ப்ருந்தாவனமே உன் மனமே - 8
போவோமா ஸ்ரீ வனமே - 2
ப்ருந்தாவனம் செல்ல கண்ணனுக்கே இவ்வளவு ஆர்வமென்றால், அவனோடு செல்லும் கோபச் சிறுவர்களுக்கு?
எல்லாச் சிறுவர்களும் ஒரு சோற்று மூட்டையைக் கட்டிக்கொண்டு, கன்றுகளை ஓட்டிக்கொண்டு, நந்தபவனத்தின் வாசலில் குழுமிவிட்டனர்.
கண்ணனை அழகாக ஒரு முத்து ஹாரம் போட்டுவிட்டு, தலையில் சின்ன கிரீடம், மயில்பீலியுடன் வைத்து, குண்டலங்களும், கங்கணங்களும், நூபுரமும் மாட்டிவிட்டு, இடுப்பில் பீதாம்பரம் கட்டி, ஒரு மேல்துண்டால் இறுக்கி விட்டிருந்தாள் யசோதை. அதில் கன்று மேய்க்கத் தேவையான குச்சி, கொம்பு என்ற வாத்தியங்களை செருகிக் கொண்டவன், மறக்காமல் வேணுவையும் எடுத்துக் கொண்டான். மதிய உணவை ஒரு துணியில் கட்டி, ஒரு குச்சியின் முனையில் அதைக் கட்டி எடுத்துக்கொண்டு தோளில் சாய்த்துக் கொண்டான்.
அவனையும் அவனது கோலத்தையும் காண அவ்வளவு பேரும் வாசலில் வந்து நின்றுகொண்டனர்.
யசோதை ஏகப்பட்ட எச்சரிக்கைகளை அவன் காதில் ஓதிய வண்ணமிருந்தாள். பலராமனையும் நீலப்பட்டு அணிவித்து அழகாய் அலங்கரித்திருந்தாள் ரோஹிணி.
ஆயிரக் கணக்கான கன்றுகளை முன்னே செலுத்தி கண்ணனும் பலராமனும் பின்னே செல்ல, அவர்கள் பின்னால், அத்தனை கோபச்சிறுவர்களும் கிளம்பினர். அவ்வளவு கூட்டம் கிளம்பும்போது, கன்றுகளின் ஓட்டத்தால் புழுதி கிளம்பியது.
புழுதிக்கு நடுவில் தூரத்தில் கண்ணனின் மயில்பீலி கண்டதற்கே பரவசமடைந்தனர், வீட்டு வாசலில் அவனைக் காண்பதற்காக நின்று கொண்டிருந்த கோபியர்.
ஒவ்வொரு கோபியையும் கண்களாலேயே வம்பிழுத்துக் கொண்டு நடை பயின்றான் கண்ணன்.
கண்ணன் கண்ணிலிருந்து மறையும்வரை இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருந்த கோபியர், அவன் கண் மறைந்ததும், அங்கேயே நின்றுகொண்டு அவன் லீலைகளைப் பேசத் துவங்கினர்.
சிறுவர்களுக்குள் யார் கண்ணனோடு இணையாய்ச் செல்வதெனப் போட்டி. நான் கண்ணனோடு நடப்பேன், நான், நான் என்று எல்லாச் சிறுவர்களும் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு, முந்திக்கொண்டு நடந்தனர்.
காட்டிற்கு சற்று முன்னால் உள்ள புல்வெளி வந்தது...
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment