உறங்கும் முன் - 31
உபநிஷத் அர்த்தம் உலூகலே நிபத்தம்
(உரலில் கட்டுண்ட ப்ரம்மம்)
யசோதா கட்டிப்போட்டுவிட்டுச் சென்றபின், எல்லாரும் கண்ணனை விடுவிக்கச் சொல்லிக் கெஞ்சுவதற்காக அவள் பின்னால் சென்றுவிட்டனர். பலராமனும் சிறுவர்களும்கூடத் தொலைவிலிருந்தனர். திடீரென சடசடசடவென பெரிய ஓசை கேட்டது. மாளிகையே இடிந்துவிட்டதோவென எல்லாரும் நடுநடுங்கிப் போயினர். யசோதா தலைதெறிக்க ஓடிவந்து தோட்டத்தில் கண்ணனைத் தேடினாள். கண்ணனையும் காணவில்லை, கட்டிப்போட்ட உரலுமில்லை. யசோதா கண்ணா கண்ணா என்று அரற்றிக்கொண்டு மூர்ச்சையாகி விழுந்தாள்.
எங்கே நமது கண்ணன்?
அதோ சாய்ந்து விழுந்திருக்கும் இரட்டை மருதமரங்களுக்கிடையில் நீல ஓளியாய் மின்னுகிறானே..
மரங்கள் எப்படி விழுந்தன? பல்லாண்டுகளாக ஓங்கி நெடிதுயர்ந்து வளர்ந்து நின்ற மரங்கள் விழுவானேன்?
சிறுவர்கள் ஓடிவந்து கண்ணனைப் பார்த்தனர். அதற்குள் யசோதை மூர்ச்சை தெளிந்து வந்து முடிச்சை அவிழ்த்து விட்டுக் கண்ணைத் தூக்கி எடுத்து அடி பட்டிருக்கிறதா என்று பார்த்தாள்.
கட்டிப் போட்டாக்கூட சும்மா இருக்க மாட்டியா, உரலை இழுத்துக்கிட்டு இங்க எதுக்கு வந்த?
என்று கேட்டுக்கொண்டே இடுப்பில் வைத்துக்கொண்டு முத்தமிட்டு உச்சி மோந்தாள்.
சிறுவர்களிடம் ரோஹிணி கேட்டாள், ஏண்டா நீங்கல்லாம் தோட்டத்திலதானே இருந்தீங்க. கண்ணனைப் பாத்துக்கக்கூடாதா
ஒருவன் சொன்னான்,
இல்லம்மா நாங்க திரும்பிப் பாக்கறத்துக்குள்ள நின்னுட்டிருந்த உரலை சாய்ச்சுட்டான். அது குடுகுடுன்னு ஓட ஆரம்பிச்சுட்டது. நாங்க ஓடிவந்து பிடிக்கறதுக்குள்ள மரத்துக்கு நடுவில உரல் மாட்டிக்கிச்சு. கண்ணன் கயத்தை இழுத்தானா, மரம் ரெண்டும் விழுந்துட்டது. ஆனா, மரத்துள்ளேர்ந்து ரெண்டு பேர் சாமி மாதிரி வந்து கண்ணனோட ஏதோ பேசினாங்க. நாங்க கிட்ட போனதும் காணாப் போயிட்டாங்க.
இதைக் கேட்டதும் யசோதை அதிர்ந்தாள். ஏற்கனவே பாலாரிஷ்டம் போல் சிறு குழந்தையிலிருந்தே கண்ணனுக்கு ஆபத்துகள் அதிகம். இப்போது இவ்வளவு பெரிய மரங்களே விழுந்துவிட்டன. என்ன தெய்வ குற்றமோ என பயந்து கண்ணனுக்கு கோதூளி ஸ்நானம் செய்வித்து, பசுவின் கால் குளம்பு மண்ணால், த்வாதச நாமங்கள் கொண்டு ரக்ஷை செய்வித்து, வெண்ணெய் உண்ணும் வாயில் சிறிது பஞ்சகவ்யம் கொடுத்தாள். எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கண்ணன் பஞ்சகவ்யத்திற்கு முகம் சுளித்தான். பிறகு, வாய்க்குள் விரலைப் போட்டுக்கொண்டு, தாயின் தோளில் முகத்தைப் புதைத்துக்கொண்டான்.
மரத்திலிருந்து வெளி வந்த இருவர் யார்? நாளை பார்ப்போம்
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment