ப்ருந்தாவனமே உன் மனமே – 2
பானைக்கு வைகுண்டம்
எல்லார் வீடுகளிலும் ஓரளவுக்கு இயல்பு வாழ்க்கை திரும்பியிருந்தது.கோகுலத்திலிருந்தது போலவே அவரவர் வேலைகளை கவனிக்கத் தொடங்கினர். புதிய இடம் கண்ணனுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்திருந்தது.
கண்ணனின் முக்கியமான தோழர்கள், சுபலன், ஸ்ரீதாமா, ஸ்தோஹ கிருஷ்ணன், பத்ரன், அம்சு:, சுதாமா, அர்ஜுனன், வ்ருஷபன், தேவப்ரஸ்தன் ஆகியோர். இவர்களைத் தவிரவும் எண்ணற்ற தோழர்கள் கண்ணனுக்கு உண்டு. அவர்களில் சற்று பெரியவன் ததிபாண்டன் என்பவன். அவனது உடல்வாகும் சற்று பெரியது. அவன் வயிறு பானைபோல் இருக்கும். அதனால் அவனுக்கு காரணப்பெயராய் ததிபாண்டன் என்று வந்துவிட்டது போலும்.
வெண்ணெய்க்களவு பற்றித் துப்புக் கொடுப்பதும், எந்த நேரத்தில் யார் வீட்டில் ஆள் இருக்கமாட்டார்கள் என்பது பற்றி கண்ணனுக்குச் சொல்வதும் இவர்கள் வேலை தான்.
புதிய இடமாதலால், யார் யார் வீடு எங்கே இருக்கிறது என்று நோட்டம் விடுவதற்காக, நண்பர்களுடன், (குரங்கும் சேர்ந்துதான்) சுற்றி வந்துகொண்டிருந்தான் கண்ணன். அப்போது ஒரு கோபி, வாசலில் எதோ வேலையாய் வந்துவிட்டு கண்ணன் வீதியில் வரும் அழகைப் பார்த்து அப்படியே நின்று கொண்டிருந்தாள்.
அவளது கண்களில் தெரியும் அன்பைப் பார்த்துவிட்டுக் கண்ணன் கேட்டான்,
யார் வீடு இது?
சுபலன் சொன்னான்,
ததிபாண்டன் வீடு கண்ணா. இவங்க வீட்டு வெண்ணெய் மிகவும் ருசியாயிருக்கும்னு ததிபாண்டன் அடிக்கடி சொல்வான். அதைக் சாப்பிட்டு சாப்பிட்டுத் தான் அவன் வயிறு பெருத்துட்டது.
இன்ணிக்கு ராத்திரி இவங்க வீட்டுக்குப் போலாம். நான் மட்டும் போறேன், நீங்க எல்லாரும் வெளியே நிக்கணும் சரியா?
என்று திட்டம் போட்டுவிட்டு அடுத்த தெருவுக்குப் போனான். கண்களிலிருந்து கண்ணன் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு உள்ளே போனாள் அந்த கோபி.
அதற்குள், கண்ணன் ததிபாண்டனைக் கூப்பிட்டான்,
இன்னிக்கு ராத்திரி உங்க வீட்டுக்குத்தான் வரப்போறேன். வெண்ணெய்ப் பானை எல்லாம் எங்க இருக்குன்னு பாத்து வெச்சுக்கோ. மத்த பசங்களெல்லாரையும் வெளிய விட்டுட்டு நான் மட்டும் வருவேன். ஜாக்கிரதை. தூங்கிடாதே என்றான்.
ததிபாண்டனோ, என்ன கண்ணா, என் வீட்லயா? என்றான்.
ஆமா, உன் வீட்டு வெண்ணெய் நல்லா இருக்காதா?
ரொம்ப நல்லா இருக்கும் கண்ணா
பின்ன? மத்த வீட்டுக்குப் போகும்போது வந்தல்ல? உங்க வீட்ல மட்டும் எடுக்கக்கூடதோ?
சரி கண்ணா. வா, நான் டக் டக் டக் னு மூணு தடவை தட்டுவேன். அப்ப உள்ளே வா என்றான்.
சரியென்று பிரிந்து சென்றார்கள். இரவு இரண்டாம் ஜாமத்தில் வீட்டில் எல்லாரும் உறங்கியதும் மூன்றுமுறை ததிபாண்டன் தட்ட, கண்ணன் மட்டும் உள்ளே நுழைந்தான். புழக்கடைக் கதவை தாள் போடாமல் விட்டிருந்தான் ததிபாண்டன்.
உள்ளே வந்த கண்ணனின் கையைப் பிடித்து உள் அறைக்கு அழைத்துச் சென்று வெண்ணெய்ப் பானையைக் காட்ட, அதுவோ உயரத்தில் உறிமேல் இருந்தது. பக்கத்தில் ஏறும்படி வசதியாக எதுவும் இல்லை. ததிபாண்டனையே குனியச் சொல்லி எட்டிப் பானையை எடுத்துவிட்டான். எடுக்கும்போது, அங்கிருந்த சுவரில் சாத்தியிருந்த கோல் விழுந்து டமடம வென்று சத்தம் கேட்க, கோபி விழித்துக்கொண்டாள்.
என்ன சத்தம்? என்று குரல் கொடுத்தாள். சட்டென்று ததிபாண்டன்,
அம்மா பூனைம்மா, நானே விரட்டிட்டேன், நீங்க துங்குங்க,
என்றதும், மறுபடி உறங்க ஆரம்பித்தாள். அதற்குள், கண்ணன் மறுபடி இன்னொரு கோலை இடறிவிட, அவளுக்கு இப்போது சந்தேகம் வந்துவிட்டது.
என்னடா சத்தம், பூனை போச்சா இல்லையா?
என்று கேட்டுக்கொண்டே எழுந்து வந்தாள். அவளது சதங்கை சத்தமும், வளையல் சத்தமும் கேட்க, கண்ணன் ததிபாண்டனை,
என்னடா பண்றது என்றான்.
இரு கண்ணா, ஒரு யோசனை. எங்கம்மாவுக்கு சந்தேகமே வராது
என்று சொல்லி குட்டிக்கண்ணனை வெண்ணெய்ப் பானையோடு,, அங்கிருந்த இடுப்பளவு உயரமுள்ள பருப்பு வைக்கும் குதிருக்குள் இறக்கிவிட்டுவிட்டு அதன்மீதேறி உட்கார்ந்துகொண்டான்.
அவனது தாய் வந்து
எங்கடா பூனை?
இங்கயும் அங்கயும் ஓடிச்சும்மா, விரட்டிட்டேன்.
இங்க என்ன பண்ற? வந்து படு, என்று கூப்பிட,
இரும்மா, உடனே வந்துட்டா, மறுபடி பூனையும் வந்துடும். கொஞ்ச நேரம் பாத்துட்டு, தண்ணி குடிச்சிட்டு வரேம்மா நீங்க போங்க..
என்று சொல்லி, அதன் மேலிருந்து குதித்தான். அவளும் சந்தேகம் தீர்ந்துவிட,
சரி சரி, சீக்கிரம் வா
என்று சொல்லிவிட்டுப் போனாள்.
இப்போது ததிபாண்டன் மறுபடி பானைமேல் ஏறி உட்கார, கண்ணன் உள்ளிருந்து அவனை புல்லாங்குழலால் குத்தினான்.
அம்மா போயட்டங்களாடா?
போய்ட்டாங்கடாா
எனக்கு மூச்சு முட்டுதுடா. வெளிய தூக்கிவிடு.
கண்ணனை விட உயரமாய் இருந்தது அந்தக் குதிர் போன்ற பானை.
இரு கண்ணா. என்ன அவசரம்?
அவசரமா? மூச்சு முட்டுதுடா. தூக்கிவிடு.
என்று கையை உயர்த்தினான் கண்ணன்.
அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ எனக்கொரு விஷயம் சொல்லு.
என்னடா, பானைக்குள்ள உக்கார வெச்சுட்டு விஷயம் கேக்கற? முதல்ல வெளிய எடுத்துவிடு. அப்புறம் நீ என்ன கேட்டாலும் சொல்றேன்.
அதெல்லாம் உன்ன வெளிய விட்டா நீ ஓட்டிடுவ.
நான் கேக்கறதை தரேன்னு சொல்லு அப்பத்தான் வெளிய எடுத்து விடுவேன்.
என்னடா வேணும்? சீக்கிரம் கேளேன். மூச்சு முட்டுதுடா.
நீ பகவான்னு எனக்குத் தெரியும். வைகுண்டம்தான் ரொம்ப பெரிசாம். அப்பா சொன்னார். எனக்கு நீ வைகுண்டத்தில் இடம் தருவியா?
என்னடா இப்படிக் கேக்கற? என் கூட இவ்ளோ நாள் பழகற? உனக்கில்லாத இடமா? கண்டிப்பா தரேன். வெளிய எடுத்து விட்றா..
கண்ணா நீ சொன்னா போதும். வாக்கு மாற மாட்டன்னு தெரியும். நான் நிறைய சாப்பிட்டு சாப்பிட்டு பழகிட்டேன். வைகுண்டத்தில் நல்ல சாப்பாடு கிடைக்குமா?
நிறைய கிடைக்கும்டா வெளிய எடுத்துவிடு.
புளியோதரை, அக்காரவடிசல், ததியன்னம், பாயசம், வடை எல்லாம் கிடைக்குமா?
எல்லாம் தரச் சொல்றேண்டா வெளிய எடுத்துவிடு.
எல்லாம் ஒண்ணா குடுத்தா நான் எங்க வாங்கி வெச்சுக்கறது? ஒரு பெரிய பானையைக் காட்டி இதில் வாங்கி வெச்சு சாப்பிடுவேன். நீ இந்தப் பானைக்கும் என்னோட சேர்த்து வைகுண்டத்தில் இடம் தரயா?
கண்டிப்பா தரேண்டா. ஏன்டா படுத்தற? மூச்சு முட்டறதுடா. தூக்கி விட்றா..
ஒருவாறாய், சரி கண்ணா, என்று தூக்கி வெளியில் விட, விட்டால் போதுமென்று மறக்காமல் வெண்ணெய்ப் பானையைத் தூக்கிக்கொண்டு வெளியில் ஓடினான் கண்ணன்.
இந்தக் கதையை பட்டர் சொன்னதும், அரங்கநாத ஸ்வாமி,
தினமும் பண்ணும் அர்ச்சனையை விட, நீ சொல்லும் இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இனிமேல் தினமும் வந்து எனக்கு புதுப் புதுக் கதைகளைச் சொல் என்றார்.
மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment