ப்ருந்தாவனமே உன் மனமே - 5
பள்ளி செல்லும் கண்ணன் -3
கண்ணன் மெதுவாகத் தாயிடம் கேட்டான்.
அம்மா, அப்பாகிட்ட பள்ளிக்கூடம் போகமாட்டேன்னு சொன்னீங்களா இல்லையா?
சொன்னேன் கண்ணா.
அப்பா என்ன சொன்னார்?
நாளைக்கு சொல்றேன்னார்டா..
கண்ணன் சற்று யோசித்தான். இந்தப் பிரச்சனைக்கு இன்றே முற்றுப்புள்ளி வேண்டும். மறுபடி நாளைக்கு ஆரம்பிக்கக் கூடாது.
சட்டென்று, அம்மா, ஒரு காசு குடு
என்று கையை நீட்டினான்.
அவனது குட்டிக் கையில் வஜ்ர, அங்குச, பத்ம ரேகைகள் ஜ்வலித்தன.
எதுக்குடா?
குடேன், சொல்றேன்.
உள்ளேயிருந்து ஒரு தங்க நாணயம் கொண்டுவந்து கொடுத்தாள்.
அக்காலத்தில் எல்லாம் பண்டமாற்று முறைதான். செப்பு நாணயங்கள் சிலவற்றிற்கு மட்டும் பயன்படும். அரச முத்திரையிட்ட தங்க நாணயம் அரசர்களிடம்தான் இருக்கும்.
ஒரு தங்க நாணயத்தை எடுத்துக்கொண்டு ஓடினான். நந்தன் கொஞ்சம் குழப்பவாதி. எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு சற்று யோசிப்பார். குழப்பம் வந்தால் யமுனையாற்றின் பாலக்கரையில் ஒரு ஜோசியர் இருப்பார். அவரிடம் சென்று ஆலோசனை பெற்ற பின் முடிவுகள் எடுப்பார்.
நாளை சொல்கிறேன் என்று நந்தன் சொன்னதுமே, அவர் எங்கு செல்வாரென்று கண்ணனுக்கு நன்றாய்த் தெரியும். நேராக காசை எடுத்துக்கொண்டு நந்தனுக்கு முன்னால் ஜோசியரிடம் சென்றான். கண்ணனை அறியாதார் எவரேனும் உண்டா?
இவனை பார்த்ததும் ஜோசியர் கேட்டார்.
என்ன கண்ணா, எங்க வந்த? என்ன வேணும்?
அவரிடம் ஒரு காசை நீட்டினான்.
அப்பா என்னை பள்ளிக்கூடம் போக சொல்றார்.
போகலாமே.
எனக்கு இஷ்டமில்ல.
உனக்கென்ன இஷ்டம்?
நான் மாடு மேய்ப்பேன்.
அவ்ளோதானே, நான் பாத்துக்கறேன் போ..
சற்று நேரம் கழித்து ஜோசியரைப் பார்க்க நந்தன் போனார்.
வந்தவரை வணங்கி ஜோசியர் கேட்டார்.
என்ன வேணும் தேவரீருக்கு?
நந்தன் தயங்கித் தயங்கிச் சொன்னான்.
குடும்பத்தில் யாரும் எழுதப் படிக்கத் தெரிஞ்சுக்கல...
கண்ணனையாவது படிக்க அனுப்பலாம்னா, அவன் இஷ்டமில்லங்கறான். அதான் கட்டாயப்படுத்தி அனுப்பினா படிப்பு வருமா வராதா, அவன் ஜாதகம் என்ன சொல்றதுன்னு பாக்கணும். பாத்து சொல்லுங்களேன் என்றார்.
நம்ம கண்ணனுக்கா, ரோஹிணி நக்ஷத்ரம், ரிஷப ராசி, மாட்டு யோகம், அவனுக்கு படிப்பெல்லாம் வராது. மாடு மேய்க்கணும்னுதான் அவன் தலைல எழுதிருக்கு. இதுக்கெதுக்கு ஜாதகம்? படிக்கலன்னா என்ன? ஓஹோன்னு இருப்பான். கவலைப்படாம மாடு மேய்க்கவே அனுப்புங்க என்றார்.
நந்தன்,
தலையெழுத்துன்னா எப்படி மாத்தமுடியும்?
சரி, பாக்கலாம்
என்று சொல்லிக் கிளம்பினார்.
ஒருவழியாய்க் கண்ணனை கன்று மேய்க்க அனுப்புவதென்று முடிவானதும், இப்போது யசோதைக்கு வந்ததே கோபம்.
சின்னக் குழந்தையைப் போய் காட்டுக்கு கன்னுக்குட்டி மேய்க்க அனுப்பவா? வயசே ஆகல. அதெல்லாம் முடியாது. கொஞ்சம் பெரியவனாகட்டும்
என்று சொல்லிவிட்டாள்.
கண்ணனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ப்ருந்தாவனத்தைப் பற்றி நினைத்து நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கிறானே. எவ்வளவு அவதார காரியங்களும், லீலைகளும் ப்ருந்தாவனத்தினுள் அவனுக்காகக் காத்திருக்கின்றன! அதற்காக அவன், எல்லோரையுமே கோகுலத்திலிருந்து கிளப்பி வனத்தின் அருகே அழைத்து வந்து விட்டான். வனத்தின் அருகிலேயே இருந்தும், இவ்வளவு திரிசமங்கள் செய்து பள்ளிப்படிப்பை ஒத்திப் போட்டும், கன்று மேய்க்க வனம் செல்ல அன்னையின் அனுமதி கிட்டவில்லை.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment