உறங்கும் முன் - 29

தோட்டத்தில் கண்ணனும் பலராமனுமாக விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் சென்றதும் பலராமன் வேகமாக உள்ளே வந்தான்.

அம்மா அம்மா இங்கே வாங்களேன்.. வந்து பாருங்க...

ஏன்? என்னாச்சுடா? ரோஹிணி கேட்டாள்.

கண்ணன் என்ன செய்யறான்னு நீங்களே வந்து பாருங்க..
யசோதையின் புடவைத் தலைப்பைப் பிடித்து இழுத்தான்.

கண்ணன் என்று கேட்டதும் ஏலார்ந்த கண்ணி பதட்டமடைந்தாள்.
என்னடா செய்யறான் அவன்?

மண்ணை அள்ளி முழுங்கறான். செய்யாதடான்னா கேக்க மாட்டேங்கறான். நீங்களே வந்து சொல்லுங்க
என்றான்.
எல்லாரும் தோட்டத்தை நோக்கி ஓடினர்,

வாய்க்குள்ளே ஒரு உலகம்

ஸ்ரீ ராமக்ருஷ்ண பரஹம்ஸர் மூன்று விஷயங்களைப் ப்ரதயக்ஷ ப்ரம்மம் என்று கூறுவாராம்.
கங்கா தீர்த்தம், 
பூரி ப்ரஸாதம், 
ப்ருந்தாவனத்தின் மண்.  

பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் ரக்ஷையாக விளங்கும் மண்,‌
பக்தர்களெல்லாம் உருளப்போகும் மண்,
 அக்ரூரர் சுவைத்த மண், கண்ணனின் அமுதக் கரம் பட்ட மண் எப்படிச் சுவைக்கிறதென்று அறிய அவனுக்கும் ஆசை போலும். 

கருப்பு நிறத்தில் மாவுபோல, ப்ரத்யேகமான நறுமணம்‌ கமழும் தனிச்சுவை கொண்டு திகழும்  மண்ணை அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு வெண்ணெயை சுவைப்பது போலவே அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டிருந்தான் மாயக்கண்ணன்.

கூட விளையாடிக்கொண்டிருந்த கோபச்சிறுவன் பார்த்துவிட்டு, பலராமனிடம் காட்டினான். எல்லாச் சிறுவர்களும் கண்ணனைச் சூழ்ந்து கொண்டனர். கண்ணன் சாப்பிடும் அழகைப் பார்த்து கருப்பு நிற வெண்ணெயென்றே நினைத்து இன்னொருவன் கையை நீட்டினான். அவன் கையைத் தட்டிவிட்ட பலராமன்,

வேணாம் கண்ணா, மண்ணு சாப்பிடக்கூடாது. உவ்வா வரும். அண்ணா சொன்னா கேளுடா.. 

என்று கெஞ்சிப் பார்த்தான். பிறகு

அம்மாகிட்ட சொல்வென்டா, வேணாம்டா மண்ண சாப்பிடாத 

என்றான். எதுவும் நமது கண்ணன் காதில் விழுந்தால்தானே.

இரு நான் போய் அம்மாவ கூட்டிட்டு வரேன் 

என்று ஓடினான்.

அவ்வளவுதான், சட்டென்று வாயைத் துடைத்துக் கொண்டு சமர்த்துப் பிள்ளையானான் கண்ணன்.

பலராமன் ஓடிச்சென்று ரோஹிணி, யசோதா இருவரையும் அழைத்து வந்தான்.

கண்ணா, என்ன வாயில? மண்ணு சாப்டியா?

இல்லம்மா...

ராமன் சொன்னானே..

அண்ணா பொய் சொல்றாம்மா

பலராமன் உடனே

இல்லம்மா.. நான் பாத்தேன். இவன் மண்ணத்தான் சாப்பிட்டான்..
வாயப் பாருங்கம்மா

இல்லம்மா, இது கண்ணன்

அதெல்லாம் சரி. நீ வாயக் காட்டு..

வேணாம்மா

காட்டுடா

அவன் கன்னத்தை அழுத்திப் பிடிக்க, கொவ்வைச் செவ்வாய் திறக்க, 
வாய்க்குள் யசோதா எட்டிப் பார்க்க, 

முத்துப் பல் வரிசைக்கு பதில் முத்து முத்தாய்க் கோள்கள் சுற்றும் ப்ரபஞ்சம் தெரிய,

கிரகங்களுக்கிடையே பூமி, பூமியில் ஒரு பாரதம், அதில் கோகுலம், நந்தன் அரண்மனை, அங்கொரு கண்ணனின் வாயைத்திறந்து யசோதா பார்த்துக் கொண்டிருக்க, அதற்குள் மற்றொரு ப்ரபஞ்சம் எனத் தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தது. 
ஒரு கணம் யசோதா நிலைகுலைந்து போனாள். 
அண்டத்தை வயிற்றில் சுமக்கும் கண்ணனின் வாய்க்குள் ப்ரபஞ்சம் தெரியாமல் வேறென்ன தெரியும்?

அவன் இல்லை என்றானே அது பொய்யோ என்றால், குழந்தை வாய்க்குள் தெரியக்கூடியதென்றால் ப்ரபஞ்சமே பொய்யன்றோ. அதிலிருக்கும் மண் மட்டும் மெய்யா?

பெரிய பெரிய  தத்வார்த்தங்களை சுலபமாய் விளக்குவது கண்ணன் கதையன்றோ?

முக்திக்காகக் கேட்பவர்  மருந்தைச் சுவைப்பவர். லீலையை லீலையென்றே கேட்பவர் கனிரசம் சுவைப்பாரன்றோ?

இங்கு நமது கண்ணனின் கதை சுவைக்கச் சுவைக்க இனித்திடும்  கனிரஸமாய் விளங்கும் மருந்து.

தலை சுற்றி மூர்ச்சையடைந்த யசோதையை, ரோஹிணி பிடித்து மூர்ச்சை தெளிவித்தாள்.

குழந்தை வாய்க்குள் கண்டதென்னவென்று யசோதை யோசிக்கத் துவங்கும் முன் தன் மாயச் சிரிப்புடன் 

அம்மா என்னாச்சும்மா உனக்கு 

என்று அழ ஆரம்பித்தான் கண்ணன். அப்படியே அவ்வளவும் மறக்கச்செய்தான்.

அழும் குழந்தையை 

ஒண்ணுமில்லடா நீ வா

 என்று மேலே ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டுத் தூக்கிக் கொண்டாள் யசோதா.

தன்னைக் கொஞ்சிக் குலாவும் பாக்யம் பெற்ற யசோதை,  பிள்ளையென்பதை மறந்து  இறைவனென வணங்குவதை  விரும்பவில்லை அந்த அன்பின் அடிமையான கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37