ப்ருந்தாவனமே உன் மனமே - 10

காட்டு மன்னார்

தினமும் காலை கன்று மேய்க்கக் கிளம்பும்போது, வாசலில் வந்து நிற்கும் கோபியரிடம் மனத்தாலும், கண்களாலும் பேசுவான் கண்ணன். காலையில் காட்டுக்குச் சென்றது முதல் மாலை வரும் வரை கண்ணனைக் காணாது தவிக்கும்‌ யசோதைக்கும், கோபியருக்கும், அவனது கதாம்ருதமே ஆறுதலளித்தது.

ஒரு கோபி மனதினால் கண்ணா எனக்கு விளாம்பழம் வேண்டுமென்று நினைப்பாள். இன்னொருத்தி குவளை மலர் வேண்டுமென நினைப்பாள். ஒவ்வொருவரும் கண்ணனிடம் மனத்தைத் தூதனுப்ப மாலை வரும்போது சரியாக யார் யார் எதை எதை விரும்பினரோ அதை அவர்களை நோக்கித் தூக்கிப் போடுவான்.

யசோதை தங்க ஆபரணங்களைப் பூட்டி அனுப்பினாலும், கண்ணனோ எளிமை விரும்பி. அவன் தன்னைச் சுற்றியுள்ள கோபச் சிறுவர்களுள் ஒருவனாகக் கலந்திருக்க விரும்பினான்.

வீட்டிலிருந்து கிளம்பி வனம் சென்றதும், முதல் வேலையாக, நகைகள், கிரீடம், எல்லாவற்றையும் கழற்றி ஒரு மரப்பொந்தில் வைத்துவிடுவான்.

பட்டை அவிழ்த்து மூலக்கச்சமாகக் கட்டிக்கொண்டு, இடுப்பில் மேல் வஸ்திரத்தையும் இறுக்கிக்கொள்வான். அதுதான் அவனது, குச்சி, கொம்பு, குழல் முதலியவற்றைத் தாங்கும்.
கோபச்சிறுவர்கள், வனத்தில் கிடைக்கும் பூக்களைக் கொண்டுவந்து அவனுக்கு குண்டலங்கள், கைக்கு கங்கணங்கள் எல்லாம் செய்து போட்டு விடுவர். விதம் விதமான பூக்களைச் சேர்த்துக் கட்டி வனமாலை செய்து அணித்துவிடுவர். 
குன்றிமணிகளைக் கோத்து ஒரு மாலையாக்கிப் போட்டுவிடுவர்.

மாலையானதும், எப்படி வந்தானோ அதேபோலவே மீண்டும் அலங்கரித்துக் கொண்டு கிளம்புவான் கண்ணன்.
இப்படியாக தினமும் ராஜமன்னாராகவும், காட்டு மன்னாராகவும் இரு வேடங்களில் கோபச் சிறுவர்களுக்கு மட்டும் சிறப்பு தரிசனம் அளித்து வந்தான்.

ஏதேனும் கன்று புல் மேயும் ஆசையில் தூரமாகச் சென்றுவிட்டால், அதன் பெயரை புல்லாங்குழலில் இசைத்துக் கூப்பிட அது வேகமாய்க் கண்ணனிடமே ஓடி வந்துவிடும்.

தினமும் கோபச் சிறுவர்களையும், கன்றுகளையும் கவனமாகப் பார்த்துக் கொள்வதோடு, அவர்களுக்கு எல்லா விதமான பொழுது போக்குகளையும் காட்டி, எல்லோரையும் சுகமாக வைத்திருந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37