உறங்கும் முன் - 32

உண்மையான ப்ரார்த்தனை

புல்லாய்ப் பிறவி வேணும், புல்லாகினும் நெடுநாள் நில்லாது, ஆதலால் கல்லாய்ப் பிறவி வேணும், ப்ருந்தாவனத்தில் ஒரு நாயாகவோ, கழுதையாகவோ, ஏதேனுமாகவோ ஆகவேண்டும் என்றெல்லாம்  மஹாத்மாக்கள் எல்லோரும் வேண்டி வேண்டிக் கேட்டு கொண்டிருக்க, ஒரு மஹரிஷியிடம் அபசாரப்பட்டு சுலபமாய் கோகுலத்தில் வந்து மரமாய் நின்று கொண்டார்கள் குபேரனின் புதல்வர்களான நளகூபரனும் மணிக்ரீவனும். நாரதரின் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே பகவானின் அளப்பரிய கருணையை சுலபமாய்ப் பெற்று அழியாப் புகழும் பெற்றுவிடுகின்றனர். துருவன் ப்ரஹ்லாதன், அம்பரீஷன், வால்மீகி, வ்யாசர் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. 

உரலை இழுத்துக்கொண்டு மரத்தை நோக்கி உருட்டிக்கொண்டு கண்ணன் வருவதைப் பார்த்ததும் இருவரும் புறப்படத் தயாராகினர். ஒரு கணம் விடாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பாக்யம் பெற்றிருந்தனரே..

உரலை இரண்டு மரங்களுக்கும் நடுவே செலுத்தினான் கண்ணன். அது நன்றாய்ச் சிக்கிக்கொண்டது. இழுத்த இழுப்பிற்கு வரவில்லையென்றதும், பலமாக ஒரு இழு இழுத்தான். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல், மரத்தை முறித்துக் கொண்டு வந்த குபேர குமாரர்கள், கண்ணனை வணங்கி நாத்தழுதழுக்கப் ப்ரார்த்தனை செய்தனர். 

இறைவா எங்கள் நாக்கு எப்போதும் உன் குணங்களையும், புகழையும் பேசட்டும். காதுகளும் உங்கள் கதைகளைக் கேட்கட்டும். உனது சேவையே எப்போதும் செய்யவேண்டும். எப்போதும் உனது அங்கமாக இருக்கும் சாதுக்களை தரிசனம் செய்யவேண்டும் 

என்று வேண்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
பகவான் எப்போதுமே பெரிய விஷயங்களை சாதிக்கும்போது, அதன் வீரியத்தை கோபர்களின் கண்களிலிருந்து தன் மாயையால் மறைத்துவிடுகிறான்.

நந்தன் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்தான்..
கோகுலத்தில் வரிசையாக பூதனை, சகடாசுரன், த்ருணாவர்த்தன், இப்போது மரம் விழுந்தது எல்லாவற்றையும் நினைத்து எல்லோருக்கும் மனதில் ஒரு கலக்கம் இருந்தது. அந்த இடம் அவ்வளவு பாதுகாப்பாக இல்லையென்று எண்ணத் துவங்கியிருந்ந்தனர். எனவே, ஒருபுறம் கோவர்தன மலையையும், மறுபுறம் யமுனா நதியையும் இயற்கை அரணாகக் கொண்ட ப்ருந்தாவனத்திலுள்ள சமவெளிக்கு எல்லோரும் இடமாற்றம் செய்துகொள்ளலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

ப்ருந்தாவனத்திலுள்ள புல்வெளிகள் அவர்களது பசுக்களை மேய்க்கவும் வசதியாய் இருக்கும் என்று நினைத்தனர். இடமாற்றம் செய்யும் வேளை வந்ததாலோ என்னவோதான் பகவானும் குபேர குமாரர்களை அனுபவித்த வரை போதுமென்று கிளப்பி விட்டுவிட்டான் போலும்.

அவர்கள் ப்ருந்தாவனத்திற்கு இடமாற்றம் செய்யும் வரை நாமும் காத்திருந்து பின்னர் கண்ணனின் ப்ருந்தாவன லீலைகளை அனுபவிப்போம்.  அதுவரை அவன் நாமத்தைச் சொல்லிக்கொண்டிருப்போம்.

ஹரே ராம ஹரே ராம 
ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண 
க்ருஷ்ண க்ருஷ்ண
ஹரே ஹரே

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37