ப்ருந்தாவனமே உன் மனமே - 9
காட்டில் விளையாட்டு
ஸ்ரீ ப்ருந்தாவனத்தில் கண்ணன் நிகழ்த்திய லீலைகள் ஏராளம், ஏராளம். ஸ்ரீ வனத்தின் ஒவ்வொரு மண்துகளிலும் அவனது காலடியை முத்திரையாய் வைத்து தனது பூமி என்று சாசனம் செய்திருக்கிறான்.
ஒவ்வொரு நாளும் கண் விழிக்கும்போதே இன்றைக்குப் புதிதாக என்ன விளையாடலாம் என்று திட்டம் போட்டுகொள்வதுதான் அவனது முதல் சிந்தனை.
புத்தம் புது விளையாட்டுக்களை தினமும் கற்பனை செய்து கோபச் சிறுவர்களோடு விளையாடுவான்.
க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்று சொல்வதற்கேற்ப ஆயிரக்கணக்கான விளையாட்டுக்களை திட்டமிட்டு, விதிகள் விதித்து, அதை நண்பர்களுக்கு சொல்லிக் கொடுப்பான்.
மிருகங்கள் அனைத்துமே கண்ணனின் அன்பிற்கு கட்டுப்பட்டிருந்தன.
அவைகளைப்போல் நடப்பதற்கும், குரலெழுப்பவும் சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்களுக்குள் போட்டி வைப்பான்.
பலராமனும் கண்ணனுமாக இரு அணிகளாக சிறுவர்களைப் பிரித்துத் தலைமையேற்று விளையாடுவர்.
கண்ணனோடும் பலராமனோடும் இணைந்து விளையாடுவதும், கன்றுகளைக் கண்ணன் கொஞ்சும்போது ரசிப்பதும், அவற்றோடு விளையாடுவதும், கண்ணனோடு சேர்ந்து அவன் மீது கால்களைப் போட்டுக்கொண்டு குட்டித் தூக்கம் போடுவதும், அவன் குழலிசையில் மெய் மறப்பதுமாய் கோபச் சிறுவர்களின் பொழுது ஆனந்தமாய்க் கழிந்தது.
வீட்டிற்குச் சென்றதும், அவர்களது தாய்மார்களிடம், கண்ணன் காட்டில் என்னென்ன செய்தான் என்று விவரித்தால், அவர்களுக்குக் கூட ஒரு உருண்டை வெண்ணெய்யும் உண்ணக் கிடைத்தது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment