ப்ருந்தாவனமே உன் மனமே - 7
போவோமா ஸ்ரீவனமே..
நன்றாய் ஊர் சுற்றிவிட்டு உள்ளே வந்த கண்ணனைப் பார்த்து பலராமன் சமிக்ஞை செய்ய, புரிந்துகொண்டான் கண்ணன். ஒன்றும் சொல்லாமல் அம்மாவிடம் சென்று, பாவம்போல் முகத்தை வைத்துக்கொண்டு நின்றான்.
அம்மா பசிக்குது என்றான்.
ஏன் இன்னிக்கொன்னும் யார் வீட்டிலயும் சாப்பிட கிடைக்கலையா என்றாள் யசோதை.
அம்மா எனக்கு உன்னை விட்டா வேற யார் ஆசையா சாப்பிடத் தருவாங்க? இந்த ஊர்ல எல்லா கோபிகளும் சொல்ற பொய்யை நம்பி என்னைத் திட்டாதீங்கம்மா.
அந்தப் பெண்ணை அழவிட்டயா?
அதுவா அவ மேல வண்டு வந்து உக்காந்ததுன்னு தட்டிவிட்டேம்மா. அவ வண்டு கடிக்கறது தெரியாம, நான்தான் கிள்ளினேன்னு நினைச்சா நான் என்ன பண்ண?
யசோதை நம்பும்படியாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான்.
இன்னொரு வீட்டில் பானையை உடைச்சியாமே.
வீதி வழியா போனேம்மா. ஒரே நாற்றம் தாங்கல. என்னன்னு பார்த்தா, பானையை திண்ணைல வெச்சிருந்தாங்க. கழுவி வெய்யில்ல வெச்சாக்கூட போகலன்னா பாத்துக்குங்க. கேட்டா ஆவி வந்த பானைங்கறாங்க. அதிலேயே நாளைக்கும் வெண்ணெயை வெப்பாங்க. அவங்க வீட்டில் பானைக்கு என்ன பஞ்சமா? புதுப் பானை வாங்கி வெக்கட்டும் னு தான் உடைச்சேன். இன்னும் கேட்டா, அந்தப் பானையை கையில் எடுத்ததும் நாத்தம் தாங்காம கீழ போட்டேன். உடைஞ்சிடுச்சு.
சிரித்துவிட்டாள் யசோதை.
அப்படா, அம்மாவை சமாதானப் படுத்தியாச்சு, நிம்மதியானான் கண்ணன்.
சரி பின்னலை எல்லாம் முடிச்சு போட்டுட்டன்னு ரெண்டு குழந்தைகள் அழுததே..
அம்மா, இது அவங்களுக்கே கொஞ்சம் அதிகமா தெரியல? ரெண்டு பேர் பின்னலையும் சேர்த்து ஒருத்தர் முடிச்சு போடற வரைக்கும் தூங்கிக்கிட்டிருந்தாங்களாமா?
இதையெல்லாமா நம்பறீங்க என்றான்.
கலகலவென்று சிரித்த யசோதை
சரி சரி, சாப்பிட வா என்றாள்.
அம்மா, நான் கன்று மேய்க்கப் போறேம்மா. பலராமன் அண்ணா கூடவே போயிட்டு பத்திரமா வருவேன். பசுவெல்லாம் மேய்க்கற பெரியவங்களும் கண்ணுக்கெட்டற தூரத்தில்தான் இருப்பாங்க. சின்னப் பசங்களை தனியா விடுவாங்களா? தயவு செய்தும்மா. என்று கெஞ்ச,
சரி. ஒரு நல்ல நாளா அப்பாவை பார்க்க சொல்றேன். போகலாம். ரொம்ப காட்டில் சுத்தக் கூடாது. கண்டபடி விளையாடக்கூடாது. எப்பவும் எல்லாரோடையும் சேர்ந்து இருக்கணும். தனியா எங்கயும் போகக்கூடாது. துஷ்ட மிருகங்கள் நடமாட்டம் உள்ள காடு. ஜாக்கிரதையா இருக்கணும் சரியா. என்றாள்.
அவள் சம்மதித்தால் போதும் என்று எல்லாவற்றிற்கும் தலையாட்டிய கண்ணன், பலராமனைக் கண்ணைக் காட்ட அவனும் சாப்பிடுவதற்கு சேர்ந்துகொண்டான். . இருவருக்கும் சாதத்தைப் பிசைந்து கதை சொல்லிக்கொண்டே கையில் உருட்டிப் போட்டாள் யசோதை. பானை நிறைய இருந்த சாதம் காலியாயிற்று.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment