ப்ருந்தவனமே உன் மனமே – 26

குழலூதும் அழகு

நதிகளின் தலைவன் சமுத்திர ராஜன் ஆவான். சூரியனின் மகளான யமுனை யமதர்மராஜனின் சகோதரியாவாள். இறைவனை அடையும் பொருட்டு, காளிந்தி என்னும் பெண்ணுருவெடுத்து பின்னாளில் அவனது அஷ்ட மகிஷிகளுள் ஒருத்தியாகவும் ஆகப்போகிறவள்தான். கண்ணனின் குழந்தைப் பருவத்தை அனுபவிப்பதற்காக நதியாக மாறி பூமிக்கு வந்து ஸ்ரீவனம் வழியாக ஓடிக்கொண்டிருக்கிறாள். யமுனோத்ரியிலிருந்து துவங்கி கண்ணனுக்காகவென்று ஏராளமான மலர்களை சேகரித்துக் கொண்டுவருவாள். 

சாதரணமாக ஒரு மலர் தானாக மலர்ந்தாலே அதன் வாசனை மிகவும் ரம்யமானதாக இருக்கும். இதில் இப்போது வசந்த காலம் வந்துவிட்டது. பிருந்தாவனம் முழுதும், ஆயிரக்கணக்கான மரங்களும், கொடிகளும், செடிகளும் பூத்துக்குலுங்குகின்றன. போகும்போதும், வரும்போதும் கண்ணனின் மலர்க்கரம் அவற்றின் மீது படுவதனால் மேனி சிலிர்த்துக்கொள்கின்றன. ஸ்ரீவனம் முழுவதுமே புஷ்பங்களால் ஆன சுகந்தம் வீசிக்கொண்டிருக்கிறது.

கண்ணன், தலையில் ஒரு மிக அழகான மலர்க்கிரீடம், காதுகளில் நீல வர்ண கர்ணிகா புஷ்பம். தலையில் பெரிய மயில் பீலி, நெற்றியில் கஸ்தூரி திலகம், கழுத்தில் ஐந்து விதமான பூக்களை உடைய வனமாலை, இடுப்பில் அழகிய பீதாம்பரம், கால்களில் நூபுரம் தவழ, கையில் புல்லாங்குழலை எடுத்துக்கொண்டு யமுனைக் கரைக்கு மிகவும் ஒயிலாக நடந்து வருவான். யமுனையின் கரையில் அவன் வழக்கமாய் ஒரு ஆலமத்தின் கிளையில் அமர்ந்துதான் குழலூதுவான். அவன் அமர்ந்து குழலூதும் மரம் என்பதால், அதை வம்சீவடம் என்றே குறிப்பிடுகின்றனர். அதன் கிளை மிக அழகாக, கண்ணன் அமர்வதற்கு வசதியாக,  யமுனையின் அருகே வளைந்து காணப்படும். 

கண்ணன் அந்த மரத்தின் கிளையில்  சென்று அமர்ந்தானானால் யமுனை மகிழ்ச்சி மேலிட துள்ளிக் குதித்துக்கொண்டு அவன் பாதங்களை வருடிக்கொடுப்பாள். அவனும் பாதங்களால் நீரை அளைந்துகொண்டே யமுனை, அதில் விளையாடும் அன்னம் முதலிய பறவைகளின் அழகை ரசிப்பான். மீன்களும் துள்ளி துள்ளி அவன் பாதங்களைத் தொட்டு முத்தமிட்டு விளையாடும். தான் சேகரித்துக் கொண்டு வரும் புஷ்பங்களை வரிசையாக அவன் பாதங்களில் சேர்ப்பாள் யமுனை. கண்ணனின் பாதங்களில் பட்ட புஷ்பங்களை, பிரசாதமாக எடுத்துக்கொண்டு தலைவனான சமுத்திர ராஜனிடம் சேர்ப்பாள். 

வனமாலை என்பது ஐந்து வகயான பூக்களைக் கொண்ட மாலையாகும். நீரில் மலர்வது, செடியில் மலர்வது, கொடியில் மலர்வது, மரத்தில் மலர்வது, மற்றும் வாசனையுள்ள இலைகள் ஆகிய ஐந்து வகையான பூகளைக்கொண்டு அழகாகத் தொடுக்கப்படுவதே வனமாலை. 

கண்ணன் வம்சீவடத்தில் அமர்ந்து குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான் என்றால், பிருந்தாவனம் ஸ்தம்பித்துப் போகும். மாடுகளும் கன்றுகளும் அசை மறந்து கேட்கும். மான்கள், மயில்கள், சிங்கம், புலி, அத்தனை மிருகங்களும் வேற்றுமை பாராது கண்ணனின் ஸந்நிதியில் கூடி அமர்ந்து கச்சேரி கேட்கும். பறவைகளால் சத்தமிடாமல் இருக்கவே இயலாது. ஆனால் அப்படிப்பட்ட இயல்புடைய பறவைகளும் தலையைக் கவிழ்த்துக்கொண்டு அமைதியாய் சிலைபோல் மரக்கிளைகளில் அமர்ந்திருப்பதைப் பார்த்தால், முனிவர்கள்தான் அவ்வுருவில் வந்தமர்ந்து கேட்கின்றனரோ என்று ஐயமேற்படுகிறது. 

வானின் வழி செல்லும் கந்தர்வர்கள் மிக அழகாகப் பாடும் சாமர்த்தியம் உள்ளவர்கள். அவர்களும், கண்ணனின் குழலிசையில் தன்னை மறந்து, போக்கொழிந்து, உடைகள் நழுவுவதையும் அறியாமல் சிலைபோல் நின்று கேட்கின்றனர். 

மிருகங்கள் மற்றும், தேவர்களின் நிலைமை இப்படி என்றால், மனிதர்கள் எம்மாத்திரம்? அதிலும் கோபிகளின் நிலை? காற்றினில் மிதந்து வரும் வேணு கீதத்தினால், ஒருவருக்கும் வீடுகளில் ஒரு வேலையும் ஓடாது. கல்லையும் கரைக்கும் அவனது மதுர கீதத்தில் காலச் சக்கரமே நின்று விடும். அத்தனை பெரும், நிலை மறந்து, செய்யும் செயல் மறந்து காதுகளில் உயிரை வைத்துக்கொண்டு, விழி அசைவின்றி அவனது அமுதக் குழலிசையைக் கேட்க மட்டுமே இயலும். 

#மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37