உறங்கும் முன் - 26
கண்ணனைப் பற்றிய புகார்கள் யசோதையிடம் செல்லுபடியாவதில்லை. அவனோ எந்த நேரம் எப்படி வந்து வெண்ணெயை எப்படி எடுப்பான் என்று தெரியாது. இப்போதெல்லாம் புதிதாக ஒன்று செய்கிறான். எல்லாரும் இருக்கும் சமயமாக வந்து தன புல்லாங்குழலை எடுத்து ஊதுகிறான். இவன் சாய்ந்து நிற்கும் அழகு, பிஞ்சு விரல்களால் தடவிக் குழலை வாசிக்கும் அழகு, இசைக்கேற்ப அவனது குண்டலங்கள் காதில் ரகசியம் பேசும் அழகு, இவற்றில் அத்தனை பெரும் மயங்கி மயங்கி அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, வெண்ணெய்ப் பானையைத் தூக்கிக்கொண்டு ஓடிவிடுகிறான். அவன் ஓடியபின், சற்று நேரம் கழித்துத்தான் அனைவருக்கும் பிரக்ஞை வருகிறது. எல்லா நேரமும் விழிப்புடன் இருப்பது எப்படிச் சாத்தியமாகும்? என்னதான் செய்வார்கள்? பாவம் கோபியர்கள். கண்ணனோடு சமாதானம் பேசத் திட்டம் தீட்டினர்.
பசுக்களின் அன்பு
எவ்வளவு யோசித்தாலும் கோபிகளுக்கு கண்ணன் செய்யும் வெண்ணெய்க் களவிலிருந்து தப்பிக்க வழி ஒன்றும் புலப்படவில்லை. மிகவும் யோசித்தபின் ஒருவாறு முடிவுக்கு வந்தார்கள். நினைத்ததும் வருபவனாயிற்றே நமது கண்ணன், அவனைப் பற்றி இவ்வளவு யோசித்தால் வராமல் இருப்பானா? மனத்தைக் கொள்ளை கொள்ளும் குறுஞ்சிரிப்புடன், அந்தப்பக்கம் வந்தான். கோபியரின் இதயத்தில் குடியிருப்பவனுக்கு அவர்களது யோசனையும், திட்டமும் தெரியாதா என்ன?
இருப்பினும் ஒன்றுமறியாதவன் முகத்தை வைத்துக்கொண்டு, அவர்களைப் பார்த்தான்.
ஏய், அதோ பார், கண்ணனே வரான். அவனைக் கூப்பிட்டுப் பேசிடலாமா என்றாள் ஒரு கோபி.
ஆமாம் ஆமாம் கூப்பிடு என்று எல்லோரும் ஒரே குரலில் சொல்ல,
கண்ணா கண்ணா இங்க வாயேன்...
என்னையா மாமீ...
உன்னைத்தான்டா இங்க வா
மாமீ அம்மா சீக்கிரமா வீட்டுக்கு வரச் சொல்லியிருக்காங்க. எல்லாரும் சேர்ந்து எதுக்குக் கூப்பிடறீங்க. என்ன வேணும் சட்டுனு சொல்லுங்க
கண்ணா நீ தினமும் வெண்ணெய் திருட எங்க வீட்டுக்கெல்லாம் வரதானே..
வெண்ணெய்யா? நானா? நான் ராஜா வீட்டுப் பிள்ளை மாமி. எங்க வீட்டிலயே 5 லக்ஷம் பசு மாடு இருக்கு. நான் ஏன் உங்க வீட்டிலல்லாம் திருடப் போறேன்? நான் கேட்டாலே கூட நீங்க தருவீங்களே.
கண்ணா, இதெல்லாம் வீண் பேச்சு. நீ திடீர் திடீர்னு வந்து திருடிட்டுப் போறதால எங்களால ஒரு வேலையும் ஒழுங்கா செய்ய முடியல. பட்டணத்துல வியாபரமும் செய்யமுடியல.
அதுக்கு?
நாங்களே உனக்கு வெண்ணெய் கொடுத்துடறோம். நீ சொல்லாம கொள்ளாம வந்து திருட வேணாம்.
இது நல்லாயிருக்கே என்று மனத்தினுள் நினைத்துக்கொண்ட கண்ணன் எப்படியாம்? என்றன்.
அதாவது கண்ணா, ஒரு கால அட்டவணை போட்டுக்கலாம். நீ முதல்நாள் அதாவது ஞாயித்துக் கிழமை நாராயணன் தெருவுக்குப் போ. அன்னிக்கு யாரும் பால் கறக்க மாட்டோம், வெண்ணெய் வியாபாரமும் கிடையாது. அன்னிக்கு அந்தத் தெருவில இருக்கற அத்தனை வீட்டு பசுக்களோட பால், தயிர், வெண்ணெய் எல்லாம் உனக்குத்தான். நாங்க யாரும் எடுக்க மாட்டோம். அதுபோல திங்கக் கிழமை கேசவன் தெரு.
இதுபோல் எல்லா தெருக்காரங்களும் வாரத்தில் ஒரு நாள் பால், தயிர் வெண்ணெய்யை உனக்குக் கொடுத்துடறோம். ஆனால், மத்த நாளில் நீ அந்த தெருவுக்கு திருடப் போக்கூடாது. புரிஞ்சதா?
மிகவும் யோசிப்பது போல பாவலா செய்துவிட்டு, சரி மாமி. நீங்களே இவ்ளோ தூரம் விரும்பிக் கூப்பிடறதால வரேன். அட்டவணையைப் போட்டு குடுங்க. நான் அதே மாதிரி பண்றேன் என்றான்.
அவர்கள் முறைக்க, சிரித்துக்கொண்டே ஓடிப்போனான்.
ஞாயிற்றுக்கிழமை வந்தது. நாரயணன் தெருவில் யாரும் பால் கறக்கவில்லை. மாடுகள் அனைத்தும் கண்ணனைச் சூழ்ந்துகொண்டன.கண்ணன் எல்லா பசுக்களின் பாலையும் வாய் வைத்து உறிஞ்சிக் குடித்து அவற்றிற்குப் பேரானந்தத்தை வழங்கினான்.
திங்கள் கிழமை கேசவன் தெருவுக்குப் போனான். கோபிகளுக்கு ஒரே சந்தோஷம். ஒரு நாள் பால் போனால் போகிறதென்று விட்டுவிடலாம். மற்ற ஆறு நாட்களும் அத்தனை பாலும் நமக்குத்தான் என்று மகிழ்ந்தனர்.
கண்ணனின் வரவை அந்தந்த தெருக்காரர்கள் எதிர்பார்த்தும் இருந்தனர். இவ்வளவு அமர்க்களத்தில் நாள் முழுதும் அதே தெருவில் சுற்றுவான், அவனைப் பார்க்கலாம் என்ற ரகசியக் களிப்பு வேறு. முதல் நாள் எல்லாம் நன்றாகவே நடந்ததேறியது. திங்கள் கிழமையன்று கண்ணன் வேறு தெருவுக்குப் போனான். ஆனால்...
அன்று நாராயணன் தெருவிலுள்ள எந்தப் பசுவும் ஒரு சொட்டுப் பால்கூடக் கறக்கவில்லை. செவ்வாய், புதன், வரிசையாக சனிக்கிழமை வரை அதே நிலைதான். மறுபடி ஞாயிறு வந்ததும் நாராயணன் தெருவிலுள்ள அனைத்து மாடுகளும் ஆறு நாள் பாலையும் சேர்த்துக் கண்ணனுக்காகக் கறந்து தள்ளிவிட்டன.
இதே கதைதான் மற்ற தெருக்களிலுள்ள பசுக்களுக்கும்.
அத்தனை கோபியருக்கும் ஒரே அதிர்ச்சி.
கோகுலத்திலுள்ள அத்தனை பசுக்களும் கண்ணனுக்காகவே வாழ்ந்தன. அவன் குடிப்பதற்காகவே பால் கறந்தன. போனால் போகிறதென்று கண்ணன் குடித்த மிச்சப் பாலை மற்றவருக்குக் கொடுத்தன என்றால், கண்ணன் மேலுள்ள அவற்றின் அன்பை என்னென்று சொல்ல?
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment