ப்ருந்தாவனமே உன் மனமே – 3
பள்ளி செல்லும் கண்ணன் - 1
மெதுவாகக் கண்ணனைப் பள்ளிக்கு அனுப்புவது பற்றி யசோதையிடம் பீடிகை போட்டுப் பேசினார் நந்தன். ஏனென்றால் யசோதா சம்மதித்தால்தான் கண்ணன் பிடிவாதம் பிடித்தால்கூட அவனைச் சரிக்கட்டி பள்ளிக்கு அனுப்ப முடியும்.
யசோதா, நானும் படிக்கல. என் அப்பா தாத்தாவெல்லாம் கூட படிக்காமயே காலத்தை ஓட்டிட்டாங்க. மஹராஜா எதாவது ஓலை அனுப்பினாக்கூட, நான் ஆளைவிட்டுத்தான் படிக்கச் சொல்லவேண்டியிருக்கு. இப்படி எழுதப் படிக்காம இருக்கறது என் தலைமுறையோட போகட்டும் யசோதா. நம்ம பையன் கண்ணனும் அப்படியே இருக்கணுமா? அவனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலாம். அவனாவது ஒரு நாலெழுத்து படிச்சான்னா, நமக்கும் கௌரவமா இருக்கும். இந்த மகாராஜா வேற பொல்லாதவனா இருக்கான். நாம் இப்படியே காலத்தை ஓட்ட முடியாது. நம்ம பையனுக்கு கொஞ்சமாவது விஷயம் தெரிஞ்சிருந்தாத்தான் நாளைக்கு அவன் பேச்சும் எடுபடும். என்ன சொல்ற? வர அமாவாசைலேர்ந்து பள்ளியில் சேர்த்து விடவா?
யசோதைக்கு துணுக்குற்றாள். என்ன அதுக்குள்ளே பள்ளிக்கு அனுப்பனுங்கறீங்க. இன்னும் அஞ்சு வயசாகலயே.
அதனால என்ன? நான் வாத்தியார் கிட்ட சொல்லி சேத்துவிடறேன். நாம் சொன்னா மாட்டேன்னு சொல்லிடுவாரா அவர்? இவனும் ரொம்ப லூட்டி அடிக்கறான். ஊர் வம்பெல்லாம் இழுக்கறான்னு வருத்தப்பட்டியே. பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினா கொஞ்சம் அடங்குவான்.
அரை மனதாக சரியென்றாள் யசோதா.
இரண்டு நாள் கழித்து வந்த அமாவாசையன்று கண்ணனை நன்றாய்க் குளிப்பாட்டி, மிக அழகாய் அலங்கரித்து, ஒரு பெரிய கூண்டு மாட்டு வண்டி கட்டி, அதை நன்கு பூக்களால் அலங்கரித்து, தோரணங்கள் கட்டி, மாட்டுக்கும் கொலுசு போட்டு அலங்காரங்கள் செய்து, மேளதாளங்கள் வைத்து, கண்ணனைப் பள்ளியில் கொண்டுபோய் விட ஏற்பாடு செய்தார் நந்தன்.
குழந்தை முதன்முதலில் பள்ளிக்குப் போகிறான். அவர் முகத்தில் பெருமை பிடிபடவில்லை. கண்ணனுக்கும் பள்ளிகூடம் என்றால் என்னவென்று தெரியவில்லை. அங்கே நிறைய குழந்தைகள் அவனோடு விளையாடுவதற்கு இருப்பார்கள் என்று மட்டும் சொல்லி வைத்திருந்தாள் யசோதா.
வண்டியையும் அலங்காரத்தையும் மேளதாளத்தையும் பார்த்து ஒரே குஷி கண்ணனுக்கு. அப்பா பொய்க்கால்குதிரை, கரகம் வைங்கப்பா, என்று கேட்க, ஒரே மகன் கேட்கிறானே என்று அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டார்.
ஒரே அமர்க்களம்தான். முன்னால் மேளக்கச்சேரி செல்ல, பின்னல், கரகம், பொய்க்கால் குதிரை எல்லாம் ஆடிக்கொண்டு செல்ல, கூண்டு வண்டியில் கண்ணனை ஏற்றிக்கொண்டு நந்தன் செல்ல, பின்னால் காவலர்கள் அணிவகுத்துச் செல்ல, பெரிய ஸ்வாமி புறப்பாடுபோல் கிளம்பிச் சென்றான்.
முதல் நாள் ஆதலால், கடவுள் வாழ்த்துப் பாட்டு மட்டும் சொல்லிக்கொடுத்துவிட்டு கண்ணனை விளையாட விட்டுவிட்டார் அந்த வாத்தியார். கண்ணனுக்கு இன்னும் குஷி தங்கவில்லை. விளையாட இன்னும் பல புதிய நண்பர்கள் கிடைத்தால் என்ன செய்வான் அவன்? பள்ளியின் முதல் நாளென்று முழு நாளும் வைத்துக்கொள்ளாமல், ஒரு முகூர்த்த நேரம் பள்ளியில் அவனை வைத்துக்கொண்டு விட்டு வந்ததைப் போலவே மறுபடி வீட்டுக்கு அனுப்பிவிட்டார் வாத்தியார்.
வீட்டுக்கு வந்து யசோதையிடம் பள்ளியில் நடந்த விஷயங்களையும், அவனுக்குக் கிடைத்த புதிய நண்பர்கள் பற்றியும் பத்தி பத்தியாய்ச் சொல்லிவிட்டு சமத்தாய் சாப்பிட்டுவிட்டு உறங்கியது குழந்தை.
உறங்குவதற்கு முன்னால் கண்ணன் அம்மா, நாளைக்கு பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பும்போது, மேள வாத்தியக்கச்சேரியோட வாண வேடிக்கையும் வெக்கச் சொல்லும்மா, ரொம்ப நல்லா இருக்கும் என்றான்.
அது தான் யசோதாவை கவலைப்பட வைத்தது. சரி நாளைப் பாட்டை நாராயணன் பார்த்துக்கொள்ளட்டும் என்று நினைத்துக்கொண்டு அவளும் உறங்கிப்போனாள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசங்களில் கேட்ட ரஸாநுபவங்க்களில் இவையும் சிலவே.
Comments
Post a Comment