ப்ருந்தாவனமே உன் மனமே.. - 1
கண்ணன் விரும்பி வாசம் செய்யத் தேர்ந்தெடுத்த இடம், ஸ்ரீவனம் எனப்படும் பிருந்தாவனம். பிருந்தாவனத்தின் ஒவ்வொரு மண் துகளிலும் அது அவனது பூமி என்று சொல்லும்படியாக
ஸ்ரீ கிருஷ்ணன் தனது பாதங்களின் முத்திரையைப் பதித்து வைத்துள்ளான். சைதன்ய மகாபிரபு, மீரா, ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஊத்துக்காடு வேங்கடகவி, இன்னும் ஆண்டாள் உள்பட எண்ணற்ற மகான்கள் ப்ருந்தாவனத்தின் மீதான தங்கள் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்துரை விட்டு வெளியில் சென்றதே இல்லை எனும்போதும் மானசீகமாக ப்ருந்தாவனத்திலேயே வாழ்ந்திருக்கிறாள். தந்தையான பெரியாழ்வார் மூலம் கண்ணன் கதைகளைக் கேட்டுக் கேட்டு அவள் மங்களாசாசனம் செய்த பாசுரங்களைக் கொண்டே நாம் பிருந்தாவனம் முழுவதும் சேவித்துவிட்டு வந்துவிடலாம்.
ஒருபுறம் கோவர்தன மலையும், மற்றொரு புறம் யமுனா நதியுமாக இயற்கை அரணாக விளங்குவதால், ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பு கிட்டும் என்ற எண்ணத்தில் எல்லோரும் பிருந்தாவனத்திற்கு வந்த போதிலும், கண்ணனுக்கு இங்கே வருவதற்குக் கொள்ளை ஆசை.
அவ்வப்போது மாடு மேய்க்கச் செல்லும் இடையர்களிடம் காட்டின் வளமை பற்றி ஆவலோடு கேட்டுக்கொண்டிருப்பான். சின்னக் குழந்தையாக இருப்பதால், காட்டுக்குச் செல்ல அனுமதியில்லை. இப்போது தங்கியிருக்கும் சமவெளியிலிருந்து பிருந்தாவனக் காட்டுப் பகுதி அண்மையில் இருக்கிறது. இன்னும் சில நாட்கள் போனால், கன்று மேய்க்கச் செல்லும் சாக்கில் காட்டில் சென்று விளையாடலாம் என்று ஆசையில்தான் ஏதோ பயத்தைக் கிளப்பிவிட்டு அனைவரையும் இங்கே அழைத்தும் வந்துவிட்டான் என்றுதான் சொல்லவேண்டும்.
கோகுலத்திலிருந்து சாமான்களை வண்டிகளில் கட்டிக்கொண்டு குழந்தைகளையும் ஏற்றிக்கொண்டு, பசுக்கள், கன்றுக்குட்டிகள் அனைத்தையும் ஓட்டிக்கொண்டு ப்ருந்தாவனத்தை ஒட்டியிருக்கும் சமவெளிக்கு வந்து சேர்ந்தனர் அத்தனை இடையர்களும். அரை வட்டமாக வண்டிகளை நிறுத்திக்கொண்டு தங்களுக்கான வாழ்விடங்களைத் தேர்வு செய்து சட்டென்று ஒரு கிராம அமைப்பைத் திட்டமிட்டு வீடுகள், மாட்டுத் தொழுவங்கள், ஒரு வழிபாட்டுத் தலம், அருகே இருக்கும் யமுனையில் நீராடப் படித்துறை எல்லாவற்றையும் அமைத்துக்கொண்டனர்.
ஒரே குஷி கண்ணனுக்கு. அவனது மகிழ்வைப் பார்த்து அனைவரின் மனமும் முகமும் மகிழ்ச்சியுற, உற்சாகமாக வேலைகள் நடந்தன. எல்லாருக்கும் உதவிகள் செய்வதைப் போல் சென்று சென்று அவரவர் வீடுகளில் பால் வெண்ணெய்க் குடங்களை, வைக்கும் இடங்களைப் பார்த்து வைத்துக் கொண்டு வந்துவிட்டான் நமது கண்ணன். அவனுக்கு அவன் வேலை முக்கியமல்லவா?
இனி, கண்ணனுக்குப் பிடித்த பிருந்தாவனத்தில், அவன் நிகழ்த்திய லீலைகளை நமது இதய பிருந்தாவனத்தில், ஸத்குருநாதர் காண்பிக்கட்டும்.
பிருந்தாவனம் ஸகி புவோ விதநோதி கீர்த்திம்
யத்தேவகீஸுத பதாம்புஜ லப்த லக்ஷ்மீ
- ஸ்ரீமத்பாகவதம்
ப்ருந்தாவனமே உன் மனமே
லீலைகள் நடந்திடும் தினம் தினமே
குருவின் அருளால் வளர்ந்திடுமே
ஒருநாள் அவனிடம் ஒன்றிடுமே
- மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி
Comments
Post a Comment