ப்ருந்தாவனமே உன் மனமே - 6
முகாரி ராகம்
வாசலில் காலாட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த குட்டிக் கண்ணனின் காதில் ஸா....ரீ.. கா.... மா.... என்று குரல் தேடி வந்து விழுந்தது. திடீரென்று அந்தப் பகுதியில் இம்மாதிரி பாட்டு சத்தம் கேட்கவும், கண்ணனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
குரல் வந்த திசையை நோக்கி சத்தமின்றி நடந்தான். அங்கே வீட்டு வாசலில் ஒரு குட்டிப் பெண் உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்தாள்.
சற்று நேரம் அமைதியாக அவள் பாடுவதை, இல்லையில்லை, கத்துவதைத் தள்ளி நின்று கேட்டுக்கொண்டிருந்தான். பிறகு, மெதுவாக அவளருகில் சென்றதும், அந்தப் பெண் பாடுவதை நிறுத்திவிட்டு,
ஹை கண்ணா, வா வா, நான் பாடறதை கேக்கறியா? என்றது.
நீ இப்ப பாடினியா? சரிதான். இதென்ன பாட்டு?
உள்ளேயிருந்து வந்த அவளது தாய்,
பாத்தியா, ஒரு நாள் பாடினதுமே கண்ணன் தேடிண்டு வந்துட்டான். கண்ணா இவளுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்க ஏற்பாடு பண்ணியிருக்கு. மதுரைலேர்ந்து ஒரு வாத்தியார் வந்து சொல்லித்தரார். வர வருஷம் உன் பிறந்த நாளைக்கு இவ கச்சேரிதான் சரியா?
என்று சொல்லிவிட்டு மறுபடி உள்ளே போனாள்.
மதுரைலேர்ந்து வராறா?
ஏ ...அப்பா..
என்றவன் குட்டி கோபியிடம் திரும்பி,
ஏதாவது பாடேன் கேப்போம். என்றான்.
அந்தப் பெண் மறுபடி ஸா.. ரீ... கா... என்று ஸ்ருதி சேராமல் ஆரம்பிக்க, பொறுமையிழந்த கண்ணன்.
இரு இரு. நான் சொல்றதைப் பாடு என்றான்.
என்ன பாடணும் கண்ணா?
ம்ம்... சற்று யோசித்து,
முகாரி ராகம் பாடுவியா?
முகாரியா... எனக்குத் தெரியாது கண்ணா , வாத்தியார் இன்னும் சொல்லித்தரல. நாளைக்கு கத்துண்டு வந்து பாடறேன். என்றது.
முகாரி ராகம் பாடறதுக்கு வாத்தியார் வந்து சொல்லித்தரணுமா? நானே சொல்லித்தருவேனே.
அட, நிஜம்மாவா, அப்ப நீயே சொல்லிக்கொடு கண்ணா
என்றது அப்பாவியாய்..
உட்கார்ந்திருந்த அவளது தொடையில் நறுக்கென்று கிள்ளினான். அந்தக் குட்டிப் பெண் வலி தாங்காமல் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்க...
முகாரி பாடத் தெரியாதுன்னு சொன்ன? இப்ப அழகா பாடறியே..
என்று பாராட்டிவிட்டு ஓடி வந்து விட்டான்.
அவ்வளவுதான். அவளது அழுகைச் சத்தம் கேட்டு வெளியே வந்த அவளது தாய், விஷயம் கேட்டதும், நேராக யசோதையிடம் புகார் செய்யப் போனாள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசங்களில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment