ப்ருந்தாவனமே உன் மனமே - 4

பள்ளி செல்லும் கண்ணன் - 2


கண்ணா வா பள்ளிக்கூடம் கிளம்பணும் யசோதாவின் குரல் கேட்டு உள்ளே ஓடிவந்தான் கண்ணன்.

என்னம்மா அதுக்குள்ள கிளம்ப சொல்றீங்க?

நேரமாச்சேடா..

எங்கம்மா நேரமாச்சு? இன்னும் கூண்டு வண்டி, மேளம் ஒண்ணும் வரலையே. அவங்க வந்து அலங்காரம் பண்ணி தயாராகி அப்றம்தானே கிளம்பணும். இன்னும் கொஞ்ச நேரம் அவங்க வர வரைக்கும் விளையாடிட்டு வரேம்மா.
என்றவன்,
அம்மா வாண வேடிக்கை வெக்கச் சொன்னேனே எங்க? என்று கேட்டான்.

தூக்கக் கலக்கத்தில் இரவு சொன்னதை மறந்திருப்பான் என்று நினைத்தால் நியாபகமாய்க் கேட்கிறானே,

அதெல்லாமில்லடா, நீ கிளம்பு, உன்னை சுபாகு கொண்டுபோய் விடுவார்.

என்ன காவலாளியோடவா?
நடந்து போகணுமா?

ஆமாண்டா, பக்கத்துத் தெருதானே. நடக்க மாட்டியா? கோகுலம் முழுக்க சுத்துவியே.

அப்டின்னா, மேளம்? பொய்க்கால் குதிரை?

தினம் அதெல்லாம் வருமாடா? முதல் நாள்னு நேத்திக்கு எல்லாம் வந்தது.

அதற்குள் பணிப்பெண் தூக்கை எடுத்துவந்துதர,

இதென்ன?

மதியம் சாப்பிடவேணாமா? பசிக்குமே
என்றாள் யசோதா.

மதியமா? அப்ப வீட்டுக்கு ?

சாயங்காலம் வரை பள்ளி உண்டுடா

அப்டின்னா எப்ப விளையாடறதாம்?

திரும்பி வந்தப்றம் விளையாடுடா..

அம்மா, எனக்கு பள்ளிக்கூடமும் வேணாம் ஒண்ணும் வேணாம்.

அப்பா போனாரா, நம்ம குடும்பத்தில் யாராவது போனாங்களா?
என்ன மட்டும் ஏன் போகச்சொல்றீங்க?
நமக்கு பிழைப்பு பசுமாடுதானே
அதை ஒழுங்கா மேய்ச்சாத்தானே பால் கறக்கும்.
எல்லா வீட்டுப் பசங்களும் கன்னுக்குட்டி மேய்க்கத்தானே போறாங்க? என்ன மட்டும் ஏன் படிக்கச் சொல்றீங்க?

உனக்கு பள்ளிக்கூடம் பிடிச்சிருக்கு ன்னு சொன்னியேடா

அதெல்லாம் முடியாதும்மா.. நான் பெரியவனானதும் வேணும்னா படிச்சுக்கறேன். இப்ப போகமாட்டேன்
திட்டவட்டமாகக் கூறிவிட்டு வெளியில் ஓடிவிட்டான்.

யசோதைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. உண்மையில் அவளுக்கும் கண்ணனை மாலை வரை பிரிந்திருக்க இஷ்டமில்லை.

நந்தன் வந்தார். யசோதா கண்ணன் பள்ளிக்குப் போயாச்சா?
தயங்கித் தயங்கி இல்லையென்று தலையாட்டினாள்.

ஏன் போகல?

அவனுக்கு படிக்க இஷ்டமில்லையாம்.

பின்ன என்ன செய்வானாம்?

கன்று மேய்க்கப் போறேங்கறான்.

நம்ம எல்லார் தலையெழுத்தும் அதானே. அவனாவது படிக்கட்டுமே

நான் சொல்லியாச்சு. அவன் கேக்க மாட்டேங்கறானே..

யசோதாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். அம்மாவும் பிள்ளையும் சேர்ந்துகொண்டார்கள் என்று உணர்ந்துகொண்டார்.

நீ அவன ரொம்ப செல்லம் குடுத்து கெடுக்கற.

அவனுக்கு இஷ்டமில்லன்னா விடுங்களேன். வேணுங்கும்போது தெரிஞ்சுப்பான்.

அவ்வளவுதான். இனி அவர் பேச்சு எடுபடாது. நான் நாளைக்கு சொல்றேன் என்று சொல்லிவிட்டு வேறு வேலையைப் பார்க்கப்போனார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37