ப்ருந்தாவனமே உன் மனமே - 11
வத்ஸாஸுரனின் பாக்யம்
ப்ருந்தாவனம் முழுவதும் பறவைகளும் விலங்குகளும் விரும்பி வாழும் வகையில், மிகவும் செழிப்பான மரங்களும், கொடிகளும், நிறைந்திருந்தன. யமுனை நீரில் பட்டு காற்றும் உச்சி வேளையில்கூட குளிர்ந்தே வீசிக் கொண்டிருந்தது.
அத்தனைக்கும் காரணம் கண்ணன் விளையாட வருவான் என்பதே.
கண்ணனுக்காக கோப கோபியர் காத்திருப்பது போல் தினமும் அவையும் காத்திருந்தன.
இன்று மயிலொன்றைப் பிடித்துக் கொண்டான் கண்ணன்.
நன்றாக வளர்ந்த தோகைகளுடன் மிக அழகாக இருந்தது அந்த மயில். அது எங்கு சென்றாலும் கண்ணனோடேயே வந்து கொண்டிருந்தது. அதற்கு இணையாக கழுத்தை வளைத்து வளைத்து நடந்து கண்ணன் நடக்க, எல்லோரும் அவனைப் பின்பற்றி அதேபோல் நடந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.
உச்சி வேளையானதும், சேர்ந்து அமர்ந்து உணவு உண்டனர்.
மேய்ந்தது போதும் என்று சங்கேதமாய்க் குழலிசைக்க, சற்று தூரத்தில் இருந்த கன்றுகள் எல்லாம் ஓடிவந்தன.
ஆயிரக் கணக்கான கன்றுகள் இருந்தபோதும், அத்தனையையும் தனித்தனியாய் நன்கறிவான் கண்ணன். ஒவ்வொன்றையும் தனித்தனியே பெயரிட்டு அழைத்துக் கொஞ்சவும் செய்வான்.
அவனுக்குத் தெரியாமல் அந்தக் கூட்டத்தில் ஒரு ஈ, எறும்புகூட இல்லை எனலாம்.
அப்படியிருக்க, இன்று மட்டும் ஒரு கன்றுக்குட்டி, புதிதாகத் தென்பட்டது. பார்த்ததுமே யாரென்று உணர்ந்துகொண்ட கண்ணன், பலராமனுக்கு கண்ஜாடை காட்டினான்.
இருவரும் ஒன்றுமறியாததுபோல் முன்னே கன்றுகளை விட்டு சற்று பின்னால் நடந்தனர்.
அப்போது விளாமரங்கள் நிறைந்த பகுதியை அடைந்ததும், கன்று உருவத்தில் இருந்த அந்த அஸுரனின் இரு பின்னங்கால்களையும் சட்டென்று பிடித்தான் கண்ணன்.
பலரமான் மற்ற கன்றுகளை வேகமாய் முன்னே அழைத்துக்கொண்டு செல்ல, அஸுரனின் கால்களைப் பிடித்து தலைக்கு மேல் கரகரவென்று சுழற்றி, விளாமரங்களின் மீது கண்ணன் எறிய, மதுரா வரை கேட்குமாறு பெருங்குரலெடுத்து அலறிக்கொண்டு அந்த வத்ஸாஸுரன் விளாமரங்களின் மேல் விழுந்து நன்றாய்ப் பழுத்திருந்த ஆயிரக்கணக்கான விளாம்பழங்களோடு விழுந்தான்.
அவன் உடலை பழங்களே மூடிக்கொண்டன.
சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த சிறுவர்கள் கணப்பொழுதில் என்ன நடக்கிறதென்று அறிவதற்குள் ஒரு பழக்குவியல் இருந்தது.
அன்று எல்லோரும் வீட்டுக்குச் செல்லும்போது இரண்டு மூன்று விளாம்பழங்களைக் கொண்டு சென்றனர்.
கண்ணன் ஒரு பழத்தை தன்னிடம் கண்ணால் கேட்ட கோபிக்காகவும், இன்னொரு பழத்தை ராதையின் சகோதரனான ஸ்ரீதாமனிடம் கொடுத்து ராதைக்கு கொடுத்தனுப்புவதற்காகவும் ரகசியமாக எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment