ப்ருந்தாவனமே உன் மனமே - 20
மஞ்சனமாட வாராய்
சனிக்கிழமையானால் யசோதா கண்ணனுக்கும் பலரமனுக்கும் எண்ணெய் தேய்த்துவிடுவது வழக்கம். கண்ணனுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும் யசோதைக்கு. ஏதேதோ காரணம் சொல்லித் தப்பித்துக்கொள்ளப் பார்ப்பான். தேய்த்து விடும் போதும் அழுவான். அக்கம்பக்கதிலுள்ளோரெல்லாம்கூட,
பாவம் குழந்தைய அழவிடாத யசோதா
என்று பரிந்துகொண்டு வருவார்கள்.
வழக்கமாய் இவ்வளவு அமர்க்களம் செய்யும் கோபாலன் இன்று எழுந்ததுமே,
அம்மா இன்னிக்கு சனிக்கிழமையா என்றான்.
ஆமாண்டா கண்ணா
நான் இன்னிக்கு சமத்தா எண்ணெய் தேச்சுக்கறேன்.
யசோதை ஒருமுறை தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டாள். நிஜம்தான்.
நிஜம்மாவா?
ஆமா, மொதல்ல வெண்ணெய் கொடு என்று வாங்கி வாயில் போட்டுக் கொண்டான்.
ஆனா ஒரு விஷயம்.
என்ன?
நீ முதல்ல அண்ணாவுக்கு தேச்சுவிடு. அவனுக்கப்றமா எனக்கு தேச்சுவிடு. சரியா?
முதலாவது இரண்டாவதாவது, எப்படியோ இவன் சமர்த்தாய் சரியென்றாலே போதாதா?
சரி கண்ணா..
மாலினி, மணையும், எண்ணெய்யும் கொண்டா
கண்ணனது எண்ணம் மாறுவதற்குள் வேலையை முடிக்கவேண்டுமே..
கண்ணன் நேராகப் போய், பலராமனைக் கையோடு பிடித்துக்கொண்டு வந்தான்.
அவனுக்கும் ஒரு உருண்டை வெண்ணெய்யை வாயில் அடைத்தாள் யசோதா.
பக்கத்திலிருந்த பணிப்பெண்ணை
கௌரி கல்யாணம் பாடடி என்று ஏவினாள்.
பலராமனை மணையில் உட்காரவைத்து,
மஞ்சள் பொடி, மிளகு, சிறிது பருப்பு, இஞ்சி எல்லாம் போட்டு நன்கு காய்ச்சிய நல்லெண்ணெய்யை ஒரு கை எடுத்து பலராமன் தலையில் வைத்தாள் யசோதை.
என்ன நடக்கிறதென்று ஒரு கணம் பலராமன் யோசிப்பதற்குள் தாயும் பிள்ளையுமாய் அவன் தலையில் எண்ணெய்யை வைத்து விட்டார்கள். பலராமன் திமிறி ஓட முயற்சிக்க, ரோஹிணி அழுத்தினாள்.
கண்ணன் அவனைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு,
அம்மா, நான் இதோ வரேன்
என்று ஓடினான்.
மலங்க மலங்க விழித்துக்கொண்டு, ஓடும் கண்ணனைப் பார்த்துக் கொண்டிருந்தான் பலராமன்.
யாருமே கண்ணனிடம் சொல்லவில்லையென்றாலும், கண்ணனுக்குத் தெரியாமல் ஏதேனும் நடந்து விட முடியுமா?
நேராக ஓடிச்சென்று யமுனைக்கரையை அடைந்தான்.
இடுப்பிலிருந்த வேஷ்டியை நன்கு இறுக்கி மூலக்கச்சமாகக் கட்டிக்கொண்டான். மேல் வஸ்திரத்தை இறுக்கினான்.
யமுனையில் ஒரு மடு இருந்தது. அதன் கரையிலொரு கடம்ப மரம் இருந்தது.
ஒரே தாவலில் மரத்தின் மீதேறி உச்சிக்குச் சென்றான். மரத்தின் உச்சியில் நின்று முழு மடுவையும், அதன் கரைப் பகுதி முழுவதையும் நோட்டம் விட்டான்.
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப்போலத் தலைகீழாக மடுவினுள் குதித்தான் கண்ணன்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment