உறங்கும் முன் - 27
காலையிலிருந்து வெல்லப்பாகு வாசனையும், பக்ஷணங்கள் செய்யும் வாசனையும் வாசல் வரை வருகிறது. கணேஷ சதுர்த்திக்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறாள் யசோதா. கண்ணனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அங்குமிங்கும் ஓடி, எப்படியாவது ஏமாற்றி கொழுக்கட்டையை எடுக்கலாம் என்றால் யசோதாவோ,
பூஜை முடிஞ்சதும் உனக்கு நிறையத் தரேன் கண்ணா, அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு, என்று சொல்லிவிட்டாள்.
அம்மா எப்ப பூஜை ஆரம்பிக்கும்?
என்று அவளை நச்சரித்துக் கொண்டிருந்தான் குட்டிக் கண்ணன்.
நந்தபாலனும் சிவ பாலனும்
கணேச சதுர்த்திக்காக இனிப்புக்கொழுக்கட்டை, பருப்புக் கொழுக்கட்டை, மணிக் கொழுக்கட்டை, லட்டு, சுண்டல், பாயசம், வடை, இனிப்புகள் எல்லாம் தயார். பூஜைக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்தது.
பெரிய மண்ணாலான கணபதியை நன்றாய் அலங்கரித்துப் பூஜை ஆரம்பிக்கும் நேரம். ஸங்கல்பம் செய்து, மூர்த்தி த்யானம் வந்தது. எந்த தெய்வத்தைப் பூஜை செய்கிறோமோ, அந்த மூர்த்தியை சிறிது நேரம் த்யானம் செய்தபிறகு பூஜையைத் துவங்க வேண்டும்.
பூஜை செய்யும்போது குழந்தைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டால் போதும். குழந்தைகள் தானாகவே கற்றுக்கொள்ளும் இயல்புடையவை. சந்தேகங்களைத்தான் கேட்பார்கள். தொந்தரவென்று நினைத்து கோவிலுக்குச் செல்லும்போதோ, பூஜைகளின்போதோ, அவர்களை விட்டுவிடக்கூடாது.
காலையிலிருந்து தாயின் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டே சுற்றிக்கொண்டிருந்த கண்ணன், பூஜையின் போதும் அவளருகில் அமர்ந்தான். நம் வீட்டிலுள்ள தெய்வத்தை நாமே பூஜை செய்வது தான் தெய்வத்தை மகிழ்விக்கும்.
விநாயகரைத் த்யானம் செய்வதற்காகக் கண்ணை மூடினாள் யசோதா த்யானம் முடிந்து கண்ணைத் திறந்தால், பாதிக் கொழுக்கட்டைகளைக் காணவில்லை. திரும்பிக் கண்ணனைப் பார்த்தாள். நிச்சயம் இவன் வேலைதான்.
கண்ணா பூஜை முடிந்ததும் தருவேன்னு சொன்னெனே. ஏன் இப்படி பண்ணின?
தெய்வ குத்தமாயிடும்டா.
என்று கண்டித்துவிட்டு உள்ளே சென்று சிறிது நேரத்தில் மீண்டும் புதிதாகக் கொழுக்கட்டைகள் செய்து கொண்டுவந்தாள். மீண்டும் பூஜை துவங்கியது.
இந்த முறை ஆரம்பிக்கும் முன்னரே கண்ணனை எச்சரித்தாள் யசோதா.
கண்ணா பூஜை முடியற வரை எதையும் எடுத்து சாப்பிடக்கூடாது. சரியா?
சரிம்மா என்றது குழந்தை.
மறுபடி த்யானம் முடித்து கண்ணைத் திறந்தால் கொழுக்கட்டையைக் காணோம்.
இப்போது கோபம் வந்தது யசோதைக்கு.
கண்ணா இப்படி செய்யாதேன்னு எத்தனை தடவை சொல்றது? போடா.
என்று கடிந்து கொண்டு, மறுபடி சிறிது நேரத்தில் புதிய கொழுக்கட்டைகளைத் தயார் செய்தாள். இந்த முறை நந்தனை அழைத்துப் பூஜை செய்யச் சொல்லிவிட்டு, கண்ணனை மடியில் அமர்த்திக் கொண்டு கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
நந்தனும் யசோதாவும் மூர்த்தி த்யானம் செய்தனர். த்யானம் முடிந்து கண்ணைத் திறந்தால் கொழுக்கட்டைகளைக் காணவில்லை.
யசோதை துணுக்குற்றாள். நான்தான் கண்ணனை இறுக்கிப் பிடிச்சிண்டிருந்தேனே. பின்ன எப்படி கொழுக்கட்டை காணாப்போச்சு என்று விழித்தாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
மீண்டும் நான்காவது முறையாக கொழுக்கட்டைகள் செய்து கொண்டுவந்தாள். இந்த முறையும் நந்தனே பூஜை செய்தார். கண்ணனை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த யசோதா, த்யானத்தின்போது அரைக் கண்ணைத் திறந்து பார்த்தால்,
அங்கே....
பிள்ளையார் தனது தும்பிக்கையால் நந்தன் பிள்ளைக்கு கொழுக்கட்டைகளை ஊட்டிவிட்டுத் தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
ஒன்றும் நடவாததுபோல் கண்ணைத்திறந்த யசோதை பூஜையின் பலன் கிட்டிவிட்டதாய் மகிழ்ந்துபோய், கண்ணனுக்கு மேலும் இனிப்புகள் தந்தாள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment