும், குருவின் கருணையையும் நம்பி இருப்பவரை மாயை தொடுவதில்லை என்ற ஒரே தைரியத்தில் தான் நாம் இவ்வுலகில் வாழ இயலும்.
கண்ணன் பிரம்மாதான் சிறுவர்களையும் கன்றுகளையும் தூக்கிக்கொண்டுபோய்விட்டார் என்று அறிந்துகொண்டான்.
எதனால் கொண்டு போயிருப்பார்? இவன் இறைவன் தானா, மானுடச் சிறுவன் எனில் அவர்களைக் காணோம் என்று புலம்புகிரானா, இறைவன் எனில், தன்னை திரும்பக் கொண்டுவிட்டு விடச் சொல்லிக் கேட்பானா, என்றெல்லாம் அவர் மனத்தில் எழுந்த கேள்விகளால் அவர் இந்த வேலையைத் துணிந்து செய்துவிட்டிருந்தார். மானுடச் சிறுவனானால் கதையே வேறு. ஒருவேளை இறைவனிடம் தான் இவ்வாறு விளையாடினால், என்ன நடக்கும் என்று அவர் ஒரு கணம் கூட யோசிக்காதது மாயையின் பலம்.
கண்ணன் இப்போது என்ன செய்யலாம் என்று யோசித்தான்? பிரம்மா கொண்டுபோனால் என்ன? நான் ஏன் அவரிடம் சென்று கேட்கவேண்டும்? அவர் விரும்பிக் கொண்டு போயிருந்தால் அவற்றை அவரே வைத்துக்கொள்ளட்டுமே. இந்தக் கன்றுகளின் தாயான பசுக்களுக்கும், சிறுவர்களின் குடும்பத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் அவ்வளவுதானே.. விஸ்வரூபம் எடுத்தவனுக்கு இது ஒரு கஷ்டமா? கண்ணனே அத்தனை பேராகவும் உருக்கொள்ள முடிவெடுத்தான்.
அதென்ன சாதாரணமா?
வெள்ளைத் தோல் பையன் என்றால், வெள்ளைத் தோல், மாநிறமென்றால், மாநிறம், கறுப்பு எனில் கறுப்பு, நெட்டையான உருவம் எனில் நெட்டை, குட்டை உருவம் எனில் குட்டை, அவர்கள் அணிந்திருந்த துணிமணிகள், உள்ளாடைகள், சுற்று வஸ்திரங்கள், தலைமுடி, வாரிக் கட்டியிருந்த விதம், உடலில் அவர்கள் அணிந்திருந்த கயிறோ, குண்டலமோ, கங்கணமோ அவ்வாறே, அவர்களது பழக்க வழக்கங்கள், உடலில் இருந்த மச்சங்கள், சாய்த்து நடக்கும் குழந்தை, ஓட்டைப் பல் என்றால் ஓட்டைப் பல், பேசும் முறை, சில குழந்தைகளுக்கு ர வராது, சிலவற்றிற்கு ள ல வித்தியாசம் தெரியாது, அவர்கள் பேசும் விதம், அவர்கள் கொண்டுவந்த தூக்குச் சட்டி, பித்தளைச் சட்டியோ, அலுமினியச் சட்டியோ, மண் சட்டியோ, கிழிந்த துணியோ, துணியின் நிறமோ, குச்சியோ, அதில் இருந்த மழு, அதைப் போலவே, கன்றுகளிலும், காவி நிறக்கன்று, வெள்ளைக் கன்று, கறுப்புக் கன்று, அவற்றின் மீதிருக்கும் புள்ளிகள், மச்சங்கள், கழுத்தில் கட்டியிருந்த கயிறு, அதில் கட்டியிருந்த மணி, அவை காதை, தலையை ஆட்டும் விதம், அவற்றின் பெயர், எல்லாமே கண்ணனாகி விட்டதால், எந்தப் பெயரைக் கூப்பிட்டால், எந்தக் கண்ணன் திரும்பிப் பார்க்கவேண்டும் என்ற நினைவு, இப்படி எல்லாமே கண்ணனே உருக்கொண்டால், எப்படி இருக்கும்? அந்தக் காட்சியை சற்று நினைத்துப் பாருங்கள்....
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசங்களில் கேட்ட ரஸாநுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment