உறங்கும் முன் - 25

இன்றும் இரண்டாம் ஜாமத்திலேயே ஒரு கோபியின் வீட்டில் சென்று சேவல் போலக் கூவிவிட்டு வந்துவிட்டான் வெண்னெய்க் கள்ளன். அவள் பாவம் நள்ளிரவென்று உணராமல் எழுந்து, விடிந்துவிட்டதென நினைத்துக்கொண்டு, தயிர்ப்பானை மேல் வெண்ணெய்ப் பானையைச் சும்மாடு வைத்து அடுக்கிக்கொண்டு, யமுனைக் கரைக்கு நடந்தாள். அங்குதான் எல்லா கோபிகளும் கூடி, அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து மதுரா வரை பேசிக்கொண்டு நடந்து செல்வர். அங்கிருந்து மதுராவிற்கு கிட்டத்தட்ட பத்து மைல் தொலைவு. கோட்டை வரை ஒன்றாகச்  சென்றபின் பிரிந்து தெருக்களுக்கு வியாபாரத்திற்குச் செல்வர். நமது கோபி நதிக் கரையில் சென்று காத்துக் காத்துப் பார்த்தாள். பொழுது விடியவுமில்லை. யாரும் வரவுமில்லை.

மண்ணா? வெண்ணெயா? 

விடியற்காலை என்று நினைத்துக் கொண்டு நள்ளிரவிலேயே நதிக் கரையில் சென்று மற்றவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் சுபாஷிணி. விடிவெள்ளியும் வரவில்லை என்றதும், இன்னும் விடியவில்லையோ என்று சந்தேகம் வந்தது. யாரையும் காணாததால் பயம் வந்தது. பயம் வந்தால் கோகுலவாசிகளின் நாவில் வருவது கோபாலனின் நாமம்தான். நாமத்தைச் சொல்லிக்கொண்டு பானைகளை இறக்கி வைத்தாள்.
 
பகல் முழுவதும் அலைச்சலும் வேலைகளும் இருந்தன. நள்ளிரவில் எழுந்துவிட்டாள். எனவே உறக்கம் கண்களை  அழுத்த, எல்லாரும் வந்தபின் சேர்ந்து போகலாம், அதுவரை உறங்கலாம் என்று பானைகளைத் தலைமாட்டில் வைத்துவிட்டு, கோபாலனின் நாமத்தைச் சொல்லிக்கொண்டு, யமுனையின் கரையிலுள்ள மணலில் உறங்கிப்போனாள்

நமது கதாநாயகனோ, அவள் உறங்கும் வரை காத்திருந்து, பின் தயிர், வெண்ணெய் இரண்டையும் ருசித்துச் சாப்பிட்டான். பின்னர் சமர்த்தாக இரண்டு பானைகளிலும் யமுனை மணலை அடைத்து நிரப்பினான். முன் இருந்ததுபோலவே வைத்துவிட்டு ஓடிவிட்டான்.

பொழுது புலரும் தருவாயில் வந்த மற்ற கோபிகள், இவள் துங்குவதைப் பார்த்துவிட்டு, 

ஏய், சுபா, என்ன இங்க வந்து தூங்கற? எழுந்திரு

 என்று எழுப்பினர்.
பேசிக்கொண்டே மதுரை வந்து விட்டார்கள்.
எல்லோரும் விற்பனைக்காகப் பிரிந்து சென்றனர்.
கோகுலத்திலிருந்து தயிர் பால் விற்க வருபவர்கள் தனியாகத் தெரிவார்கள். அவர்களைப் பார்த்தால் கண்ணனைப் பார்த்த நிம்மதி ஏற்படும். அவர்கள் தயிரோ தயிர் என்று விற்பதில்லை. அவர்கள் கேசவா மாதவா கோவிந்தா என்று குரல் கொடுத்துக் கொண்டு வீதியில் செல்வார்கள். வாங்கும் பொருளோடு சேர்த்து கண்ணனின் லீலைகளையும் காதில் செலுத்திவிடுவர்.

நமது சுபா இன்று அக்ரூரர் மாளிகை வழியாக கேசவா மாதவா என்று கத்திக்கொண்டு சென்றாள். 
அவளது குரலைக் கேட்டதும் அக்ரூரர் மனைவியிடம் 
ஓடும்மா, கோகுலத்திலேர்ந்து வெண்ணெய் விக்கற கோபி வரா. போய்ப் பிடி. பேரம் பேசாம கேட்டதுக்கும் மேலயே குடுத்து, அவ கொண்டு வந்ததெல்லாம் அப்படியே வாங்கிடு. நான் இன்னிக்கு அதத்தான் சாப்பிடப்போறேன்.

உங்க கண்ணன் பைத்தியத்திற்கு அளவே இல்ல
 என்று சொல்லிக்கொண்டே இரண்டு பானைகளையும்‌ வாங்கிக் கொண்டாள் அவள். வேறு வேலையாய் இருந்த அக்ரூரர் வருவதற்குள் சிறிது எடுத்து நெய் காய்ச்சலாம் என்று பானையைத் திறந்தால் ஒரே கருப்பாக மண் இருந்தது. தயிருமில்லை. வெண்ணெயுமில்லை. கோபி ஏமாற்றிவிட்டாளோ என நினைத்து, அக்ரூரரைக் கூப்பிடுவதற்குள் அவர் வேகமாக வந்து பானையைத் திறந்து லபக் லபக்கென்று மண்ணை விழுங்க ஆரம்பித்தார். கண்ணன் தன் அமுதக் கரங்களால் தொட்டு நிரப்பிய மண்ணல்லவா? அதன் சுவையைக் கேட்க வேண்டுமா?

கருப்பாக இருக்கிறதே என்று கூட யோசிக்காமல் இரண்டு பானை மண்ணையும்  ஆசையோடு விழுங்கிய அக்ரூரரை வினோதமாகப் பார்த்துக்கொண்டேயிருந்தாள் அவர் மனைவி.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37