ப்ருந்தாவனமே உன் மனமே – 13
பாம்பு மலை
தினமும் கோபச் சிறுவர்கள் பழையதும், வெறும் சோற்றில் நீருமாகக் கொண்டுவந்து உண்ணுவதைப் பார்த்து, மனம் கசிந்த கண்ணன், தாயிடம், தனக்கு விதவிதமான பலகாரங்களை நிறையக் கட்டித்தருமாறு வற்புறுத்துவான்.
உணவு வேளையின்போது, கொண்டு வந்த உணவை அனைவரும் பகிர்ந்து சாப்பிடுவதுதான் வழக்கம். சில குழந்தைகள் தாங்கள் கொண்டு வந்த பழைய சோற்றை கண்ணனுக்கு கொடுப்பதற்கு சந்கோஜப்படுவர். இருந்தபோதிலும், அவர்களிடமிருந்து பிடுங்கி உண்ணும் கண்ணன், தான் கொண்டுவந்ததை அவர்களுக்குக் கொடுப்பான். இருந்தபோதிலும், ஒருநாளாவது எல்லோரும் சகஜமாக நல்ல உணவை உண்ணவேண்டும் என்று ஆசைப்பட்ட கண்ணன், நேற்று மாலை வீடு திரும்பும் சமயம், எல்லாச் சிறுவர்களுக்கும், நாளை வன போஜனம் என்று அறிவித்தததோடு, யார் யார் என்னென்ன உணவு கொண்டு வரவேண்டும் என்று அவர்களது வசதிக்கேற்ப சொல்லி அனுப்பிவிட்டான்.
புளியஞ்சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், தேங்காய் சாதம், சப்பாத்தி, பூரி, தயிர் சாதம், அல்வா, லட்டு, ஊறுகாய் வகைகள், வடை, பால் பேடா, அப்பளங்கள், பக்ஷணங்கள் என்று ஒரு பெரிய நிரலைத் தயார் செய்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகச் சொல்லியனுப்பினான்.
மறுநாள் காலை ஆய்ப்பாடியில் ஒரே அமர்க்களம். எல்லாக் குழந்தைகளும் கண்ணன் கொண்டுவரச் சொன்னான் என்று வீட்டில் சொல்லி, எப்படியோ அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவைத் தயார் செய்ய வைத்து மூட்டை கட்டிக் கொண்டுவந்துவிட்டார்கள். கண்ணனும் சோற்று மூட்டையோடு தயாரானான்.
வழக்கம்போல் ஆடிப் பாடிக்கொண்டு, நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு கண்ணனோடு இணையாய் நடந்து வனத்திற்கு வந்தார்கள்..
பலராமனுக்கு சற்று காய்ச்சல் போலிருந்ததால் ரோஹிணி அவனை நிச்சயமாய் போகக்கூடாதெேன்று சொல்லி நிறுத்திவிட்டாள். அதுவும் கண்ணனின் திருவுளம்தான்.
பிருந்தாவனத்தில் வண்ணப் பூக்களும், பொடிகளும் நிறையக் கிடைக்கும். அதைக்கொண்டு கண்ணனுக்கு வண்ணங்கள் தீட்டி அலங்காரம் செய்து மகிழ்வதோடு, தாங்களும் மீதியிருக்கும் வண்ணப் பொடிகளை தங்கள் முகங்களில் பூசி அழகு படுத்திக்கொண்டு மகிழ்ந்தனர் அந்த ஆயச் சிறுவர்கள். பிறகு கவட்டையும் கல்லும் கொண்டு உயரமான மரங்களில் இருந்த பழங்களை அடித்தனர். பின்னர் மர விழுதுகளைக் கொண்டு ஊஞ்சல் கட்டி கண்ணனோடு ஆடினார். கொண்டுபோன சாப்பாட்டை ஒரு மரக்கிளையில் கட்டித் தொங்கவிட்டிருந்தனர்.
சிறிது நேரமானதும், கண்ணன் மரத்தடியில் சென்று சற்று இளைப்பாறச் சென்றான். கண்ணனோடு விளையாடியதால் உற்சாகமிகுதியால் குழந்தைகள் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தனர், அப்போது, மிக அழகான வண்ணங்களுடன் மலை போன்ற ஏதோ ஒன்று தென்படவே, ஒரு சிறுவன் அருகே சென்று பார்த்து,
இது ரொம்ப அழகா இருக்குடா என்று கத்தினான்.
கண்ணன் திரும்புவதற்குள், எல்லாச் சிறுவர்களும் அதன் அருகே சென்று விட்டனர்.
இது குகை போல் இருக்குடா
என்று சொல்லிக்கொண்டே ஒருவன் அதனுள் செல்ல எத்தனித்தான். அதற்குள் மற்றொருவன் தடுத்தான்.
வேணாம்டா, இதோட தரை பார், அழுத்தினா உள்ள போகும்போல் இருக்கு, பெரிய மலைப்பாம்பு மாதிரி இருக்குடா.
பாம்பு எங்கயாவது இவ்ளோ பெரிசு இருக்குமாடா, உச்சி எங்க இருக்குன்னே தெரியாத அளவுக்கு பெரிசா இருக்கு. இது மலைப்பாம்பில்ல. பாம்பு மலைடா. இதோ பார், இது குகையாத்தான் இருக்கும். உள்ளேர்ந்து வெளிச்சம் வருது பார். மனுஷங்க யாராவது இருக்கலாம். ஏதாவது புதையல்கூட இருக்கலாம். கண்ணனுக்கு கொண்டுவந்து கொடுப்போம்டா.
அவர்களைப் பார்த்துக் கன்றுகளும் ஓடிவர, அவற்றையும் ஓட்டிக்கொண்டு உள்ளே ஏறிச் செல்ல ஆரம்பித்தனர்.
ஒருவன் மீண்டும்
பயமாயிருக்குடா, கண்ணனைக் கூட்டிக்கிட்டு உள்ள போலாம்டா, என
மற்றொருவன் சொன்னான்,
டேய், கண்ணன் பாத்துக்கிட்டுத்தான் இருக்கான். அவனுக்குத் தெரியாம நாம எதாவது செய்ய முடியுமாடா. அப்படியே, எதாவது ஆச்சுன்னாலும், நம்மை அப்படியே விட்டுடுவானா, ஓடிவந்து காப்பத்துவான்டா
என்றதும், கேட்டுக்கொண்டிருந்த கண்ணனின் கண்கள் கசிந்தன.
சட்டென்று எழுந்தவன், கையிலிருந்த கன்று மேய்க்கும் குச்சியைச் சுழற்றிக்கொண்டு அவர்களை நோக்கி நடந்தான்.
அதற்குள் அவர்கள் அனைவரும் உள்ளே சென்று விட, பெரிய மலைக்குகை போல் வாயைத் திறந்துவைத்துக்கொண்டிருந்த பாம்பு உருவத்தில் இருந்த அகாசுரன் கண்ணன் இன்னும் வாய்க்குள் வராததால் வாயைத் திறந்துகொண்டேயிருந்தான்.
உள்ளே சென்ற சிறுவர்களும் கன்றுகளும், பாம்பின் விஷத்தினால் உயிரற்றுப் போக, கண்ணன் ஓடிவந்து அகாசுரன் வாயினுள் காலை வைத்தான்.
கண்ணன் வாய்க்குள் ஏறினானோ இல்லையோ, அகாசுரன் பட்டென்று வாயை மூடிக்கொண்டான். நேராக அவனது வயிற்றுப் பகுதிக்கு ஓடிய கண்ணன், சிறுவர்கள் மற்றும் கன்றுகளின் நிலைமையைப் பார்த்து அகாசுரன் மீது மிகுந்த கோபம் கொண்டு அவனது தொண்டைப் பகுதிக்கு விரைந்து தன உருவத்தைப் பெரிதாக்கிக்கொண்டே போக அசுரனுக்கு மூச்சு முட்ட ஆரம்பித்தது. மேலும் மேலும் உருவத்தைப் பெரியதாக்கிக்கொண்டே போக, அகாசுரன் திணறி திணறி உயிரை விட்டான். அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட ஜோதி அவன் உடலுக்கு வெளியே காத்திருந்தது.
அசுரனின் தலையைப் பிளந்துகொண்டு வெளிப்பட்ட கண்ணன், தன் யோகசக்தியினால் சிறுவர்களையும், கன்றுகளையும் அகாசுரன் வயிற்றிலிருந்து பூமிக்குக் கொண்டுவந்து போட்டான். பிறகு தனது அம்ருத மயமான கடாக்ஷத்தினால் அவ்வளவு பேரையும் உயிர்ப்பித்தான். உடலுக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த அகாசுரனின் ஆன்மா, கண்ணன் வெளியே வந்ததும், அவன் திருவடியில் சென்று தஞ்சமடைந்து ஐக்கியமானது.
பலராமன் ஆதிசேஷ அவதாரமானதால், அவனது பாம்பு குடும்பத்தைச் சேர்ந்த அகாசுரன் வதையின்போதும், காளியனை அடக்கியபோதும், பலராமனின் மனம் வருந்துமோ என்று நினைத்து அவனை இவ்விரண்டு லீலைகளின்போதும் கண்ணன் விட்டுவிட்டு வந்துவிட்டான் போலும்.
தூங்கி எழுந்ததுபோல் எழுந்தனர் சிறுவர்களும் கன்றுகளும். சட்டென்று நிலைமையை உணர்ந்து கண்ணன் காப்பற்றினான் என்பதையும் புரிந்துகொண்ட அந்தச் சிறுவர்கள், கண்ணனைச் சுற்றிவந்து ஆடிப் பாடினர்.
இப்படியாக உச்சி வேளை வந்ததும், எல்லோருக்கும் பசியெடுக்க ஆரம்பித்தது.
# மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரசாநுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment