உறங்கும் முன் - 28

தினமும் புழுதியிலும் மண்ணிலும் விளையாடிவிட்டு, எங்கெங்கோ சென்று வயிறு நிறைய பால் தயிர் வெண்ணெய் பக்ஷணங்கள் என்று ஒன்றுவிடாமல் உண்டுவிட்டு மாலை வேளையில் திரும்பும் கண்ணனை சாப்பிட வைப்பது யசோதைக்குப் பெரும் சவால். தினமும் ஒரு புதிய யுக்தியைக் கண்டுபிடித்து, அவனை ஒரு வேளையாவது வீட்டில் சாப்பிட வைக்க வேண்டுமென மல்லுக்கு கட்டிக்கொண்டிருக்கிறாள்.

அம்புலி மாமா

 வெளியில் சென்று விளையாடிவிட்டுப் புழுதியோடு வந்த கண்ணனை குளிக்க அழைத்தாள்‌ யசோதா. 

அம்மா எதுக்கு குளிக்கணும்?

இப்பயே அழகாதானே இருக்கேன்?

அதெல்லாம் நீ எப்பவும் அழகுதான் வா. ஒரே தூசி. அரிப்பு வரும் 

என்று அழைத்துச் சென்று ஸ்நானம் செய்வித்து அலங்காரம் செய்வித்தாள்.

சாப்பிடலாமா? என்று கேட்க, 
அம்மா, புதுக் கதை சொல்லுங்க என்றான்.

சரி வா, என்று காற்றாட, மாடியில்  நிலாமுற்றம் அழைத்துச் சென்றாள்.

வானத்தில் நட்சத்திரங்களுக்கு நடுவே நிலவு ப்ரகாசித்துக் கொண்டிருந்தது.

அம்மா அது என்ன?

அது நிலாடா கண்ணா.

நிலாவுக்கு கண்ணனின் அழகு முகம்  பார்த்து வெட்கம் வந்ததுபோல் மேகத்துள் மறைந்துகொண்டு எட்டிப் பார்த்தது.

நிலான்னா?

அம்புலி மாமா, சந்தா மாமா...

மாமாவா? உருண்டையா இருக்கு? உனக்கு இதுகூடத் தெரியலயா? அது வெண்ணெய்மா...

சரி ஒரு வாய் சாப்பிடு...

அம்மா அந்த வெண்ணெய் உருண்டையை என் கைல தா, பாத்துட்டே சமத்தா சாதம் சாப்பிடுவேன்.

அது வெண்ணெயில்ல கண்ணா, அது சந்தா மாமா...மேல இருக்கும்.. பிடிக்க முடியாது. நீ சாப்பிடு. நான் வேற வெண்ணெய் தரேன். 

அம்மா, அது எப்படி மாமாவாகும்?

அதுவா, ஒரு சமயம் தேவர்களுக்கும்...

அம்மா.. தேவர்கள்னா என்ன?

அதுவா உம்மாச்சி..
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும்....

அம்மா அசுரர்னா என்ன?

அசுரர்னா பூச்சாண்டிடா...

உம்மாச்சிக்கும் பூச்சாண்டிக்கும் சண்டை வந்தது..

உம்...

சாதம் உள்ளே போக ஆரம்பித்தது..

அப்ப பாற்கடல்னு ஒரு கடல்ல...

அம்மா, பாற்கடல்னா என்ன?

நிறைய பால் இருக்கும்டா..

எவ்ளோ பால்மா.. இவ்ளோவா? 
கையை விரித்துக் கேட்டான் குழந்தை.

இல்லடா.. யமுனா நதி பாத்திருக்கல்ல...

ஆமா

அது நிறைய தண்ணி இருக்கா..

ஆமா..

அதைவிட நிறைய தண்ணிக்கு பதிலா பாலா இருக்கும்..

அம்மா.. நீ ஏம்மா என்ன அங்கல்லாம் கூட்டிண்டே போகமாட்டேங்கற? 

உதட்டைப் பிதுக்கி அழுவான் போலிருந்தது...

அது கதைடா... நாம் அப்றமா போலாம்.. இப்ப கேளு..

உம்...

அந்த கடல்ல மந்தர மலைன்னு ஒரு மலைய

உம்...

மத்து மாதிரி போட்டு ...

உம்...

டடக் டடக்னு கடைஞ்சுண்டே வர...

உம்..

அதிலேர்ந்து மஹாலக்ஷ்மி உம்மாச்சி வந்தாங்க...

உம்...

அவங்க ஜகன்மாதா... எல்லாருக்கும் அம்மாதானே...

உம்...

பின்னாடியே இந்த நிலாவும் வந்தது..

உம்...

அம்மாவோட தம்பி மாமாதானே...

உம்..

அதனால எல்லாருக்கும் அம்மாவான மஹாலக்ஷ்மியோட தம்பி இந்த சந்திரன்

உம்..

எல்லாருக்கும் மாமா... சந்தா மாமா, அம்புலி மாமா ன்னு சொல்றது..

கவனமாகக் கதை கேட்ட கண்ணன் கேட்டான், 

அம்மா பாலைக் கடைஞ்சா வெண்ணெய்தானே வரும்?
நீ மாமா வந்தாருங்கற..
அதெல்லாமில்ல. அந்த வெண்ணெயைக் கைல இப்பவே தா.. என்றான்.

சாதம் காலியானபோதும், கேள்விக்கு பதிலின்றி செய்வதறியாது விழித்தாள்.
அந்தப் பக்கமாய் வந்த நந்தன் அவள் நிலைமையைப் பார்த்துச் சிரித்துவிட்டு, 

இதோ வரேன் இரு என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

ஒரு கண்ணாடியைக் கொண்டு வந்து நிலவு தெரியும்படி பிடித்து, கண்ணன் கையில் கொடுத்து, ஒரு கிண்ணம் வெண்ணெயும் கொடுத்ததும் குழந்தை மகிழ்வுற்றான்...
விட்டால் போதுமென்று யசோதா கண்ணனைக் கூட்டிக்கொண்டு நிலாமுற்றத்தை விட்டகன்றாள்.

# மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37