ப்ருந்தாவனமே உன் மனமே - 12
புள்ளின் வாய்க்கீண்டான்
வெய்யிலில் நன்றாய் ஆடிப் பாடிக் களைத்த பின்னர் அனைவருக்கும் தாகமெடுத்தது. நீரருந்துவதற்காக எல்லாரையும் யமுனைக்கரைக்கு அழைத்துச் சென்றான் பலராமன்.
எல்லாச் சிறுவர்களும் முகம் கைகால்களைக் கழுவிக்கொண்டு தாகம் தீரத் தண்ணீர் குடித்தனர்.
கங்கை இறைவனின் பாததீர்த்தம் என்பதால், அவளுக்குள்ள மதிப்பு வேறெந்த நதிக்கும் இல்லாமல் இருந்தது. அந்தக் குறையை கண்ணன் பிறந்ததும் வசுதேவர் அவனைக் கூடையில் தூக்கிவந்தபோது வழிவிட்டும், கொஞ்சமாய் எம்பி அவன் திருவடியைத் தொட்டும் கொஞ்சம் தீர்த்துக்கொண்டிருந்தாள் யமுனை. ப்ருந்தாவனம் வந்த நாளிலிருந்து கண்ணன் தனது நீரில் விளையாடவேண்டும் என்று பேரவா கொண்டிருந்தாள்.
கண்ணன் அவள் மனம் அறியமாட்டானா என்ன?
கைகளால் இரண்டு வாய் நீரை அள்ளிக் குடித்ததுமே யமுனை புளகாங்கிதமடைந்து அவன் திருவாயமுதத்திற்கு ஏங்கினாள்.
ஆழமில்லாத இடமாய்ப் பார்த்துக் கரையில் நின்றுகொண்டு கன்றுகள் நீர் குடிக்கும் காட்சி கண்ணனைக் கவர, அவனும் மண்டியிட்டு, கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு குனிந்து கன்றுகளைப் போலவே வாயால் நீர் குடித்தான்.
மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்த யமுனைக்குள் அவன் திருவடியை வைத்து இறங்க, கங்கையினும் அதிக மகத்துவம் பெற்றவளாய் யமுனை ஆனாள்.
அவனைப் பூப்போல் தாங்கிக்கொண்டாள் யமுனா.
இடுப்பளவு நீரில் இறங்கி, கைகளால் நீரை அளைந்து நண்பர்கள் மீது வீசினான்.
நண்பர்களும் இறங்க முயல, பலராமன் தடுத்துவிட்டான்.
கண்ணனின் அருகே மலை போன்று வெண்மையாய் ஏதோ நகர்ந்து வந்தது.
கண்ணன் அதைத் திரும்பிப் பார்ப்பதற்குள், நிமிர்ந்து தன் பெரிய வாயைத் திறந்து கண்ணனை முழுதுமாய் விழுங்கியது.
அத்தனை கோபச் சிறுவர்களும் அலறி அழ ஆரம்பித்தனர். சிலர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். சிலர் மயங்கி விழுந்தனர்.
உலகமுண்டானை எவ்வளவு நேரம் வாய்க்குள் வைத்துக்கொள்ள முடியும்?
தொண்டைக்குள் கண்ணன் படுத்திய பாட்டினால் வேதனை தாங்காமல் வாயைத் திறந்தான் கொக்கின் உருவில் வந்த பகாஸுரன். அவனது மேல் அலகைப் பிடித்துக்கொண்டு குதிக்க அவன் வலி தாங்காமல் கண்ணனை உதறினான். கீழே குதித்த கண்ணன் அவனது ஒரு அலகைப் பிடித்துக்கொண்டு இன்னொன்றை முறிக்க அலறிக்கொண்டு கண்ணனின் திருவடியில் கலந்தான் அந்த அஸுரன்.
பலராமன் அதற்குள் பயந்துபோயிருந்த அத்தனை சிறுவர்களையும் தேற்றி சமாதானப்படுத்தினான்.
பிறகு மீண்டும் யமுனையில் குதித்து எல்லோருமாய் விளையாடினர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment