ப்ருந்தாவனமே உன் மனமே – 14
வன போஜனம்
உஜ்வலன் சொன்னான்,
கண்ணா பசிக்குது. விதம் விதமாக் கொண்டுவந்த சாப்பாடு வீணாப் போறதுக்குமுன்ன சாப்பிடலாம் கண்ணா என்றான்.
அதானே, உனக்கு எப்பவும் சாப்பாட்டில்தான் கவனம்
என்று கேலி செய்துகொண்டே சாப்பிடுவதற்கு இடம் தேடினார்கள். இன்று கொண்டுவந்திருக்கும் உணவு சிறப்பம்சம் வாய்ந்தது எனவே, உண்ணும் இடமும் சிறப்பாக இருக்கவேண்டுமென நினைத்தான் கண்ணன்.
யமுனையின் நடுவில், ஆழம் குறைவான இடத்தில் ஒரு இடம் மேடாக மணல் திட்டுபோல் இருந்தது. அங்கே செல்லலாம் என்று முடிவெடுத்ததும், கன்றுகளை இக்கரையிலேயே மேய விட்டு விட்டு, ஆழம் அதிகமில்லாத காரணத்தால் காலால் தண்ணீரை அளைந்துகொண்டே சோற்று மூட்டைகளை சுமந்துகொண்டு நடந்து எல்லோரும் அந்த மணல்திட்டுக்குச் சென்றனர்.
அவரவர் கொண்டுவந்த உணவு மூட்டையைப் பிரித்ததும், எல்லாக் குழந்தைகளும் ஒன்றுபோல் செய்த காரியம் என்ன தெரியுமா? தங்கள் உணவு மூட்டையிலிருந்து ஒரு பிடி எடுத்து, கண்ணனை நோக்கி
கண்ணா நீ முதலில் சாப்பிடு
என்று நீட்டியதுதான். பழையசோறில்லை, இன்றைக்கு சிறப்பான உணவு வேறு.
எல்லோருக்கும் பசிதான். ஆனால், அவர்களுக்குத் தான் சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. அந்த அன்பைக் கண்டு கண்ணன் நெகிழ்ந்து போனான்.
கண்ணா இதோ பார், லட்டு
ஆ.. வாங்கிக்கொண்டான்.
கண்ணா புளியோதரை சாப்பிடு கண்ணா, அம்மா முந்திரிப்பருப்பெல்லாம் போட்டு செய்திருக்காங்க
இருடா, முழுங்கிக்கறேன். ஆ... காட்ட அந்தக்குழந்தையும் ஊட்டிவிட்டது.
இப்படியாக, எல்லோரிடமும் ஊட்டிவிடச் சொல்லி அத்தனைபேர் கையினாலும் வாயில் வாங்கிக்கொண்டான்.
பிறகு, தானும் மற்ற சிறுவர்களும் கொண்டுவந்ததை எல்லாருக்கும் பகிர்ந்தளித்தான். ஒரு குழந்தை பொருள்விளங்கா உருண்டை கொண்டுவந்திருந்தது. அதை உடைக்க முயற்சி செய்து செய்து பார்த்தும் உடைக்க முடியவில்லை. இரு கைகளாலும் உடைக்க முயல, அது நழுவி ஆற்றில் விழுந்துவிட்டது.
எல்லோரும் சிரித்தனர். என்னசெய்வதென்று தெரியாமல் அச்சிறுவன் இன்னொரு உருண்டையைக் கையில் வைத்துக்கொண்டு கண்ணனுக்கு எப்படி ஊட்டுவது என்று விழிக்க, கண்ணன்,
அதைக் கொண்டாடா, பொருவிளங்கா உருண்டை எனக்கு ரொம்பப் பிடிக்கும். காக்கா கடி கடிச்சுக்கலாம்.
என்று சொல்லி துணியைப் போட்டு காக்கா கடி கடித்தான். அந்தப் பையனுக்கு அப்போதும் தன் கையிலிருந்த மீதி உருண்டையைக் கடிக்க வரவில்லை. எனவே,
கண்ணா, எனக்கு கடிக்க வரலியே
என்றதும்,
என் வாயிலேர்ந்து எடுத்துக்கோடா
என்று கண்ணன் சொல்ல, கண்ணனின் வாயிலிருந்து எடுத்து சாப்பிட்ட அவன்,
இது ரொம்ப நல்லாயிருக்குடா.
என்று கூப்பாடு போட, அவ்வளவுதான், எல்லாப் பிள்ளைகளுக்கும் கண்ணன் தன் கையினால் கொடுத்தது போக, கண்ணனின் வாயிலிருந்தே எச்சில் உணவை எடுத்து உண்டனர்.
இப்படியாக இவர்கள் அமர்க்களம் செய்துகொண்டிருக்க,
மேலிருந்து இக்காட்சியைக் கண்ட தேவர்கள் அனைவரும் விட்ட பெருமூச்சு பூமியை சூடாக்கியது. இவன் நிஜமாகவே இறைவன்தானா, இப்படிக்கூட எளிமையாய் ஒரு தெய்வம் இருக்குமா, பாற்கடலுக்கே சென்றால்கூட மிக அரிதாகவே தரிசனம் தரும் பெருமான் ஆயிற்றே.
யக்ஞ நாராயணனாக விளங்கும் பகவான், இங்கு எச்சில் நாராயணனாக இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த பிரம்மா உள்பட அத்தனை தேவர்களும் குழம்பினர்.
சற்று நேரம் கழித்து, திரும்பிப் பார்த்த ஒரு சிறுவன் கத்தினான்.
கண்ணா, கரையில் மேஞ்சிக்கிட்டிருந்த கன்னுக்குட்டி எல்லாம் காணோம்டா..
கண்ணனும் திரும்பிப் பார்க்க, யமுனையின் கரையில் கூப்பிடு தூரத்தில் இருந்த புல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்த ஆயிரக்கணக்கான கன்றுகளில் ஒன்றுகூட கண்ணுக்குத் தென்படவில்லை.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீமுரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரசாநுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment