உறங்கும் முன் - 30

குட்டிக் கண்ணனின் கோபமும் பயமும்

அடுப்பில் பால் காய்ந்துகொண்டிருந்தது.  பொங்க விடாமல் சுண்டக் காய்ச்சி, ஏலக்காய், குங்குமப்பூ எல்லாம் போட்டு உறங்கும் முன் குழந்தைக்குக் கொடுத்தால் நன்கு உறங்குவான்.

கண்ணனுக்குப் பாலூட்டும்போது, அவனது கால் விரல்களை சொடக்கெடுத்து, முதுகைத்தடவி, குழலில் கைவிட்டு சிடுக்கெடுத்து கோதிக்கோதி விட்டாள். அடுப்பில் பொங்கிவிடும்போல்  மேலே வரும் நேரம், வாசனையை நுகர்ந்து யசோதா பணிப்பெண்ணை அழைத்தாள். யாரும் அருகில் இல்லை போலும். பதில் வராது போகவே, பால் குடித்துக் கொண்டிருந்த கண்ணனை சட்டென்று வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு அடுப்பை அணைக்க விரைந்தாள்.

வந்ததே கோபம் கண்ணனுக்கு..
அம்மா...

இருடா இதோ அடுப்பை அணைச்சுட்டு  வரேன்..
குரல் மட்டும் வந்தது.

என்னைவிட அடுப்பிலிருக்கும் பால் முக்கியமாப் போச்சோ...

சுற்றிமுற்றிப் பார்த்தான். ஒரு மத்து கிடைத்தது அவன் கையில்.

முற்றத்திற்கு வந்து, அடுக்கடுக்காய் அடுக்கி வைத்திருந்த நூற்றுக்கணக்கான பால், தயிர், மோர்ப் பானைகளை அவன் கையிலிருந்த மத்து பதம் பார்த்தது. வெண்மை நிற ஆறு ஓட ஆரம்பித்தது. கடைசியாய் வெண்ணெய்ப் பானையைக் கையிலெடுத்தான். வெண்ணெய்யைப் பார்த்ததும் போட்டுடைக்க மனம் வரவில்லை. அதை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியில் சென்றான்.
தோட்டத்தில் ஒரு உரல் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. லாவகமாய் ஒரே தாவலில் அதன் மேதேறி அமர்ந்து, வெண்ணெய்ப்பானையை அணைத்துக் கொண்டான். குரங்கு ஓடி வந்தது. தான் எடுத்து நக்கியதோடு, குரங்குக்கும் இந்தா நீயும் சாப்பிடு என்று அதன் முகத்தில் அப்பினான்...

யசோதா அடுப்பை அணைத்துப் பாலை இறக்கி வைத்துவிட்டு நிதானமாக வந்தால், முற்றத்திலொரு வெண்மைநிற ஆறு ஓடிக் கொண்டிருந்தது. 
ஒருபுறம் கோவத்தைப் பாரு என்று நெகிழ்ந்தாலும், இவ்வளவு கோபம் ஆகாதென்று கவலைப் பட்டாள். இன்னிக்கு எப்படியாவது இந்தப் பயலுக்கு புத்தி சொல்லணும். என்ன செய்யறேன் பாரென்று ஏய், எல்லாரும் கண்ணன் எங்கன்னு பாருங்கடி என்றாள்.

ஒருத்தி வந்து கண்ணன் தோட்டத்திலிருக்கான்  என்றதும் பிடி அவனை என்று விரைந்தாள்.

அம்மா வரும் வேகத்தைப் பார்த்து மாட்டினால் அவ்வளவுதான் என நினைத்து, உரலிலிருந்து ஜல்லென்று குதித்து ஓடத் துவங்கினான் ஸ்வாமி.
எல்லோரும் துரத்த சுற்றிச் சுற்றி ஓடினான்.

துரத்தினால் பிடிபடும் ஸ்வாமியா அவன்?

முடியலடா கண்ணா... ஏன்டா இப்படி பண்ற..என்று கேட்டு மூச்சிரைக்க ஒரு கல்லின் மீது அமர்ந்தாள் யசோதா.

முடியவில்லை என்று சரணடைந்தால் அக்கணமே ஓடி வரும் ஸ்வாமியாயிற்றே.. வந்துவிட்டான்.

அம்மா என்னாச்சும்மா

சட்டென்று அவனைப் பிடித்தாள் யசோதா.

கண்ணா நாளுக்கு நாள் உன் கொட்டம் ஜாஸ்தியாயிட்டே போறது. இன்னிக்கு உனக்கு தண்டனைதான். உன்ன கட்டிப் போடறேன் பாரு..

பிடிபட்ட கண்ணன் பயப்பட வேண்டுமே. பகவானுக்கேது பயம்? அவன் எல்லோருக்கும்  அபயம் தருபவனாயிற்றே..
என்ன செய்யலாம்?
பயத்திற்கென்று ஒரு அதிதேவதை உண்டல்லவா? அதை மானசீகமாக அழைக்க, அது பகவானைப் பார்த்து பயந்துகொண்டே தொலைவில் வந்து நின்றது. அது பயப்படுவதைப் பார்த்துத் தானும் பயப்படுவதுபோல் நடித்தானாம்.

யசோதா கண்ணனை உரலில் கட்ட எத்தனித்தாள். ஒரு புறம் வேணாம்மா வேணாம்மா என்று பயந்துபோய் அழும் கண்ணனைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தாலும், இவனுக்கொரு சிறு தண்டனையாவது கொடுத்தால்தான் படுத்தாமல் இருப்பான். சிறிது நேரம் கட்டிப் போட்ட மாதிரி போட்டுவிட்டு அவிழ்த்துவிடலாம் என்று நினைத்தாள்.

பணிப்பெண்ணைப் பார்க்க அவள் வேணாம்மா பாவம்மா என்றபடி கயிற்றைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
கண்ணன் அவளைப் பார்க்க அவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது.
கயிற்றை கண்ணனின் வயிற்றைச் சுற்றி முடிச்சு போடப் போனால், அண்டம் தாங்கும் வயிறு, ஒரு முழம் கயிற்றிலடங்குமா?
கயிறு பத்தல. இன்னொண்ணு கொண்டு வாடி என, வந்த கயிற்றைச் சேர்த்து முடிச்சுப் போட்டு, மறுபடி கட்ட கயிறு போதாமல் ஆயிற்று. வரிசையாக வீட்டிலுள்ள எல்லா கயிறுகளும் வந்துவிட்டன.  குட்டிக் கண்ணனின் வயிற்றை ஒரு சுற்றுச் சுற்றமுடியவில்லை.

 என்னடா கண்ணா இது,

 மூச்சு வாங்கிற்று யசோதாவிற்கு. 
அம்மாவைப் பார்த்துப் பரிதாபப்பட்ட கண்ணன் 
ஊம் ஊம் என்று அழுதுகொண்டே 
இப்ப பாரும்மா 

என்று சற்று வயிற்றை எக்கிக் காட்டினான். 
முடிச்சு போட்டேவிட்டாளே இந்த யசோதை.
யோகிகளாலும் முனிவர்களாலும் கட்ட முடியாத, எச்சில் படாத அந்த எட்டாக்கனியை கயிற்றால் கட்டிய யசோதையின் பாக்யத்தை என்னென்று சொல்ல...
இரவு முழுதும் கட்டுப்பட்டு நிற்கவேண்டாம் நம் கண்ணன். 
சிறிது நேரம் கழித்து கட்டை அவிழ்த்து விட்டாளென்று முடித்துக் கொள்ளலாம். 
கட்டவிழ்த்த லீலையை நாளை விரிவாகப் பார்ப்போம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37